காதல் பூட்டு (Love lock அல்லது Love padlock) என்பது பற்றி உங்களுக்குத் தெரியுமா?
காதலர்கள் தங்களுக்குள் பிரிவு ஏற்படக்கூடாது என்பதற்காக ஒரு பூட்டில் தங்கள் பெயரை எழுதி, அப்பூட்டை பாலம், வேலி, வாயில் போன்ற பொது இடத்தில் பூட்டி வைத்து விடுவதைக் குறிப்பிடுகிறது.
பொதுவாகக் காதலர்கள், தங்களின் பெயர்கள் அல்லது முதலெழுத்துகளை ஒரு பூட்டில் எழுதி, அப்பூட்டை பொது இடத்தில் பூட்டிய பின் அதன் திறவுகோலை எங்காவது எறிந்து விடுவர். பிறகு அந்தத் திறவுகோலைக் கண்டுபிடித்தால்தான் பூட்டைத் திறக்க முடியும். இதனால் தங்கள் காதல் எப்போதும் உடையாது என்பது ஒரு நம்பிக்கையாக இருக்கிறது.
2000 ஆம் ஆண்டுக்குப் பின்பு, இந்த காதல் பூட்டுகள் பழக்கம் உலகம் முழுவதிலும் அதிகரித்திருக்கிறது.
இப்படி பூட்டு மாட்டும் நம்பிக்கை பாரீஸ், ரோம், செர்பியா, உருகுவே, தைவான், ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் உள்ளது.
* இந்த காதல் பூட்டுகளை பாரிஸ் நகரில் உள்ள மக்கள் நடைபாலம் பான்ட் டெஸ்ஆர்ட்ஸ் எனுமிடத்தில் காணலாம். இந்தப் பாலம் 1802 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இங்கு காதலர் தினத்தன்று, புதிது புதிதாக மேலும் பல பூட்டுகளைக் காணலாம். இதன் அடியில் சென் நதி ஓடுகிறது. காதலர்கள் தங்கள் பெயர்களைப் பூட்டில் பதிவு செய்து, பூட்டிவிட்டு திறவுகோலை கீழே ஓடும் ஆற்றினுள் போட்டு விடுகின்றனர்.
* ரோம் நகரத்தில் பான்டிமில்வியோ பாலம் உள்ளது. இத்தாலிய எழுத்தாளர் பெட்ரிகோ மோசியா, தன்னுடைய புத்தகத்தில் இது பற்றிக் குறிப்பிட்டிருந்தார். இந்தப் பாலத்தின் பக்கவாட்டில் காதல் பூட்டுகள் மாட்டப்பட்டிருப்பதைக் காண முடியும்.
* செர்பியாவில் உர்ரிஜாக்காபன்ஜா என்ற இடத்தில் ஒரு நடைபாதைப் பாலம் உள்ளது. இதனை மோஸ்ட்லிஜுபலி என அழைப்பர். இதிலும் காதலர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்த பூட்டுகளை பக்கவாட்டுச் சுவர்களில் பூட்டி வைத்திருப்பர்.
* தைவானில் ரயில் செல்லும் பாதைக்கு மேலேக் கட்டப்பட்டுள்ள பாலத்தில், காதல் பூட்டுகள் மாட்டப்பட்டிருக்கின்றன. ரயில்கள் அடியில் கடந்து செல்லும் போது எழும் காந்தவீச்சு பூட்டையும் காதலையும் என்றென்றும் மேலும் பிடிப்பாக வைத்துக் கொண்டிருக்கும் எனும் நம்பிக்கை இருக்கிறது.
* உருகுவே நாட்டில் விரான்ஜி என்ற இடத்தில் செயற்கை நீரூற்று ஒன்றை அமைத்துள்ளனர். இதனைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள வளைந்த கம்பிவேலியில் பூட்டுகள் மாட்டப்பட்டுள்ளன. இங்கு பூட்டை மாட்டி வைத்து விட்டுச் சென்றால், மாட்டியவர்கள் மீண்டும் நிச்சயம் காதலர்களாக அங்கு வருவார்கள் என்றும், அவர்கள் காதல் என்றென்றும் நீடிக்கும் என்றும் நம்புகின்றனர்.
இந்தியாவில் இப்படியொரு வழக்கமில்லையா...? என்றுதானேக் கேட்கிறீர்கள்...
நீங்கள் காதலிப்பவர்களாக இருந்தால், நீங்களும் ஒரு பூட்டை வாங்கி, உங்கள் பெயர், உங்கள் இணையின் பெயரை எழுதி, ஒரு பொது இடத்தைத் தேர்வு செய்து காதல் பூட்டைப் பூட்டி, சாவியைத் தூக்கி எறிந்து விடுங்கள்... உங்கள் காதல் பிரியாமல் இருக்கட்டும்.