பனைமரத்தில் இருந்து கிடைக்கும் பதநீரில் ஆண் மஞ்சரி, பெண் மஞ்சரி என்று இரண்டு வகையுண்டு. இவை இரண்டில் இருந்துமே பதநீரை எடுக்கலாம். இந்தப் பதநீர் சுவை மிக்கதாகவும் சிறிது அமிலத்தன்மை கொண்டதாகவும் இருக்கும். மழை மற்றும் காற்று அதிகம் வீசும் காலங்களில் பதநீரின் தரம் குறைந்துவிடும். பொதுவாக ஒரு பனைமரம் வருடத்தில் 3 முதல் 5 மாதங்களுக்கு பதநீரை சுரக்கும். அதிலும் மூன்று மாதங்கள் மட்டுமே அதிகமாக கிடைக்கும். பதநீர் பெற இடையூறாக இருக்கும் சில ஓலைகளை வெட்டி எடுத்துவிட்டால் போதும். இந்த ஓலை வெட்டுதலை 30 சதவீதம் வரை அதிகப்படுத்தினால் பதநீர் சுரப்பு காலம் மேலும் அதிகரிக்கும்.
பெண் பனைகள் எப்போதும் ஆண் பனைகளைக் காட்டிலும் 33 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை கூடுதலான பதநீரைத் தரும். ஆண் பனைகள் டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரையும், பெண் பனையில் பிப்ரவரி முதல் நவம்பர் வரையிலும் பதநீர் கிடைக்கும். ஒரு பனை மரம் 150 ஆண்டுகள் வரை ஆயுள் கொண்டது. 12 ஆண்டுகளில் இருந்து பதநீர் சுரக்கத் தொடங்கும். முதல் ஆண்டு 60 லிட்டர் பதநீர் கிடைக்கும். அடுத்து வரும் ஒவ்வொரு ஆண்டும் ஆண்டுக்கு 10 லிட்டர் என்ற கணக்கில் கூடுதலாக கிடைக்கும். இந்த அளவு 100 லிட்டரை அடைந்தவுடன் மேற்கொண்டு கூடாமல் அதே அளவில் 100 ஆண்டுகள் தொடர்ந்து கிடைக்கும். அதன்பின் படிப்படியாக குறைந்து 150 வயதில் முற்றிலுமாக நின்று போகும்.
பதநீரின் நன்மைகள் ஏராளம். அவற்றில் சில;
* இது உடல் உஷ்ணத்தைக் குறைக்கிறது.
* கோடையில் நிலவும் அதிக வெப்பத்தால் ஏற்படும் சோர்வை நீக்கும்.
* பதநீர் வயிற்றுப் புண்ணை சரி செய்யும்.
* மலச்சிக்கலால் அவதிப்படுபவர்களுக்கு பதநீர் நல்ல மருந்து.
* இதில் உள்ள நார்ச்சத்து குடலியக்கங்களை சரி செய்து ஜீரணம் சீராக நடக்க உதவும்.
* பதநீரில் உள்ள கால்சியம் பற்களை வலிமையாக்குகிறது.
* ஈறுகளில் ஏற்படும் ரத்தக் கசிவை தடுக்கிறது.
* பித்தத்தை குறைக்கிறது.
* ரத்த சோகையைப் போக்குகிறது.
* இனப்பெருக்க உறுப்புகளை புத்துணர்வோடு செயல்பட வைப்பதால் இல்லறம் சிறக்கிறது.
பதநீர் பருகுவோம்! நம் உடல் நலனைப் பேணுவோம்!!