குசராத் மாநிலத்தைப் பூர்வீகமாக கொண்ட வாக்ரி இன மக்களால் பேசப்படும் மொழி வாக்ரி போலி (Vaagri Booli) மொழி. குஜராத்தி மொழியில் 'வாக்ரி’ என்ற சொல் குருவி பிடிப்பவர்களைக் குறிக்கிறது. 'போலி’ என்றால் மொழி. ஆகவே 'வாக்ரி போலி’ என்பது குருவிக்காரர்களின் மொழி. அழிவு நிலையில் இருக்கும் ஒரு மொழியாக இம்மொழி இருக்கிறது.
தென்னிந்தியாவில் குறிப்பாக, தமிழ்நாடு, பாண்டிச்சேரி, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா மற்றும் மகாராட்டிரா மாநிலங்களில் வாழும் நாடோடி மக்களான நரிக்குறவர் என்று பொதுவழக்கில் அழைக்கப்படும் ஹக்கி பிக்கி எனும் மக்களின் பேச்சு வழக்கில் மட்டுமே இந்த மொழி, பயன்படுத்தப்பட்டு வருகிறது. இம்மொழியில் நரிக்குறவர்கள் வசிக்கும் மாநிலங்களுக்கேற்ப, அம்மாநில மொழிகளின் சொற்கள் 10 சதவிகிதத்துக்கும் அதிகமாகக் கலந்திருக்கின்றன.
இம்மொழிக்கு எழுத்து வடிவம் இல்லை. இது ஒரு இந்தோ - ஆரிய மொழி ஆகும். இம்மொழியானது பில் மொழியை ஒத்துள்ளது. தமிழ்நாட்டில் வாழும் நரிக்குறவர் எனப்படும் ஹக்கி பிக்கி இன மக்கள் வாக்ரி போலி மொழியைத் தங்களுக்குள் மட்டும் பேசுகின்றனர். இந்தோ ஆரிய மொழியான வாக்ரி போலி மொழி பேசும் நரிக்குறவர்கள் போன்ற பெயர் கொண்ட தொல்தமிழ்க் குடிகளான குறவர்களுக்கும் இவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறைப் பேராசிரியராக இருந்து பணி நிறைவு பெற்ற பேராசிரியர் சீனிவாசன் வர்மா என்பவர், நரிக்குறவர்களின் மொழியைப் பற்றி எந்தவிதமான குறிப்புகளும் இல்லாத 1960 ஆம் ஆண்டுகளின் காலக்கட்டத்தில் அந்த மொழியைப் பயின்று, அதை ஆவணப்படுத்தி முனைவர் பட்டம் பெற்றவர். இவர் வாக்கிரி பூலி மொழிக்கான “வாக்ரி - தமிழ் - ஆங்கில அகராதி” ஒன்றை 2010 ஆம் ஆண்டில் வெளியிட்டிருக்கிறார். இவர் வாக்ரி போலி மொழியில் மொழிபெயர்த்த திருக்குறள் நூலினை 2022 ஆம் ஆண்டில் செம்மொழி மத்தியத் தமிழாய்வு நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. இவருக்கு முன்பாக, 1979 ஆம் ஆண்டில் கிட்டு சிரோமணி என்பவர் திருக்குறளை வாக்ரி போலி மொழியில் மொழிபெயர்த்துத் தந்திருக்கிறார்.