இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் இராஜா (Raja) எனும் பெயரில் மூன்று நாட்கள் பெண்மையின் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையை இராஜா பர்பா என்றும், மிதுன சங்கராந்தி என்றும் அழைக்கின்றனர். இத்திருவிழா பருவமழையின் வருகையை கொண்டாடும் வகையிலேயே அமைந்திருக்கிறது.
ராஜா என்ற சொல் சமஸ்கிருத வார்த்தையான ராஜாஸிலிருந்து வந்தது, அதாவது, இதற்கு மாதவிடாய் என்று பொருள், மாதவிடாய் பெண் ராஜாஸ்வாலா என்று அழைக்கப்படுகிறார். இத்திருவிழாவில் விஷ்ணுவின் மனைவிகளில் ஒருவரான பூமாதேவி எனும் பெண் தெய்வத்திற்கு, முதல் மூன்று நாட்களில் மாதவிடாய் ஏற்படுவதாக நம்பப்படுகிறது. நான்காவது நாள் வசுமதி ஸ்னானா எனப்படும் வசந்தக் குளியல் அல்லது பூமியின் சடங்குக் குளியல் என்று அழைக்கப்படுகிறது.
இந்தத் திருவிழா ஜூன் மாதம் நடுப்பகுதியில் வருகிறது, முதல் நாள் பஹிலி ராஜா என்றும், இரண்டாம் நாள் மிதுன சங்கராந்தி என்றும், மூன்றாம் நாள் பூதாஹா அல்லது பாசி ராஜா என்றும் அழைக்கப்படுகிறது. கடைசியாக நான்காவது நாள் வசுமதி ஸ்நானம் (வசந்தக் குளியல்) என்று அழைக்கப்படுகிறது,
முதல் நாளுக்கு முந்தைய நாள் சஜபாஜா அல்லது ஆயத்த நாள் என்று அழைக்கப்படுகிறது, இந்நாளில் பெண்கள், மூன்று நாட்களுக்குத் தேவையான மசாலாப் பொருட்கள் அரைத்து வைத்து விட்டு, வீடு, சமையலறை, அரைக்கும் கற்கள் உள்ளிட்டவைகளைச் சுத்தம் செய்து வைக்கின்றனர். திருவிழாவின் முதல் நாளில், அதிகாலையில் எழுந்து, தங்கள் உடலில் மஞ்சள் பூசி, எண்ணெய் தடவிக் கொண்டு, நதி அல்லது நீர்நிலையில் குளிப்பார்கள். அடுத்து வரும் மீதமுள்ள இரண்டு நாட்களுக்கு குளிப்பது இல்லை.
இந்நாட்களில் அவர்கள் வெறுங்காலுடன் நடக்க மாட்டார்கள், பூமியைக் கீற மாட்டார்கள், அரைக்க மாட்டார்கள், எதையும் கிழிக்க மாட்டார்கள், வெட்ட மாட்டார்கள், சமைப்பதும் இல்லை. இந்த மூன்று நாட்களிலும் பெண்கள் வேலையில் இருந்து ஓய்வு எடுத்துக் கொள்கின்றனர்.
கருவுறுதலைக் குறிக்கும் அடையாளமாக பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுவது போல, பூமாதேவித் தாய்க்கும் மாதவிடாய் ஏற்படுகிறது. எனவே, திருவிழாவின் மூன்று நாட்களும் அன்னையின் மாதவிடாய் காலமாகக் கருதப்படுகிறது. இம்மாதவிடாய் நாட்களில் பூமிக்கு மரியாதை செலுத்தும் விதமாக, இந்த நாட்களில் அனைத்து விவசாயப் பணிகளும் நிறுத்தப்படுகின்றன.
இதில் பெண்கள் பூமியின் அடையாளமாக அரைக்கும் கல்லை மஞ்சள் பூச்சுடன் நீராட்டுகிறார்கள், அதன் பிறகு பூ, குங்குமம் போன்றவைகளைக் கொண்டு அர்ச்சனை செய்கிறார்கள். இத்திருவிழாவின் போது, அனைத்து வகையான பருவகாலப் பழங்களும் பூமித்தாய்க்குப் படைக்கப்படுகின்றன.
திருமணமாகாத குடும்பப் பெண்கள் இந்தத் திருவிழாவின் முதல் நாளில் புதிய புடவை, மேலாடை மற்றும் ஆபரணங்களை அணிவார்கள். பூமித்தாய் மழையை எதிர்பார்த்துக் காத்திருப்பது போல, தங்களுக்கு வரவிருக்கும் கணவர் நல்லவராக அமைந்திட வேண்டும் என்கிற எண்ணங்களோடு, மூன்று நாட்களையும் மகிழ்ச்சியான திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள். இக்காலத்தில் பெண்கள் சமைக்காத மற்றும் ஊட்டமளிக்கும் உணவை மட்டுமேச் சாப்பிடுகிறார்கள், ஒடிசா மாநிலத்தின் மரபு வழி உணவான போடாபிதா, உப்பு போன்றவைகளைச் சாப்பிடுவதில்லை.
வருங்காலத்தில் வரப்போகும் கணவருடன் சேர்ந்து நல்ல உடல் நலத்துடன் குழந்தைகளைப் பெற்றெடுப்போம் என்று உறுதி செய்து கொள்ளும் நிகழ்வும் நடைபெறுகிறது. தொடர்ந்து மூன்று நாட்களும், அவர்கள் சிறந்த ஆடைகள் மற்றும் அலங்காரங்களில், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் இனிப்புகள் மற்றும் நல்ல உணவுகளை உண்பது, நீண்ட மகிழ்ச்சியான நேரத்தைச் செலவிடுவது என்றிருக்கின்றனர். குறிப்பாக, பெரிய ஆலமரங்களில் ஊஞ்சல் கட்டி அதில் அமர்ந்தாடுவதுடன், இயற்கை சார்ந்த நாட்டுப்புறப் பாடல்களையும் பாடி மகிழ்கின்றனர்.
இத்திருவிழாவிற்காக, ராம் ஊஞ்சல், சர்க்கி ஊஞ்சல், பட்டா ஊஞ்சல், தண்டி ஊஞ்சல் என்று பல்வேறு வகையான ஊஞ்சல்கள் அழகிய வடிவமைப்புகளுடன் உருவாக்கப்பட்டுப் பயன்படுத்தப்படுகின்றன. இத்திருவிழாவிற்கென்று உள்ள சில பாடல்களுடன், அன்பு, பாசம், மரியாதை, சமூக நடத்தை மற்றும் சமூகத்தின் நன்மை போன்றவைகளை வெளிக்கொணரும் பாடல்களைப் பாடி மகிழ்கின்றனர்.
பெண்கள் இத்திருவிழாக் காலங்களில் மகிழ்ச்சியோடு இருக்கும் வேளையில், பருவமழை தொடங்கும் தருவாயில், இளைஞர்களும் கடுமையான விளையாட்டுகளை விளையாடி மகிழ்கிறார்கள். அடுத்து விவசாயத்தின் மூலம் வரும் அறுவடைக்கான நம்பிக்கையுடன் அவர்களின் உற்சாகம் அதிகமாக இருக்கும். அனைத்து விவசாய நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டு, ஒடிசா மாநிலம் முழுவதும் ஆண்களும் பெண்களும் இந்த மூன்று நாட்களும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். இரவு வேளைகளில், பல்வேறு கலை நிகழ்வுகளும், பொழுது போக்கு நிகழ்வுகளும் ஏற்பாடுகள் செய்து நடத்தப்படுகின்றன.
இது பெண்மையின் திருவிழா என்றாலும், ஆண்களுக்கும் மகிழ்ச்சியான திருவிழாவாகத்தான் இருக்கிறது.