ஆளில்லா அரண்மனைகள் - செட்டிநாடு வீடுகள்
பேராசிரியர் நா. அருணாசலம்
அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி.

தமிழகத்தில் கம்பீரமும், கலை நேர்த்தியும், பாரம்பரியமும் ஆதிகாலத் தொழில்நுட்பங்களும் மிக்க மாளிகைகளைப் போல் உள்ள வீடுகளைக் கொண்டதுதான் சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள செட்டிநாடு என்கிற பகுதி ஆகும். குன்றக்குடியை மையமாகக் கொண்டு இந்தப் பகுதி அமைந்துள்ளது. சோழ நாட்டின் காவிரிப் பூம்பட்டின - பூம்புகாரை ஆழிப் பேரலை கடல் கொண்ட போது, ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் புலம் பெயர்ந்து பாண்டிய மன்னன் சௌந்திர பாண்டியன் காலத்தில் குன்றக்குடியைச் சுற்றிக் குடியேறி தங்களுக்கும் தன் தலைமுறைகளுக்கும் கட்டிய வீடுகளே, செட்டிநாடு வீடுகள் ஆகும்.
“ஆயிரம் ஜன்னல் வீடு, இது அன்பு வாழும் கூடு" என்கிறப் பாடலில் சொல்லப்பட்டது போல் ஒரு வீட்டை நீங்கள் கண்டதுண்டா?. அதனைக் காண நீங்கள் விரும்பினால் காரைக்குடிக்கு வாருங்கள். ஆயிரம் ஜன்னல் கொண்ட ஒரே ஒரு வீடு மட்டும் இங்கே இல்லை, இது போன்ற சர்வதேசத் தரத்திலான சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இந்தியாவில் செட்டிநாடுப் பகுதியில் மட்டுமே உள்ளது. செட்டிநாடு வீடுகள் என்பவை 96 கிராமங்களை உள்ளடக்கிய செட்டிநாடு என்றழைக்கப்படும் பகுதியாகும். காலத்தின் மாற்றத்தாலும், சமூகப் பொருளாதார சூழலாலும், நகரிய நாகரீக பெருக்கத்தாலும், 96 ஊர்கள் தற்போது 72 முதல் 75 ஊர்களாய் இணைந்தும் சுருங்கியும் தன்னை மாற்றிக் கொண்டு பாரம்பரியத்தையும் பெருமையையும் தாங்கிக் கொண்டு உயர்ந்து நிற்கிறது.
இந்தச் செட்டிநாட்டு வீடுகளின் கட்டிடக் கலை உலகப் புகழ்பெற்றவை. தாங்கள் இருக்கும் இடத்தைக் கோட்டைகள் போல வீடுகள் கட்டி, நகரத்தைப் போல நிர்மாணித்து வாழ்ந்ததால், இந்த வீடுகளின் மனிதர்களைச் சாதியம் என்கிற அடைவு இல்லாமல் நகரத்தார் என்று அனைவராலும் அழைக்கப்படுகின்றார்கள். 1920 களில் க்யூபிசம் பாணியின் தாக்கத்தால் ஐரோப்பாவில் தோன்றிய அலங்கார கலையை ‘ஆர்ட் டெகோ’ என்றழைக்கிறார்கள். பளிச்சிடும் வண்ணங்களில் சதுரங்களையும், கோணங்களையும் கட்டிடங்களில் சேர்ப்பதே இப்பாணியாகும். செட்டிநாடு வீடுகள் இவ்வடிவத்தின் தாக்கத்தையே பிரதிபலிக்கிறது. இக்கட்டிடங்களுக்கான மூலப்பொருட்கள், கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்தும், ஐரோப்பாவிலிருந்தும் இறக்குமதி செய்து கட்டியிருக்கிறார்கள். இவர்கள் இத்தாலியின் மார்பில் கற்கள், பெல்ஜியத்திலிருந்து ஜன்னல்களுக்கான கண்ணாடி , தூண்களுக்கு பர்மாவிலிருந்து தேக்கு, விக்டோரியன் நாற்காலிகள், ஐரோப்பா மற்றும் பர்மாவிலிருந்து சரவிளக்குகள், சமைக்கும் பாத்திரங்களை இந்தோனேசியா மற்றும் செகோஸ்லோவியா போன்ற இடங்களிலிருந்தும் இறக்குமதி செய்திருக்கிறார்கள். பல்வேறு நாட்டின் கலைச் சங்கமமாக திகழ்கிறது செட்டிநாடு கட்டிடக்கலை. இலங்கை, மலேஷியா, சிங்கப்பூர், பர்மா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் இவர்கள் வணிகம் செய்து, பொருள் ஈட்டி கொண்டு வந்து, இது போன்ற வீடுகளைத் தங்களின் பூர்விகத்தில் கட்டிக் கொண்டார்கள்.
|