உலகில் ஆழமாக வறுத்ததாக அறியப்பட்ட முதல் உணவு பஜ்ஜிதான். ஐரோப்பிய இடைக்காலத்தில் பஜ்ஜி மிகவும் பிரபலமான வறுத்த உணவாக இருந்தது. இருப்பினும், ஸ்காட்டிஷ் மக்கள் தங்கள் கோழியை மசாலா இல்லாமல் கொழுப்பில் ஆழமாக வறுத்து உண்டு வந்தனர். அதே வேளையில், மேற்கு ஆப்பிரிக்க மக்கள் கோழியைப் பதப்படுத்தி, அதில் சில மசாலாக்களைச் சேர்த்து உண்டு கொண்டிருந்தனர்.
இந்நிலையில் தென்னமெரிக்கப் பகுதியிலிருந்த ஸ்காட்டிஷ் மக்களின் கோழி வறுப்பதற்கான முறைகளுடன், அங்கிருந்த மேற்கு ஆப்பிரிக்க மக்கள் பயன்படுத்திய சுவையூட்டும் முறைகளும் ஒன்று சேர்க்கப்பட்டுப் புதிய கோழி வறுவல் முறை உருவாக்கப்பட்டது. கோழியைச் சுவையூட்டும் மசாலாக்கள் சேர்த்து வறுத்துச் சாப்பிட்ட அமெரிக்கர்களுக்கு, சுவையான வறுத்த கோழி மிகவும் பிடித்துப் போய்விட்டது. அதன் பிறகு, அமெரிக்கா முழுவதும் வறுத்த கோழிக்கு வரவேற்பு பெருகியது. தற்போது வறுத்த கோழி அமெரிக்கர்களின் சிறப்பு உணவாகவும் மாறிப் போய்விட்டது.
இளம் பெட்டைக் கோழிகள் அல்லது சேவல்கள் (விடலைக் கோழிகள்) மட்டுமே அதிக வெப்பத்திற்கும், வேகமாக வறுக்கவும் ஏற்றதாக இருந்தன. வயது அதிகமான மற்றும் கடினமான கோழிகளுக்கு குறைந்த வெப்ப நிலையில் நீண்ட சமையல் நேரம் தேவைப்பட்டது. இதனை ஈடு செய்ய, சில நேரங்களில் கடினமான பறவைகள் மென்மையாகும் வரை வேகவைக்கப்பட்டு, அதனைக் குளிர வைத்து, பின்னர் அதனை உலர்த்தி, அதன் பின்னர் வறுக்கப்பட்டது.
20 ஆம் நூற்றாண்டில், விரைவு உணவுத் தொழில் ஏற்றம் பெறத் தொடங்கியக் காலத்தில், கெண்டகி வறுத்த கோழி (Kentucky Fried Chicken - KFC) மற்றும் பாப்எய்ஸ் (Popeyes) போன்ற கோழி உணவுத் தயாரிப்பு நிறுவனங்கள் அமெரிக்காவில் தொடங்கப்பெற்று, தங்களது சந்தையை விரிவுபடுத்தின. பிற்காலத்தில் இந்நிறுவனத் தயாரிப்புகள் அமெரிக்காவைத் தொடர்ந்து, உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டன.
கோழி உற்பத்தி உலகம் முழுவதற்குமான தொழில் மயமான பின்பு, கோழி உற்பத்தியில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, புதிய வகையிலான இறைச்சிக் கோழிகள் (Broiler Chicken) கண்டறிந்து உருவாக்கப்பட்டன. இறைச்சிக் கோழிகள் விரைவாக வளரக் கூடியதாகவும், கறி கடினமில்லாமலும், வறுப்பதற்கு ஏற்றதாகவும் உருவாக்கப்பட்டிருந்ததால், உலகம் முழுவதும் இறைச்சிக் கோழிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இன்று, இறைச்சிக் கோழிகள் அசைவ உணவாளர்களின் விருப்ப உணவாகி விட்டன.
உலக அளவில் 2024 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பில் இறைச்சிக் கோழி உற்பத்தியில், அமெரிக்கா 21,395 ஆயிரம் மெட்ரிக் டன்களுடன் முதலிடத்தில் இருக்கிறது, பிரேசில் 15,100 ஆயிரம் மெட்ரிக் டன்களுடன் இரண்டாமிடத்திலும், சீனா 13,870 ஆயிரம் மெட்ரிக் டன்களுடன் மூன்றாமிடத்திலும், ஐரோப்பிய ஒன்றியம் 11,110 ஆயிரம் மெட்ரிக் டன்களுடன் நான்காமிடத்திலும், ரசியா 4,950 ஆயிரம் மெட்ரிக் டன்களுடன் ஐந்தாமிடத்திலும், மெக்சிகோ 4,000 ஆயிரம் மெட்ரிக் டன்களுடன் ஆறாமிடத்திலும், தாய்லாந்து 3,490 ஆயிரம் மெட்ரிக் டன்களுடன் ஏழாமிடத்திலும், துருக்கி 2,380 ஆயிரம் மெட்ரிக் டன்களுடன் எட்டாமிடத்திலும், அர்ஜென்டினா 2,420 ஆயிரம் மெட்ரிக் டன்களுடன் ஒன்பதாமிடத்திலும், எகிப்து 2,000 ஆயிரம் மெட்ரிக் டன்களுடன் பத்தாமிடத்திலும், கொலம்பியா 1,905 ஆயிரம் மெட்ரிக் டன்களுடன் பதினொன்றாமிடத்திலும் இருக்கின்றன. பிற நாடுகளில் 21,531 ஆயிரம் மெட்ரிக் டன்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
உலகம் முழுவதும் இறைச்சிக் கோழி அதிக அளவில் வறுத்தே உண்ணப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.