உலக மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன், மக்களின் உயரக் கணக்கெடுப்பும் சேர்த்து எடுக்கப் பெற்றிருக்கின்றன. மனிதர்களின் உயர வளர்ச்சியானது பொதுவாக 19 வயது வரை மட்டுமே இருக்கும். அதன் பிறகு, உயரத்தில் மாறுபாடுகள் அதிகமாக இருக்காது என்பதால், 19 வயதையே உலகின் சராசரி உயரத்திற்கான வயதாகக் கொண்டு உலக மக்களின் சராசரி உயரக் கணக்கெடுப்பும் எடுக்கப் பெற்றிருக்கின்றன.
இக்கணக்கெடுப்பில் நாட்டுக்கு நாடு மனிதர்களின் சராசரி உயரத்தில் வேறுபாடுகள் இருக்கின்றன. மேலும் ஆண், பெண் என்று இரு பாலினங்களின் வழியாகவும் உயரங்கள் வேறுபடுகின்றன என்பதால், ஒவ்வொரு நாட்டிலும் பாலினத்தின் வழியில் 5 வயது, 10 வயது, 15 வயது மற்றும் 19 வயது என்று நான்கு வயதுகளில் மனிதனின் சராசரி உயரங்கள் கணக்கெடுக்கப்பட்டிருக்கின்றன.
இக்கணக்கெடுப்பின்படி, உலகின் சராசரி மனித உயரம் அதிகம் கொண்ட நாடுகளில் நெதர்லாந்து 183.78 செ.மீ எனும் அளவுடன் முதலிடத்தில் உள்ளது. இந்நாட்டினைத் தொடர்ந்து, மாண்டினீக்ரோ (183.3), எஸ்டோனியா (182.79), போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா (182.47), ஐஸ்லாந்து (182.1), டென்மார்க் (181.89), செக் குடியரசு (181.19), லாட்வியா (181.17), சுலோவாக்கியா (181.02), உக்ரைன் (180.98) ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களில் இருக்கின்றன.
உலகின் சராசரி மனித உயரம் குறைந்த நாடுகளில் திமோர் லெஸ்டே 160.13 செ.மீ எனும் அளவுடன் முதலிடத்தில் உள்ளது. இந்நாட்டினைத் தொடர்ந்து, லாவோஸ் (162.78), சாலமன் தீவுகள் (163.07), பப்புவா நியூ கினி (163.1), மொசாம்பிக் (164.3), நேபாளம் (164.36), குவாத்தமாலா (164.36), ஏமன் (164.42), பங்களாதேஷ் (165.08), மடகாஸ்கர் (165.16) ஆகிய நாடுகள் 10 இடங்களைப் பெறுகின்றன.
உலகின் சராசரி மனித உயரக் கணக்கில் 5 வயதில் அளவிடும் போது, சிறுவர்கள் 110.21 செ.மீ., பெண்கள் 110.10 செ.மீ என்று இருக்கிறது. இந்த உயரம் 10 வயதில் அளவிடும் போது, சிறுவர்கள் 132.57 செ.மீ., பெண்கள் 132.85 செ.மீ என்றும், 15 வயதில் அளவிடும் போது, சிறுவர்கள் 159.01 செ.மீ., பெண்கள் 152.39 செ.மீ என்றும், 19 வயதில் அளவிடும் போது, சிறுவர்கள் 171.38 செ.மீ., பெண்கள் 159.6 செ.மீ என்றும் அதிகரித்திருக்கிறது.
இந்தியாவின் சராசரி மனித உயரக் கணக்கில் 5 வயதில் அளவிடும் போது, சிறுவர்கள் 107.07 செ.மீ, பெண்கள் 107.19 செ.மீ என்றும், 10 வயதில் அளவிடும் போது, சிறுவர்கள் 132.57 செ.மீ, பெண்கள் 132.85 செ.மீ என்றும், 15 வயதில் அளவிடும் போது, சிறுவர்கள் 159.01 செ.மீ, பெண்கள் 152.39 செ.மீ என்றும் இருக்கிறது. 19 வயதில் அளவிடும் போது, சிறுவர்கள் 159.01 செ.மீ, பெண்கள் 152.39 செ.மீ என்றும் இருக்கிறது.
உலகின் பெரும்பாலான நாடுகளின் அதிகாரப்பூர்வமான அளவீட்டு முறையாக மெட்ரிக் அளவு முறை பயன்படுத்தப்பட்டு வந்தாலும், லைபீரியா, மியான்மர் மற்றும் அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகள் மட்டும் இம்பீரியல் அளவுகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருவதால், இப்பட்டியலில் மெட்ரிக் மற்றும் இம்பீரியல் என்று இரு அளவுகளும் இடம் பெற்றிருக்கின்றன.