மீன் மழை (Rain of animals) என்பது வானிலையில் நிகழும் ஒரு அரிதான நிகழ்வாகும். பறக்க இயலாத மீன்கள், தவளைகள் உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்கள் மழையின் போது வானில் இருந்து மழையுடன் சேர்ந்து விழுவதாகும்.
குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் போது, கூடவே வேகமாக மாறும் வானிலை மாற்றத்தில் நீர்ப்பீச்சு ஏற்படும். அதாவது கடல் அல்லது ஏரி போன்றவற்றின் மேற்பரப்பில் திடீரென்று காற்று சூடாகும் போது, அது விரைந்து மேலெழும்பும். அப்படி காற்று மேலெழும்பும் போது, அந்த வெற்றிடத்தை நோக்கி, கடல் அல்லது ஏரி நீரும் மேலெழும்பி வரும். கடல் / ஏரி நீர் உறிஞ்சப்படும் போது, அதனுடன் சேர்த்து அப்பகுதியில் வாழும் தவளைகள், மீன்கள், சிப்பிகள் போன்ற நீர்வாழ் உயிரினங்கள் அனைத்தும் நீருடன் சேர்ந்து மேலெழும்பிக் காற்றுடன் சேர்ந்து பயணப்படத் தொடங்கி விடும். அதன் பிறகு, அங்கிருந்து சிறிது தொலைவில், கடலிலோ அல்லது கடற்கரை நகரங்களிலோ மழையாய் பொழியும் என்கின்றனர்.
இருப்பினும், மீன் மழை நிகழ்வு குறித்த அறிவியல் கருத்து, அறிவியலாளர்களின் ஊகமாகவே இருக்கிறது. இதுவரை அறிவியல் சான்றாக உறுதிப்படுத்தப்படவில்லை.
முதல் நூற்றாண்டில், ரோம இயற்கையியலாளர் மூத்த பிளினி மீன், தவளை மழை குறித்துப் பதிவு செய்துள்ளார். 1794 ஆம் ஆண்டில், பிரெஞ்சுப் படை வீரர்கள் இம்மாதிரியான மழையைப் பிரெஞ்சு நகரான லீல் அருகில் உள்ள லலெய்ன் என்ற இடத்தில் கண்டதாகப் பதிவு செய்துள்ளனர். 18 ஆம் நூற்றாண்டிலிருந்து நடு அமெரிக்கா நாடான ஹொண்டுராஸ் நாட்டில் கனமழைக் காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் மீன்மழை பெய்து கொண்டுதான் இருக்கிறது.
1939 ஆம் ஆண்டு சூன் 17 அன்று ஈரான் நாட்டிலுள்ள டாப்ரெஜ் என்ற நகரில் விநோதமாகத் தவளை மழை பெய்திருக்கிறது. இந்த தவளை மழைக்கு அந்த நகரை ஒட்டிய ரிஜாயே ஏரியில் ஏற்பட்ட நீர்ப்பீச்சுதான் காரணம் என்று சொல்கின்றனர்.
உலகின் நீர்நிலை அருகிலுள்ள பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மீன் மழை பெய்து கொண்டுதான் இருக்கின்றன. ஆஸ்திரேலியாவிலுள்ள லஜாமானு என்ற சிறிய நகரத்தில் 2010 ஆம் ஆண்டிலும், அதன் பிறகு 2023 ஆம் ஆண்டிலும் மீன் மழை பெய்திருக்கிறது. இந்தியாவில் 2015 ஆம் ஆண்டு ஜூன் மாத்த்தில், ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள கொள்ளமுடி, பல்லகிரி, ஜராவதம் கிராமங்களில் மீன் மழை பெய்திருக்கிறது.