புழுவைப் போன்ற உயிரினம் டார்டிகிரேட் (Tardigrade). பார்ப்பதற்கு ஒரு புழுவைப் போல் தோற்றமளித்தாலும், உயிரிகள் வகைப்பாட்டின் (Taxonomy) படி இது ஒரு விலங்கு ஆகும். டார்டிகிரேட் ஒரு நுண்ணிய விலங்காகும் (Microscopic animal). இதன் அளவு பொதுவாக 0.5 மி.மீ. சில டார்டிகிரேட் இனங்கள் 1.5 மி.மீ வரை வளரும். இந்த அளவைத் தாண்டி இவை வளர்வது இல்லை. இந்த நுண்ணிய விலங்கை நாம் நமது வெறும் கண்களால் பார்க்க இயலாது. இது எந்த அளவு நுண்ணியது என்றால், ஒரே ஒரு மணல் துகளின் மேல் ஒரு டார்டிகிரேடை அமர்த்தி வைக்க முடியும். அந்த அளவிற்கு ஒரு மிக நுண்ணிய அளவிலான விலங்கு இது. இந்த விலங்கை ஒரு எளிய நுண்ணோக்கியின் (Simple microscope) மூலம் பார்க்கலாம்.
இந்த விலங்கு முதன் முதலில் ஜோஹன் ஆகஸ்ட் எஃப்ராயிம் கோயஸ் (Johann August Ephraim Goeze) எனும் ஜெர்மன் விலங்கியலாளரால் 1773 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் இந்த விலங்கினைச் சிறிய நீர்க்கரடிகள் (Little water bears) என்று அழைத்தார். இத்தாலிய உயிரியலாளரான லஸாரோ ஸ்பலான்ஸானி (Lazzaro Spallanzani) என்பவர், 1777 ஆம் ஆண்டில் இந்த விலங்கிற்கு டார்டிகிரேடா (Tardigrada) எனப் பெயரிட்டார். லத்தீன் மொழியில் டார்டிகிரேடா என்றால் மெது நடையாளர் (Slow walker) என்று பொருள். இந்த விலங்கு நகர்ந்து செல்வது, கிட்டத்தட்ட கரடியின் நடையை ஒத்திருப்பதால், இந்த விலங்கிற்கு நீர்க் கரடி, மெது நடையாளர் எனும் பெயர்கள் சூட்டப்பட்டிருக்கின்றன.
டார்டிகிரேடா 4 இணைக் கால்கள் கொண்டுள்ளன. அவற்றின் ஒவ்வொரு காலிலும் 4 முதல் 8 வரையிலான இடுக்கிகள் போன்ற அமைப்புகள் உள்ளன. இதன் 3 இணைக் கால்கள் நகர்ந்து செல்வதற்கும், நான்காவது இணைக் கால்கள் பற்றிக் கொள்வதற்கும் இவற்றால் பயன்படுத்தப்படுகின்றது. இந்த நீர்க்கரடிகளின் முதன்மை உணவு பாசிகள், தாவரட் செல்கள் மற்றும் இதைப் போன்ற சிறிய அளவிலான உயிரினங்கள் (Small invertebrates). இவற்றின் முகத்தில் இருக்கும் உருளை வடிவிலான, உறிஞ்சு குழல் போன்ற வாயின் அருகே இருக்கும், சிறு சிறு கூர்மையான அமைப்பின் மூலம் தாவர செல்கள், பாசிகள், சிறு விலங்குகளைத் துளையிட்டு அதன் மூலம் இவைகள் தமது உணவினை உறிந்து உண்கின்றன. இவற்றிற்கு சுவாச அமைப்பு இல்லை, ஆனால் இவற்றின் உடலெங்கும் வாயுப் பரிமாற்றம் நடைபெற்று வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இவைகளால் நமது உயிர்க்கோளத்தில் (Biosphere) எங்கும் உயிர் வாழ முடியும். அதி உயர மலைச்சிகரங்களிலும், அதி ஆழமான ஆழ்கடலிலும் இவற்றால் உயிர் வாழ முடியும். இவற்றால் 100°C சூடு இருக்கும் புதைச்சேற்று எரிமலைகளிலும், -100°C யில் கடும் குளிர் நிலவும் அண்டார்க்டிக்கா பகுதியிலும் கூட உயிர்வாழ முடியும். கடும் மழை பொழியும் மழைக்காடுகளிலும், மழையேப் பொழியாத பாலைவனங்களிலும் கூட இவற்றால் உயிர் வாழ முடியும். அதீத வெப்பநிலைகளையும், உயர் மற்றும் தாழ் அழுத்தங்களையும், காற்றில்லாமலும், கதிர்வீச்சிலும், நீரில்லாமலும், உணவில்லாமலும் தாக்குப்பிடித்து உயிர் வாழ முடியும். உலகில் உள்ள வேறு எந்த உயிரினத்தாலும் இத்தகையக் கடினச் சூழல்களைத் தாக்குப்பிடிக்க இயலாது. இமயமலையில், கடல்நீர் மட்டத்திலிருந்து 20,000 அடி உயரத்தில் உள்ள ஒரு சுடுநீர் சுனையில் இந்த டார்டிகிரேட்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதே போல், துருவப் பகுதியில் உள்ள பனிப்பாறைகளின் அடியிலும் கண்டறியப்பட்டுள்ளது. இவற்றால், -200°C குளிர்நிலையில் சில நாட்களும், -20°C குளிர்நிலையில் 30 ஆண்டுகளும் இவற்றால் தாக்குப் பிடிக்க முடியும்.
டார்டிகிரேட்டால் 30 வருடங்கள் நீர் மற்றும் உணவின்றி தாக்குப் பிடிக்க முடியும். இதுவரை நமது பூமியானது 5 முறை அழிந்து மீண்டும் மீண்டும் உயிர்கள் தோன்றியதாக அறிவியலாளர்கள் நம்புகின்றனர். ஆனால், இந்த 5 அழிவிலும் தப்பிப் பிழைத்த ஒரே உயிரினமாக டார்டிகிரேட்கள் இருக்கக் கூடும் என அறிவியலாளர்கள் கருதுகின்றனர். 2007 ஆம் ஆண்டு ஐரோப்பிய விண்வெளிக் கழகம் (European Space Agency) டார்டிகிரேட்களை விண்வெளிக்கு அனுப்பி வெளிப்பட வைத்து, மீண்டும் பூமிக்கு அவற்றைத் திரும்பி வரவழைத்து ஆய்வு செய்தது. விண்வெளிக்குக் கொண்டு சென்று வெளிப்பட வைத்த டார்டிகிரேட்களில் 68 % உயிர் பிழைத்திருந்தன.
2011 ஆம் ஆண்டு இத்தாலிய விஞ்ஞானிகள், டார்டிகிரேட்டிகளை விண்வெளிக்கு அனுப்பிய ஆய்வில், டார்டிகிரேட்களுக்கு புவியீர்ப்பு விசைக் குறைபாடு, அண்டக் கதிர்வீச்சு போன்றவற்றால் எந்தப் பாதிப்பும் நேரவில்லை என்று கண்டறியப்பட்டது.