தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டத்திலுள்ளது ஆதிச்சநல்லூர். இந்த ஊர்தான் உலக நாகரீகத்தின் தொட்டில். இந்தியாவில் முதன்முதலில் அகழாய்வு நடத்தப்பெற்ற இடம். சுமார் 144 வருடங்களுக்கு முன்பு ஜெர்மன் நகரிலிருந்து வந்த டாக்டர் ஜகோர் இங்குத் தோண்டியெடுத்த எலும்பு, மண்பாண்டம், முதுமக்கள் தாழி, வெண்கலம் உள்படப் பல பொருட்களை ஜெர்மன் நாட்டு பெர்லின் நகர் அருங்காட்சியகத்துக்குக் கொண்டு சென்று விட்டார். அவர் எந்த நாட்டுக்குச் சென்று அகழாய்வு செய்தாலும் அதை நூலாக்குவார். ஆனால் ஆதிச்சநல்லூரின் துரதிஷ்டம் நூல் ஆக்கப்படவில்லை. அதற்கு என்ன காரணமோ தெரியவில்லை. இவர் கொண்டு சென்ற நமது முன்னோர்களின் எலும்புக் கூடுகள் சாக்குப் பையில் அடைக்கப்பட்டு, பெர்லின் நகரில் ஏதோ ஒரு அருங்காட்சியகத்தில் அடைபட்டுக் கிடக்கிறது. அதை மீட்டெடுக்கவேண்டிய கடமை தமிழர்களுக்கு உள்ளது. இதற்கிடையில் ஆதிச்சநல்லூரில் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும், அது பெரிய அளவில் வெளியே தெரியவில்லை. அதன் பின் 1902 ல் இந்தியத் தொல்லியல் கழகம் சார்பில் அலெக்ஸாண்டர் இரியா செய்த ஆய்வில் நூற்றுக்கணக்கானப் பொருள்கள் எடுக்கப்பட்டன. அவை யாவும் மாட்டு வண்டிகளில் ஏற்றப்பட்டு, நெல்லையிலிருந்து ரயில் மூலம் சென்னைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கே அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது.

ஆதிச்சநல்லூர் அகழாய்விற்காக உயர்நீதி மன்றத்தில்
வழக்கு தொடுத்த முத்தாலங்குறிச்சு காமராசு
அதில் கிடைத்த பொருள்கள், தமிழனின் தொன்மையையும் அவன் சுகாதாரத்துக்குக் கொடுத்த முக்கியத்துவத்தையும் அறிவதுடன் நம்மையெல்லாம் மெய்சிலிர்க்க வைத்தது. இதற்கிடையில் 1920 ல் சிந்துச் சமவெளியில் ஆய்வு மேற்கொண்ட டாக்டர் பானர்ஜி, சிந்துச் சமவெளி நாகரீகத்துக்கும் முந்தைய நாகரீகம் தாமிரபரணிக் கரை நாகரீகம் என்றார். இது தமிழர்களின் புகழை உலக அரங்கில் நிலை நிறுத்தும் வண்ணம் சிறப்பான பதிவாகப் போற்றப்பட்டது. அதன் பிறகு, இந்த பதிவுகளையெல்லாம் சேர்த்து வைத்து சாத்தான் குளம் ராகவன் என்பவர், "ஆதித்த நல்லூரும் பொருநை வெளி நாகரீகமும்" என்ற நூலை வெளியிட்டார்.
ஆதிச்சநல்லூர் அகழாய்வில் தோண்டி எடுக்கப்பட்ட பொருட்கள்
(அரசு அருங்காட்சியகம், திருநெல்வேலி)
ஆதிச்சநல்லூர் அகழாய்வில் தோண்டி எடுக்கப்பட்ட நாணயங்கள்
2004ல் இந்தியத் தொல்லியல் துறை, டாக்டர் தியாக சத்திய மூர்த்தி தலைமையில் ஒரு அகழாய்வு மேற்கொண்டது. ஆனால் இந்த அகழாய்வு அறிக்கை 17 வருடங்களாகியும் வெளியே வரவில்லை. இது என் மனதுக்கு மிகப்பெரிய குறையாக இருந்தது. இதற்கிடையில் 2010 ஆம் ஆண்டு எனக்குக் கிடைத்த தகவல்களையெல்லாம் சேர்த்துக் குழந்தைகளுக்குக் கதை சொல்வது போல "ஆதிச்சநல்லூர் ஆய்வுகள்" என்றவொரு நூலை நான் எழுதினேன். காவ்யா பதிப்பகம் அந்த நூலை வெளியிட்டது. அதன் பிறகு யார் ஆதிச்சநல்லூர் வந்தாலும் அவர்களை அழைத்துக் கொண்டு போய்க் காட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். இதற்கிடையில் தூத்துக்குடி மாவட்டம் துவங்கி 25வது ஆண்டு விழாவை முன்னிட்டு ஆதிச்சநல்லூர் பரப்பு அருகில் உள்ள புளியங்குளத்தில் முதுமக்கள் தாழி தகவல் மையம் ஒன்றை ஆட்சியர் ஆஷிஷ் குமார் உருவாக்கினார். அழகிய முன் வளைவு அமைக்கப்பட்டது. சுற்றுப்புறச்சுவர், விளையாட்டு திடல், ஆற்றுக்குள் இறங்கப் படித்துறை, சிமெண்ட் ரோடு உள்படப் பல திட்டங்கள் சுமார் 50 லட்சம் செலவில் உருவாக்கப்பட்டது. ஆனால் இங்குக் கண்காட்சிக்கு எந்தவொரு பொருளும் வைக்காத காரணத்தினால் தகவல் மையம் அடைக்கப்பட்டு, பின்னர் அவ்விடமே பாழடைய ஆரம்பித்து விட்டது.

2004 அகழாய்வில் முதுமக்கள் தாழி
(மூடியில்லாமல் மற்றும் மூடியுடன்)
அந்த வேளையில் தினத்தந்தியில் கட்டுரை எழுத வந்த அமுதன் அவர்கள் “மண் மூடிய மகத்தான நாகரீகம்” என்ற தலைப்பில் தொடர் எழுதி அதை நூலாக்கினார். அதில் ஆதிச்சநல்லூர் புகழ் பாடிய பெருமக்கள் என என்னுடைய பெயரையும் சேர்த்து இருந்தார். அந்த அளவுக்கு நம்பிக்கை வைத்து இருக்கும் அன்பர்களுக்கு நான் என்ன நன்றிக் கடன் செய்யப்போகிறேன் என நினைத்து இருந்தேன். அந்த வேளையில் மதுரை உயர்நீதி மன்றக் கிளையில் என்னுடைய நண்பர் வழக்கறிஞர் டாக்டர் அழகுமணி மூலமாக நான் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தேன். அந்த வழக்கில், ஆதிச்சநல்லூர் 2004ல் நடந்த அகழாய்வு அறிக்கை நமக்குத் தரவேண்டும் என்றும், மீண்டும் இங்கு அகழாய்வு செய்ய வேண்டும் என்றும், ஆதிச்சநல்லூரில் உலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியம் ஒன்று அமைக்க வேண்டும் என்றும் மூன்று கோரிக்கைளை முன் வைத்தேன். தற்போது அந்த மூன்று கோரிக்கையையும் மத்திய மாநில அரசுகள் நிறைவேற்றிவிட்டன. அதோடு மட்டுமல்லாமல் வரலாற்று ஆசிரியர் மாணிக்கம் அவர்கள், தூத்துக்குடி மாவட்டம், சிவகளைப் பரம்பில் அகழாய்வுக்கு உகந்த பல இடங்கள் உள்ளன என மனு செய்து கொண்டே இருந்தார். நான் தொடுத்த வழக்கின் படி சிவகளை, கொற்கை ஆகிய இடங்களிலும் தற்போது அகாழ்ய்வு நடந்து வருகிறது.

கொற்கை துறைமுக முகப்புத் தோரண வாயில்
2500 வருடப் பழமை வாய்ந்த வன்னி மரம்
இதில் கொற்கை துறைமுகம், 2500 வருடங்களுக்குப் பாண்டிய மன்னரின் துறைமுகமாக இருந்துள்ளது. நாணயங்கள் அச்சடிக்கும் பாண்டிய மன்னரின் அக்கசாலை இங்குள்ளது. 2500 வருடம் பழமையான வன்னிமரம் ஒன்றும் இங்குள்ளது. இங்குள்ள அக்கசாலை விநாயகர் கோயிலில் நிறையக் கல்வெட்டுகள் உள்ளன. தற்போது சங்கு அறுக்கும் தொழிற்சாலை இங்குக் கண்டு பிடிக்கப்பட்டதால், இதுதான் தமிழர் இடைச்சங்கம் என உணர்த்தப்படுகிறது. "சங்கறுப்பது எங்கள் குலம் சங்கரனாருக்கு ஏது குலம்" என்று நக்கீரன் பேசினார். சங்கறுக்கும் இடம் கொற்கையில்தான் உள்ளது . கடைச்சங்கமான மதுரையில் சங்கறுக்கும் தொழில் இருக்க வாய்ப்பு இல்லை. அதே வேளையில் கொற்கை அருகே ஆத்தூர் பகுதியில் கீரனூர் என்ற ஒரு ஊர் உள்ளது. இது நக்கீரனைக் குறிக்கும் வகையில் உள்ளது. மேலும் இங்கு, பாண்டிய மன்னருக்குச் செங்கோல் கொடுத்த செங்கோல் மட ஆதினம் பெருங்குளத்தில் உள்ளது. பெருங்குளம் திருவழுதீஸ்வர் ஆலயத்தில் உள்ளே ஓரிடத்தில் திருவள்ளூர் சிலை ஒன்றுள்ளது. திருவள்ளுவர், திருக்குறளை அரங்கேற்றிய இடம் இந்த சிவன் கோயில் என்பர். பொதிகை மலையை இருப்பிடமாகக் கொண்ட அகத்தியப் பெருமான் இடைச்சங்கத்தில் இருந்ததற்கான சான்று உண்டு. தாமிரபரணியைத் தோற்றுவித்த அகத்தியப் பெருமான், தாமிரபரணி படுகையில் உள்ள கொற்கை தமிழ்ச்சங்கத்தில் இருப்பதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.
தூத்துக்குடி மாவட்டத்தினை பொறுத்தவரை தாமிரபரணி ஆற்றங்கரை நெடுகிலும் பழங்கால தமிழர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் பல இடங்களில் புதையுண்டு கிடக்கின்றன என்பதை 1902 ல் ஆய்வு செய்த அறிஞர் அலெக்ஸாண்டர் இரியா என்பவர் கண்டுபிடித்தார். ஆதிகால மக்கள் வாழ்ந்த இடம் தாமிரபரணி ஆற்றங்கரையே என்பதை அறிந்த அவர் அங்கே மொத்தம் 37 இடங்களில் தொல் பொருள் ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியதோடு அந்த இடங்களில் எல்லாம் சிறிய அளவில் ஆய்வுகளையும் மேற்கொண்டார். இவர் இந்த 37 இடங்களுக்கு எப்படிச் செல்ல வேண்டும் என்று 100 வருடங்களுக்கு முன்பே வரைபடமும் தாயரித்து அதை ஆவணப்படுத்தியுள்ளார். அதில் வசவப்பபுரம் பரம்பு குறித்து எழுதப்பட்டுள்ளது. அவர் குறிப்பிடும் 37 இடங்களில் வசவப்பபுரம், மற்றும் கிருஷ்ணாபுரம் பரப்பு என இரு இடங்களையும் குறிப்பிட்டுள்ளார். தற்போது இவ்விடத்திலும் முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன. அதை இவ்வூரைச் சேர்ந்த தமிழ் முருகன் வெளியுலகிற்குக் கொண்டு வந்தார். ஏற்கனவே அலெக்ஸாண்டர் இரியா கூறிய 37 இடங்களிலும் ஆய்வு செய்ய வேண்டும் என்று நான் மனுதாராக உயர் நீதி மன்றம் மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தேன். அதற்காகக் கடந்த வருடம் தமிழ்நாடு அரசு ஆதிச்சநல்லூர், சிவகளையில் இரண்டாம் கட்ட ஆய்வும், கொற்கையில் முதல் கட்ட ஆய்வும் நடத்தப் பணம் ஒதுக்கீடு செய்தது. அதுபோலவே தாமிரபரணி கரையில் அலெக்ஸாண்டர் இரியா அடையாளம் கண்ட தொல்லியல் தலங்கள் ஆய்வு மேற்கொள்ளப்படும் என அறிவித்து அதற்கான பணமும், தனி அதிகாரியையும் நியமித்து உள்ளனர். ஆனால் தொடர்ந்து ஏற்பட்ட கொரோனா நோய்த் தொற்று காரணமாக இந்த வேலை தடைப்பட்டுள்ளது. இதற்கிடையில் வருகிற செப்டம்பர் மாதம் வரை இவ்விடத்தில் ஆய்வு செய்ய மாநில அரசுவுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
தற்போது நமக்கு முதல் சங்கத்தினைத் தேடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதுதான் குமரிக் கண்டம். இந்தக் குமரிக் கண்டத்தினை பற்றிய ஆய்வில் ஒரிசா பாலு ஈடுபட்டு வருகிறார். மேலும் தற்போது. கடல் ஆராய்ச்சியாளர்கள் சிலரும் இதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடைச்சங்கமான கீழடியில் கிடைத்த அற்புதங்கள், இடைச்சங்காலமான ஆதிச்சநல்லூர் கொற்கை பகுதியில் கிடைத்துக் கொண்டிருந்த அதிசயங்களையும் தாண்டி, முதல் சங்கமான குமரிக்கண்டத்தில் நமக்குத் தமிழர்களின் தொன்மையைப் பறைசாற்றும் எச்சங்கள் கிடைக்கும் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை. அதைத் தேடி நாம் பயணிப்போம்...