இசுலாமிய நாட்காட்டி, முஸ்லிம் நாட்காட்டி அல்லது ஹிஜ்ரி நாட்காட்டி அல்லது ஹிஜ்ரா நாட்காட்டி என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு சந்திர நாட்காட்டி ஆகும். இது ஆண்டிற்கு 12 சந்திர மாதங்களைக் கொண்டு 354 அல்லது 355 நாட்களைக் கொண்டுள்ளது. இந்த நாட்காட்டி, இசுலாமிய சமய புனித நாட்களையும், பண்டிகைகளையும் கணக்கிட, உலகெங்கும் இருக்கும் இசுலாமியப் பெருமக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நாட்காட்டியின் தொடக்கம் ஹிஜிரா, அதாவது இசுலாமிய இறைதூதர் முகம்மது நபி (ஸல்) அவர்கள் சவூதி அரேபியாவில் உள்ள மக்காவிலிருந்து மதீனாவிற்கு இடம் பெயர்ந்த ஆண்டாகும். 'ஹிஜ்ரத்' என்ற அரபி வார்த்தைக்கு 'இடம் பெயர்தல்' எனப் பொருள். ஹிஜிரி ஆண்டு H - ஹிஜ்ரி அல்லது AH (இலத்தீனில் Anno Hegirae என்பதன் சுருக்கம்) என்றும் குறிப்பிடப்படுகிறது. ஹிஜிராவிற்கு முந்தைய ஆண்டுகள் BH (Before Hegirae) என்று வழங்கப்படுகிறது.
இசுலாமிய நாட்காட்டியானது, சந்திரனின் ஓட்டத்தைக் கொண்டு நிர்ணயம் செய்யப்படுகிறது. சந்திரனின் படித்தலத்தை வைத்து இந்த நாட்காட்டி அமைந்துள்ளதால் ஒரு தரப்பினர் அதன் முதல் பிறையை பார்த்துத்தான் அடுத்த மாதத்தைத் தொடக்கம் செய்ய வேண்டும் என்றும், மற்றொரு தரப்பினர் நாட்களைக் கணக்கிடுவதற்கும் இசுலாம் அனுமதித்துள்ளதால், கணக்கிட்டு முன்கூட்டியே நிர்ணயம் செய்யவேண்டும் என்றும் இருவேறு கருத்துக்களைக் கொண்டிருக்கின்றனர்.
இசுலாமிய மாதங்களின் பெயர்கள்
1. முஹர்ரம் - 30 நாட்கள்
2. சஃபர் - 29 நாட்கள்
3. ரபி உல் அவ்வல் - 30 நாட்கள்
4. ரபி உல் ஆகிர் (அ) தானி - 29 நாட்கள்
5. ஜமா அத்துல் அவ்வல் - 30 நாட்கள்
6. ஜமா அத்துல் ஆகிர் (அ) தானி - 29 நாட்கள்
7. ரஜப் - 30 நாட்கள்
8. ஷஃபான் - 29 நாட்கள்
9. ரமலான் - 30 நாட்கள்
10. ஷவ்வால் - 29 நாட்கள்
11. துல் கஃதா - 30 நாட்கள்
12. துல் ஹிஜ்ஜா - 29 / 30 நாட்கள்
மொத்தம் - 354 / 355 நாட்கள்
ரமலான் மாதம் மிகவும் புனிதமான மாதமாகக் கருதப்படுகிறது. அதில் தான் நோன்பு நோற்கப்படுகின்றது. நோன்பின் பொழுது முஸ்லிம்கள் அதிகாலை முதல் அந்தி மாலை வரை உணவு, தண்ணீர் உட்பட சாறுகள் மற்றும் உடலுறவை முற்றிலும் தவிர்க்கின்றனர். நோயாளிகள் மற்றும் வெளியூர் பயணிகளுக்கு நோன்பை விடுவதற்கு அனுமதியுண்டு. ஆயினும், இவ்வாறு விடப்பட்ட நோன்புகளை பின்னர் நோற்றுக் கொள்ள கட்டளையிடப்பட்டுள்ளனர்.
இசுலாமிய மாதங்களில் ஷவ்வால் மற்றும் துல் ஹஜ் ஆகிய இரண்டு மாதங்களும் பெருநாள் கொண்ட (ஈதுடைய) மாதங்களாகும். ஷவ்வால் முதல் நாளன்று ஈதுல் ஃபித்ர் எனப்படும் ரம்ஜான் பண்டிகையும் , துல் ஹஜ் பத்தாம் நாளன்று ஈதுல் அள்ஹா எனப்படும் பக்ரீத் பண்டிகையும் கொண்டாடப்படுகிறது. துல் ஹஜ் ஒன்பதாம் நாள் அரஃபாவுடைய நாளாகும். அன்றுதான் சவூதி அரேபியாவில் உள்ள அரஃபா மைதானத்தில் ஹாஜிகள் எனப்படும் புனித ஹஜ் பயணிகள் அனைவரும் ஒன்று திரளுவார்கள்.
முஹர்ரம், ரஜப், துல் கஃதா மற்றும் துல் ஹஜ் ஆகிய நான்கு மாதங்களும் புனித மாதங்களாகும்.
இசுலாமியக் கிழமைகளின் பெயர்கள்
1. யௌமுல் அஹத் - ஞாயிற்றுக் கிழமை
2. யௌமுல் இஸ்னைண் - திங்கட் கிழமை
3. யௌமுல் ஸுலஸா - செவ்வாய்க் கிழமை
4. யௌமுல் அருபா - புதன் கிழமை
5. யௌமுல் கமைஸ் - வியாழக்கிழமை
6. யௌமுல் ஜுமுஆ - வெள்ளிக் கிழமை
7. யௌமுல் ஸப்த் - சனிக் கிழமை
அஹத் என்றால் அரபியில் 'முதல்' அல்லது 'ஒன்று' என பொருள் படும். ஆதலால் இங்கு 'யவ்முல் அஹத்' என்பதை முதல் நாளாக குறிப்பிடப்பட்டுள்ளது. இசுலாமிய அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை வாரத்தின் முதல் நாளாகும். சனிக்கிழமை வாரத்தின் கடைசி நாளாகும்.