இந்து சமயப் புராணங்களின் படி, சத்ய யுகம், திரேதா யுகம், துவாபர யுகம் மற்றும் கலியுகம் என்று நான்கு யுகங்கள் இருக்கின்றன. இந்த நான்கு யுகங்களும் சேர்த்து ஒரு சதுர்யுகம் அல்லது மகாயுகம் என்று கூறப்படுகிறது.
ஒவ்வொரு யுகத்திலும் வாழ்பவர்களின் தோற்றமும், குண நலன்களும் கீழ்கண்டவாறு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
1. சத்ய யுகம்
அறநெறியுடன் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக 9 அடி உயரமும், 1 லட்சம் ஆண்டுகள் வாழலாம்.
2. திரேதா யுகம்
நான்கில், மூன்று பகுதி அறநெறியுடனும் ஒரு பகுதி அறமில்லாமலும் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக 8 அடி உயரம் உள்ளவர்களாகவும், சராசரியாக 10000 ஆண்டுகள் வாழலாம். இராமர் திரேதா யுகத்தில் பிறந்தார் எனப்படுகிறது.
3. துவாபர யுகம்
சரிபாதி அறநெறியுடனும் மறுபகுதி அறமில்லாமலும் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக 7 அடி உயரம் உள்ளவர்களாகவும், 1000 ஆண்டுகள் வாழலாம். கிருட்டிணர் மற்றும் பலராமர் ஆகியோர் துவாபர யுகத்தில் பிறந்தவர்கள் எனப்படுகிறது.
4. கலியுகம்
நான்கில், ஒரு பகுதி அறநெறியுடனும் மூன்று பகுதி அறமில்லாமலும் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக 6 அடி உயரம் உள்ளவர்களாகவும், சராசரியாக 120 ஆண்டுகள் வாழலாம்.
கலியுகத்தில் மக்கள் அவரவர் தன் சுயநலத்திற்காக அதர்மவழியில் சென்று பாவங்களை செய்வதால் பகை குணம் மிகுந்தும் காணப்படுவதால் வாழ்வதற்கேத் துன்பமடைய் வேண்டியிருக்கும். இதன் காரணமாக, திருமால் கல்கி அவதாரம் எடுத்து மனிதர்களைக் கொன்று குவித்து, மீண்டும் இந்த உலகில் சத்தியத்தினை நிலைநாட்டும் யுகமென்பதால் இது சத்தியயுகம் என்று கூறப்படுகின்றது.
கால அளவு
யுகங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு கால அளவுகளைக் கொண்டது.
* கலியுகம் நான்கு இலட்சத்து முப்பத்து இரண்டாயிரம் (4,32,000) ஆண்டுகள் கொண்டது.
* துவாபர யுகம் 8,64,000 ஆண்டுகள் கொண்டது. கலியுகத்தை விட இரண்டு மடங்கு கால அளவு கொண்டது.
* திரேதா யுகம் 12,96,000 ஆண்டுகளைக் கொண்டது. கலியுகத்தை விட மூன்றுமடங்கு பெரியது.
* சத்ய யுகம் மொத்தம் 17,28,000 ஆண்டுகள் கொண்டது. இது கலியுகத்தை விட நான்கு மடங்கு பெரியது.
காலப் பகுப்பு முறை
இந்து சமயப் புராணங்களில் கால அளவான சிறிய பிரிவாக நுண்பிரிவு, பெரும் பிரிவு என்று இரு முக்கியப் பிரிவுகளாக இருக்கின்றன.
சிறியதான நுண்பிரிவில்,
* 15 நுண் வினாடிகள் - 1 காட்டை (3.2 வினாடிகள்)
* 30 காட்டை - 1 கலை (96 வினாடிகள்)
* 30 கலை - 1 முகூா்த்தம் (48 நிமிடங்கள்)
* 30 முகூா்த்தம் - 1 அகோரத்திரம் (நாள் )
* 15 அகோரத்திரம் - 1 பட்சம்
* 2 பட்சம் - 1 மாதம்
* 6 மாதம் - 1 அயனம்
* 2 அயனம் - 1 ஆண்டு
என்று அமைந்திருக்கிறது.
பெரும் பிரிவில்,
* கிருத யுகம் - 17,28,000 ஆண்டுகள்
* திரேதா யுகம் - 12,96,000 ஆண்டுகள்
* துவாபர யுகம் - 8,64,000 ஆண்டுகள்
* கலியுகம் - 4,32,000 ஆண்டுகள்
இந்த 4 யுகங்களும் சோ்ந்தது ஒரு மகா யுகம் அல்லது சதுா்யுகம் எனப்படுகிறது. அதன்படி,
* நான்கு யுகங்கள் - 1 மகாயுகம்
* 12 மகா யுகங்கள் - 1 மன்வந்திரம்
* 14 மன்வந்திரங்கள் - கல்பம்.
இப்படியாக 30 கல்பங்கள் இருக்கின்றன. அவை;
1. வாமதேவ கல்பம்
2. சுவேத வராக கல்பம்
3. நீல லோகித கல்பம்
4. ரந்தர கல்பம்
5. ரெளரவ கல்பம்
6. தேவ கல்பம்
7. விரக கிருட்டிண கல்பம்
8. கந்தற்ப கல்பம்
9. சத்திய கல்பம்
10. ஈசான கல்பம்
11. தமம் கல்பம்
12. சாரசுவத கல்பம்
13. உதான கல்பம்
14. காருட கல்பம்
15. கெளரம கல்பம்
16. நரசிம்ம கல்பம்
17. சமான கல்பம்
18. ஆக்நேய கல்பம்
19. சோம கல்பம்
20. மானவ கல்பம்
21. தட்புருச கல்பம்
22. வைகுண்ட கல்பம்
23. லெச்சுமி கல்பம்
24. சாவித்ரி கல்பம்
25. கோர கல்பம்
26. வராக கல்பம்
27. வைராச கல்பம்
28. கெளரி கல்பம்
29. மகோத்வர கல்பம்
30. பிதிர் கல்பம்
இவற்றுள் தற்போது நடந்து கொண்டிருப்பது சுவேத வராக கல்பம் என்கின்றனர்.