தாய்லாந்து நாட்டின் அலங்கார வடிவமைப்புடைய மலர் மாலையினை ‘புவாங் மாலை’ (Phuang Malai) என்கின்றனர். இம்மாலை பெரும்பான்மையாக நல்ல அதிர்ஷ்டத்திற்காகவும், காணிக்கையாகவும் பயன்படுத்தப்படுகின்றன.
புவாங் மாலையை முதலில் உருவாக்கியவர் யார்? என்பதற்கான எழுத்துப்பூர்வ ஆதாரங்கள் எதுவும் இல்லை. இருப்பினும், அரசர் சுலாலாங்கார்ன் ஆட்சிக் காலத்தில் புவாங் மாலைகள் இருந்ததாகக் குறிப்புகள் இருக்கின்றன. சுகோத்தாய் இராச்சியத்தில் நிகழ்வுகள் மற்றும் விழாக்கள் பற்றிய தகவல்களைக் கொண்ட பன்னிரண்டு மாத அரச விழாக்கள் குறித்து, பரா ராட்ப்கிதி சிப் சாங் டியூன் என்ற மன்னர் எழுதிய ஒரு இலக்கியப் படைப்பு இருந்தது. அதில். 4-வது மாத விழாவில், மன்னரின் தலைமைத் துணையமைச்சர் தாவோ சிச்சுலலக் என்பவர் புதிய மலர் மாலைகளைத் தயாரித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன் பின்னர், இரத்தனகோசின் இராச்சியத்தில் புவாங் மாலை, ஒவ்வொரு விழாவிலும் ஒரு முக்கியமான அலங்காரப் பொருளாக மாறியது. அரண்மனையில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் புவாங் மாலை தயாரிக்கும் திறன்களைப் பெற்றிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ராணி சவோபா போங்ஸ்ரீ, பல்வேறு சிக்கலான வடிவமைப்புகளைப் புகுத்தி, பல புதிய புவாங் மாலைகளை உருவாக்கினார் என்கின்றனர்.
புவாங் மலாய் வடிவங்களை ஆறு குழுக்களாகப் பிரிக்கின்றனர்.
1. உயிரின மாலை - இம்மாலை விலங்குகளின் தோற்றத்தை ஒத்திருக்கும். பூக்கள் எலி, முயல், அணில் மற்றும் கிப்பன் போன்ற விலங்குகளின் வடிவங்களாக அமைக்கப்படும்.
2. சங்கிலி மாலை - இம்மாலை ஒரு தொடர் வட்டமுடைய மாலையாகும். இது ஒரு சங்கிலியை ஒத்திருக்கும்.
3. சடை மாலை - இரண்டு வட்டமான மாலை ஒன்றாக இணைக்கப்பட்டு, அதன் ஒவ்வொரு முனையிலும் பைன் வடிவ மாலை அலங்கரிக்கப்பட்டிருக்கும்.
4. கொடி மாலை - ஒரு கொடியின் வடிவத்தில் அமைக்கப்பட்ட அரை வட்ட மாலை ஆகும்.
5. சரிகை மாலை - இம்மாலை முழுவதும் உள்ளும் புறமும் இடையிடையே தங்கச்சரிகை மற்றும் வெள்ளிச் சரிகையைச் செருகி, அலங்கரிக்கப்பட்ட ஒரு மாலை ஆகும்.
6. ஆர்க்கிட் மாலை - ஆர்க்கிட் மலர்களால் மட்டுமேத் தயாரிக்கப்படும் மாலையாகும்.
புவாங் மாலையின் பயன்பாட்டினை மூன்று வகைகளாக வகைப்படுத்துகின்றனர். அவை;
1. மாலை சாய் தியோ
பொதுவாக, மரியாதையைக் காட்டக்கூடிய ஒன்றாகவும், காணிக்கையாகவும் இம்மாலை பயன்படுத்தப்படுகிறது. கோயில்களிலும் கல்லறைகளிலும், இந்த மாலையானது பௌத்தத் துறவி சிலைகளின் கைகளில் இருந்து பிரார்த்தனை மெழுகுவர்த்திகளுடன் தொங்குவதைக் காணலாம். சங்கிலி மாலை, சடை மாலை ஆகியவை மாலை சாய் தியோவின் எடுத்துக்காட்டுகளாகும்.
2. மாலை சாங் சாய்
பொதுவாக, ஒரு நபரின் முக்கியத்துவத்தைக் குறிக்க, அந்த நபரின் கழுத்தில் அணியப்படும் மாலையாகும். தாய்லாந்தின் திருமண விழாவில், மணமகன், மணமகள் என்று மணமக்கள் இருவரும் சாங் சாய் மாலையே அணிவார்கள்.
3. சாமுராய் மாலை
சாமுராய் மாலை என்பது அடையாளமான மாலை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மாலை சிறிய வடிவமுடையது. வழக்கமாக பெரிய மக்கள் குழு ஒன்றின் அடையாளத்திற்காக வழங்கப்படுகிறது. இந்த மாலை வழக்கமாக, ஒரு புரவலரால் வழங்கப்படுகிறது, உதாரணமாக, திருமண விழாக்கள், இல்ல விழாக்கள், பிறந்தநாள் விழாக்கள், பெயர் சூட்டு விழா ஆகியவற்றில் அணியப்படுகிறது. உயிரின மாலை இத்தகைய சாமுராய் மாலையாக அணியப்படுகிறது. ஹவாய் கலாச்சாரத்தில் அன்பைக் காட்டுவதற்காக அணியப்படும் லீ மாலை போன்றே இந்த சாமுராய் மாலையும் அன்பைக் காட்டும் அடையாளமாக அணியப்படுகிறது.
மேலும் புவாங் மாலைகள் காணிக்கைகள், பரிசுகள், நினைவு பரிசுகள் வழங்க என இன்னும் பல செயல்பாடுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. அரியணை, அரங்குகள் மற்றும் வீடுகளை அலங்கரிக்வும் அவை பயன்படுத்தப்படுகின்றன. தாய்லாந்தின் இசை நிகழ்ச்சிகளில் அந்தக் கருவிகளின் உரிமையாளர்களுக்கு மரியாதை செலுத்துவதற்கும், அந்த இசைக்கருவிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், நிகழ்வில் நல்ல அதிர்ஷ்டம் மற்றும் வெற்றிக்காகவும் தாய்லாந்து இசைக் கருவிகளில் புவாங் மாலை தொங்கவிடப்படுகிறது.
மூங்கில் மாலைகள்
தாய்லாந்தின் மூங்கிலால் நெய்யப்பட்ட அலங்கார மாலைகள் சில சமயம் காணிக்கையாகச் செலுத்தப்படுகின்றன. சில நேரங்களில், இந்த மூங்கில் மாலைகள் மலர் மாலைகளுக்கு மாற்றாகவும், மற்றப் படையல்களைத் தொங்கவிடவும் பயன்படுத்தப்படுகின்றன. தாய்லாந்தின் வடகிழக்கில் கலசின் மாகாணத்தின் குச்சினராய் மாவட்டத்தில் உள்ள குட் வா கிராம மக்களிடையே 'பூ தாய்' என்ற மரபு விழாவின் ஒரு பகுதியாக, மூங்கில் மாலைகள் அதிக அளவில் பயன்பாட்டிலுள்ளன. மேலும், தாய்லாந்தின் மழைக்காலத்தில் பௌத்தர்களின் நோன்புக்கால பண்டிகையிலும், மூங்கில் மாலைகள் பயன்படுத்தப்படுகின்றன, அவை “பன் காவ் பிரதாப் தின்” அல்லது “பன் புவாங் மலாய் பான் குட் வா” என்று அழைக்கப்படுகின்றன.
‘பூ தாய்’ விழாவைக் கொண்டாட, குட் வா கிராமவாசிகள் அலங்கரிக்கப்பட்ட மாலைகளை உருவாக்கி, வாட் கோக்கைச் சுற்றி ஊர்வலம் செல்வார்கள். தங்கள் கைவேலைகளைக் காண்பிப்பதற்காக, தாள இசையும் பாடலும் ஒலிக்க அதற்கேற்ப ஆடிக்கொண்டே இந்த ஊர்வலமானது நடைபெறுகிறது.