சீன நாட்காட்டியில் 7வது மாதத்தின் 7வது நாளில் “சீனக் காதலர் நாள்” (Chinese Valentine's Day) கொண்டாடப்படுகிறது. இந்நாள் கொண்டாட்டத்தை, “சீ ஷூ திருவிழா” என்று அழைக்கின்றனர். இத்திருவிழாவினை, குய்ஹியாவோ விழா (Qiqiao Festival), ஏழாவது இரட்டை விழா (Double Seventh Festival), ஏழுகளின் இரவு (The Night of Sevens), மக்பீ விழா (The Magpie Festival) என்று வேறு சில பெயர்களிலும் அழைக்கின்றனர். சீ ஷீ திருவிழாவின் தாக்கமானது, ஜப்பானின் தனாபதா விழா (Tanabata festival) மற்றும் கொரியாவின் சில்சோக் திருவிழா (Chilseok festival) ஆகியவற்றிலும் உள்ளது.
இந்நாள், சீனக் காதலர் நாளாகக் கொண்டாடப்படுவதற்கு ஒரு கதை இருக்கிறது.
நெசவு நெய்வதில் திறமை மிக்க ஜினு (Zhinu) என்ற பெண் தெய்வம், வானத்தில் இருந்து பூவுலக்கு வரும் போது, நியுலங் (Niulang) என்ற மாடு மேய்க்கும் இளைஞனைக் கண்டார். இருவரும் காதல் வயப்பட்டனர். காதலர்கள் இருவரும் காதல் மணம் புரிந்து, இரண்டு குழந்தைகளைப் பெற்று மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். பூலோகம் சென்ற மகள் திரும்பாததன் காரணமறிந்த சொர்க்கத்தின் ராணியான ஜினுவின் தாய், ஜினுவைத் தன்னுடன் அழைத்துச் செல்ல முடிவெடுத்தார். சொர்க்கத்தின் ராணி, ஜினுவின் கணவர் நியூலங் மற்றும் அவர்களிருவருக்கும் பிறந்த குழந்தைகளிடமிருந்து ஜினுவைப் பிரித்து, அவளை மீண்டும் சொர்க்கத்துக்கே அழைத்துச் சென்றார்.
ஜினுவைக் காணாத நியுலங்கும் அவனுடைய குழந்தைகளும், அவளது நினைவுகளால் வருந்தினர். அதன் பிறகு நியுலங், மனைவியான ஜினுவைத் தேடி அலைந்தார். அவருக்குக் கிடைத்த பறக்கும் காலணிகளின் உதவியோடு மனைவியைத் தேடிச் சொர்க்கத்துக்கு சென்றான். ஆனால், ஜினுவின் தாய் அவர்கள் சந்திக்க முடியாதவாறு, ஒரு பால்வெளியை உருவாக்கினார்.
அந்தக் காதலர்களின் அழுகுரலைக் கேட்ட ‘வால்காக்கை’ (Magpie) பறவைகள், அவர்களது அன்பைக் கண்டு, 7 வது சந்திர மாதத்தின் 7 வது நாளில் அந்தப் பால்வெளியைக் கடக்கப் பாலத்தை அமைத்து கொடுத்தன. இந்தப் பாலம் வால்காக்கைப் பாலம் (Magpie Bridge) என்றழைக்கப்பட்டது.
இந்தப் பாலத்தின் வழியாக ஜினுவுல் நியுலங்கும் சந்தித்துக் கொண்டனர். அதனைத் தடுக்க இயலாத ஜினுவின் தாய் காதலர்கள் இருவரும் ஆண்டுக்கு ஒருமுறை ‘சீ ஷீ’ நாளில் சந்திக்கச் சம்மதித்தார். அதன்படி, ஒவ்வொரு சீனப் புத்தாண்டுக்குப் பிறகு, ஏழாவது மாதத்தில் ஏழாவது நாளில் அந்த சந்திப்புக்கான நாளாக அமைந்தது. அவர்கள் சந்தித்த நாளைத்தான் சீனர்கள் காதலர் தினமாகக் கொண்டாடி மகிழ்கின்றனர்.
சீனக் காதலர் நாளை முன்னிட்டு, அன்றைய நாள் மக்கள் வண்ணமயமான கொண்டாட்டத்தில் ஈடுபடுகின்றனர். வயது வேறுபாடு இல்லாமல் பெண்களும், குழந்தைகளும், அலங்கரிக்கப்பட்ட விளக்குகளை ஆற்றில் விட்டு மகிழ்கின்றனர். காதலர்கள் பலரும் சீன மரபு வழியிலான உடையுடன், கியூஜோவ் என்ற இடத்தில் உள்ள பழமையான ‘காதல் தேவன்’ கோயிலை நோக்கிச் செல்கின்றனர். அங்கு காதலர்களுக்குள் அன்பை வெளிப்படுத்தும் பல்வேறு விளையாட்டுகளும் நடத்தப் பெறுகின்றன. அப்போட்டிகளில் பங்கேற்று மகிழ்கின்றனர்.
உலகம் முழுவதும் காதலர் நாளாகக் கொண்டாடப்படும் பிப்ரவரி 14 ஆம் நாளும் சீனாவில் இளைய தலைமுறைகளிடையேத் தற்போது காதலர் நாளாகக் கொண்டாடப்படுகிறது. மேலும், இது சீனாவில் சற்று வித்தியாசமாகக் கொண்டாடப்படுகிறது. பொதுவாக, பெண்கள் தாங்கள் விரும்பும் ஆண் நண்பர்களுக்கு சாக்லேட்டைப் பரிசாகக் கொடுத்து, அவர்களிடம் அன்பைக் காட்டிப் பேசுகின்றனர். ஒரு மாதத்திற்குப் பிறகு, அதாவது மார்ச் 14 அன்று அந்த ஆண் நண்பர், தனக்கு சாக்லேட் பரிசளித்த பெண்ணிற்கு வெள்ளை நிற சாக்லேட்டைக் கொடுத்து, அன்பையும் பல பரிசுப் பொருட்களையும் திரும்பத் தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மார்ச் 14, வெள்ளைக் காதலர் நாள் என்றழைக்கப்படுகிறது. வெள்ளைக் காதலர் நாள் முதலில் 1970 ஆம் ஆண்டில் ஜப்பான் மிட்டாய் தொழிற்சாலைகளில் உருவாக்கப்பட்டு, கிழக்கு ஆசியா முழுவதும் பரவியது என்று சொல்லப்படுகிறது.
இதே போன்று, ஒப்பொலி (Homophone) என்பது ஒரு சொல் மற்றொரு சொல்லைப் போலவே ஒலிக்கக்கூடியது. ஆனால், வேறு பொருள் மற்றும் / அல்லது எழுத்துப்பிழை கொண்ட ஒரு சொல்லாக அது இருக்கும். உதாரணமாக, ஆங்கில மொழியிலான "Flower" மற்றும் "Flour" ஆகிய இரு சொற்களும் ஒப்பொலி என்றழைக்கப்படுகின்றன. ஏனெனில், அவை ஒரே மாதிரியாக உச்சரிக்கப்படுகின்றன.
சீனாவில் ஒப்பொலி சொற்கள் பல உருவாக்கப்பட்ட போது, மே 20 ஆம் நாள் மற்றும் 520 எனும் எண் ஆகியவை ஒரே மாதிரியான உச்சரிப்பைக் கொண்டிருந்தன. 520 எனும் எண் சீன மொழியில், “நான் உன்னை விரும்புகிறேன்” (I Love You) என்பதைப் போல் ஒலித்ததால், மே 20 ஆம் நாள், சீனாவில் மற்றொரு காதல் நாளாக மாறியிருக்கிறது. இந்நாள் திருவிழாவாகக் கொண்டாடப்படுவதில்லை எனினும், காதலர்களுக்கிடையேத் தகவல் குறிப்புகள், பரிசுகள் போன்ற பரிமாற்றங்கள் செய்து கொள்ளும் நாளாக மாற்றம் பெற்றிருக்கிறது.