இறந்த பின் மனித உடலை அடக்கம் செய்யும் முறையே சமாதி என்று நாம் பொதுவாகக் கருதுகிறோம். ஆனால், சமாதி என்பதற்குச் சித்தர்களின் விளக்கம் முற்றிலும் வேறானதாகும். சமம் + ஆதி = சமாதி. அதாவது இறைவனுக்குச் சமமாதல் என்பதேச் சமாதி எனப்படும். இதில்,
1. இறந்த பின் செய்யப்படும் சமாதிகள்
2. ஜீவ சமாதி
3. இருத்தி முக்தி சமாதி.
எனும் மூன்று வகைகள் உள்ளன.
I. இறந்த பின் செய்யப்படும் சமாதி வகைகள்
இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில், மனிதர்கள் இறந்த பின் செய்யப்படும் சமாதி நிலைகளில் மூன்று வகைகள் உள்ளன. இந்தியாவிற்கு இஸ்லாமும் கிறிஸ்தவமும் வருவதற்கு முன்பிருந்தே நில சமாதி, நீர் சமாதி (ஜல சமாதி), அக்கினி சமாதி என மூன்று வகைச் சமாதிகள் கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளன.
1. நில சமாதி (நிலத்திற்கு உள்ளே அல்லது மேலே அடக்கம் செய்தல்)
மனிதர்கள் இறந்த பின் உடலை நேரடியாக மண்ணில் புதைத்து அல்லது பேழைகளில் வைத்துக் கல்லறையில் வைக்கும் நில சமாதி இவ்வகையைச் சார்ந்தது. இதில், இறந்த பின்பு அவரவர் பாவ புண்ணியச் செயலுக்கு ஏற்ப மோட்சம் அல்லது நரகம் செல்வார் என்பது பலரின் நம்பிக்கை. ஆகையால் இறந்தவரின் உடலைப் பேழையில் வைத்துக் கல்லறை கட்டி அடக்கம் செய்கின்றனர்.
இறந்து போனவர் மீண்டும் உயிர் பெறுவார் அல்லது மேல் உலகம் செல்வார். எனவே, அவரது உடலைக் கெடாமல் பாதுகாக்க வேண்டும் என்பது ஒருவகை நம்பிக்கை. ஆகையால் எகிப்தில் உடலைப் பதப்படுத்தி பெரும் சமாதிகளாகப் பிரமிடுகள் கட்டப்பட்டன. அன்பின் மிகுதியால் தனது மனைவியின் உடலுக்கு இஸ்லாம் முறைப்படிக் கட்டப்பட்ட சமாதிதான் தாஜ்மஹால். இது போன்றுப் பல சமாதிகள் உள்ளன. இன்றும் பல புகழ் பெற்றத் தலைவர்களுக்கும், ஆன்மீகப் பெரியவர்களுக்கும் நினைவிடங்கள் கட்டப்படுகிறது. இது பூமி அல்லது நில சமாதி என அழைக்கப்படும்.
சில பழங்குடியினர் மலைகளின் உச்சிக்கு இறந்தவர்களின் உடலை எடுத்துச் சென்று வெட்ட வெளியில் வைத்து விடுகின்றனர். ஜைனர்கள் இறந்தோரின் உடலைப் பாறைகளில் கிடத்திப் பறவைகள் உண்ணும்படி செய்கின்றனர். இன்றும் அமெரிக்காவில் அவரவரின் பொருளாதார நிலைக்கு ஏற்ப, 80 ஆயிரம் டாலர்கள் செலவு செய்து, உடலைப் பதப்படுத்திப் பாதுகாக்கும் வழக்கம் சிலரிடம் உண்டு. பிற்காலத்தில் இவரின் உடலை உயிர்ப்பிக்கும் தொழில்நுட்பம் வரும் என்ற நம்பிக்கையே இதற்குக் காரணம். இதற்கு, Cryogenic Body Preservation என்ற நவீனத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. ஒரு கிறிஸ்தவப் பாதிரியாரின் உடல், கோவாவில் உள்ள தேவாலயத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதுவே பூமிக்கு மேல் சமாதி ஆகும்.
2. நீரில் சமாதி (நீரில் அடக்கம் செய்தல் - ஜல சமாதி)
இறந்த உடல் பிற உயிர்களுக்கு உயிர் வாழப் பயன்படுமென்று மீன்களுக்கும் நீர்வாழ் உயிர்களுக்கும் உணவாக்கும் முறைகளும் உண்டு. இறந்தவர் உடலை நதி அல்லது கடலில் அடக்கம் செய்வது உண்டு. கங்கையில் உடலைச் சமாதி செய்தால், மீன்களும் முதலைகளும் உடலை உண்ணும். உடலுக்குச் சொந்தக்காரர் மோட்சம் செல்வார் என்ற நம்பிக்கை உள்ளது. இதை நீர் சமாதி (ஜல சமாதி) என்பார்கள்.
3. அக்கினி சமாதி (நெருப்பில் எரியூட்டிச் சாம்பல் ஆக்கி நீரில் கரைத்தல்)
இறந்தவர் உடலை எரித்து அந்தச் சாம்பலைப் புனிதத் தீர்த்தங்களில் கரைத்தால் மோட்சம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆகையால் கங்கை (காசி) அல்லது புண்ணிய நதிகள் மற்றும் கடல் (இராமேஸ்வரம்) ஆகிய இடங்களில் எரிக்கப்பட்ட உடலின் அஸ்தி கரைக்கப்படுகிறது. இது அக்கினி சமாதி.
இத்தகைய சமாதிகள் அவரவர் மத, கலாச்சார, நம்பிக்கை மற்றும் பொருளாதார நிலைக்கு ஏற்பச் செய்யப்படுகிறது. ஆனால், இவையெல்லாம் சித்தர்களின் நெறியில் சமாதி அல்ல. "செத்தப் பின்பு முத்தி என்பார் எத்தரப்பா" என்பர் சித்தர்.
II ஜீவ சமாதி வகைகள்
மீண்டும் பிறவாமல் முக்தி அடைய, தானே உருவாக்கியக் கல்லறையில் சமாதி அடைதலே ஜீவசமாதி என்று அழைக்கப்படும்.
1. திரும்பி வராமல் உயிருடன் அடங்கும் ஜீவ சமாதி
ஆன்மீகக் குரு, தனதுப் பிறவியின் கடமைகள் முடிந்த பின் தனது உலகப் பயணத்தை முடித்துக் கொள்வது. தான் சமாதி செல்வதை உலகிற்குச் சொல்லி அவர் மீது பற்று கொண்ட அனைவருக்கும் செய்தி தெரிவிப்பார். தனது சமாதியைக் கட்டி வைத்து, ஒரு குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் அதனுள் அமர்ந்து, கற்பூரம், விபூதி முதலியப் பொருட்களால் உடலை மூடி, அதன் மேல் கருங்கல் பலகையால் மூடிவிடுவார்கள். இத்தகைய ஜீவசமாதி அடைந்தவர் இராகவேந்திரர் மற்றும் பலர்.
2. மூடப்பட்ட சமாதியிலிருந்து மீண்டும் வரும் சித்தயோக சமாதி
அஷ்டமா சித்திகளைப் பெற்று முக்தி அடைந்து, சித்தர்கள் பல சித்து விளையாடல்களைச் செய்து, உலகிற்குப் பல நன்மைகள் செய்வார்கள். தமது செயல்கள் முடிவடைந்தது என்று அவர்கள் உணர்ந்தால், சித்த யோகச் சமாதிக்குச் செல்வார்கள். இதற்கென தனிப்பட்டச் சமாதி அறையினைக் கட்டுவார்கள். தான் சமாதி செல்லும் நாளைக் குறிப்பிட்டும், தான் சமாதியில் இருந்து திரும்பி வரும் நாளைக் குறிப்பிட்டும் பிற சித்தர்களுக்கும், சீடர்களுக்கும் சொல்லி அனுப்புவார்கள்.
சமாதி செல்லும் நாளில் அனைவரின் முன்பாகச் சமாதிக்குள் செல்வார்கள். பின்பு முறைப்படிக் கல் பலகையால் மூடிவிடுவாரகள். சமாதி சென்ற சித்தர், முன்பேக் குறிப்பிட்ட ஒரு நாளில், கல் பலகையை விலக்கிக் கொண்டு வெளியே வருவார். பல்லாயிரம் ஆண்டுகள் கழித்துக் கூட இவ்வாறு வெளிவருவர். "நீராயிரம் ஆண்டுகள், நிலமாயிரம் ஆண்டுகள்" என்பர் சித்தர். போகர் பழனியில் சமாதி சென்றார். சமாதியிலிருந்துத் திரும்பி வந்து வேறு தேசம் சென்று விட்டார். அவர் மீண்டும் வருவார் என்று கோரக்கர் 'சந்திர ரேகை' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
காகபுசுண்டர் சமாதி செல்லவில்லை. பிரளயக் காலத்தில் காக வடிவம் பெற்று வாழ்வதாகச் சொல்லி உள்ளார். காக வடிவு என்பது பரிபாசை. பஞ்ச பட்சிகளில் காகம் என்பது உகாரம் ஆகும். உகாரம் என்பது சக்தி. சக்தி வடிவு என்பது ஒளி வடிவு.
இராமதேவர் அரேபிய தேசம் சென்று யாகோப்பு என்றுப் பெயர் பெற்றார். அங்கே சிலருக்குச் சித்தர் கல்வி கற்றுக் கொடுத்துச் சீடர்கள் பலரையும் உருவாக்கிய பின் திரும்பி வரும் போது 'சித்தர் சமாதி' சென்றார். 30 ஆண்டுகள் சென்ற பின் சமாதியில் இருந்து திரும்பி வந்தார். அரேபிய தேசத்தில் இருந்து மீண்டும் மதுரை அழகர் கோவிலுக்கு வந்து தவம் செய்து மீண்டும் திரும்பாத சமாதி சென்றார்.
3. மீண்டும் திரும்பிவராத சித்தர் சமாதி
நிலச் சமாதி சென்றுத் திரும்பிய சித்தர்கள் மீண்டும் திரும்பி வராத சமாதி செல்வார். இந்த நிலையில் உலகத்தவர்களிடம் தொடர்பு கொண்டு அவர்களை வழி நடத்தும் சித்தர்கள் துரிய தியான நிலையில் சமாதி இருப்பார்கள். எனவே, சித்தர்களுக்கு இரண்டு வகை சமாதிகள் உள்ளன. உதாரணமாக, கோரக்கர் நாகப்பட்டினம் புதுப்பட்டுவில் (பொய்கை புத்தூர்) சமாதி சென்று துரிய தியான நிலையில் இருப்பதாகச் சந்திரரேகை எனும் நூலில் சொல்லி உள்ளார். திருமூலர் சிதம்பரத்தில் சமாதி அடைந்தார். காலங்கிநாதர் அவரிடம் தியான நிலையில் சித்தர் கல்வி கற்றார்.
4. சிலர் ஒளி உடலுக்குச் செல்கிறார்கள்
III சீவன் முக்தி யோக சமாதி மற்றும் இருத்தி முகதியும் அதன் வகைகளும்
உயிருடனும் உடலுடனும் இறைவனுக்குச் சமமாக இருந்து பேரின்பம் அடைதல் அல்லது முக்தி அடைதல். அஷ்டாங்க யோகத்தில் எட்டாம் நிலையில் அடையும் யோக சமாதி. இதன்படிக் கிடைக்கும் முக்திக்கு 'இருத்தி முக்தி' என்று பெயர். இதன் வகைகளைப் பார்க்கலாம்.
1. சீவன் முக்தி
சித்தர்களில் காகபுசுண்டருக்குத் தனி இடம் உண்டு. பிரளயக் காலத்திலும் இறவாமை என்ற நிலையைப் பெற்றவர். பல பிரம்மாக்களைச் சந்தித்தவர். காகபுசுண்டர், தனது சீடர் வசிஷ்டரிடம்,
“பலவித யோக சமாதிகளில் இருந்த யோகியானவர், தனது மரணத்தின் நேரத்தை அறிவார். அவ்விதம் அறிந்த பின் தன்னை மண்ணால் மூடிக்கொள்வது சமாதி இல்லை, கல்லறை கட்டி அமர்வதும் சமாதி இல்லை. ஒளியுடல் பெற்று பிறர் அறியாமல் மறைந்து போவதும் சமாதி இல்லை. தான் இறந்த பின் அடக்கம் செய்வதும் சமாதி இல்லை” என்று சொல்கிறார்.
சமாதி பற்றி ஒவ்வொரு நூலிலும் பலவிதமாகச் சொல்லி உள்ளார்கள். இவையெல்லாம் சமாதி இல்லை என்றால் சமாதி என்பது எது? என்ற கேள்வி நமக்குள் எழுவது இயல்பு.
எதையும் விரும்பாத யோகி, வாசியோகச் சமாதியை இன்பமாகச் செய்துப் பழகியவர் மட்டுமே பிராண ஓட்டம் அல்லது உயிரின் சித்து என்ற சமாதி செய்ய முடியும். உயிர் என்றப் பிராணன் மூச்சுக் காற்றில் இருந்து, அது அசைந்தாடும் விதத்தை அறிய வேண்டும். அதாவது, மூச்சுக் காற்று வெளியேயும், உள்ளேயும் ஓடவிடாமல் (அதாவது பூரகம், ரேசகம் இல்லாமல்) கும்பகம் மட்டும் செய்வதாகும். இதன்படி மூச்சுக் காற்றாகிய பிராணனைக் கும்பகத்திலே உள்ளுக்குள்ளே ஒவ்வொரு ஆதாரத் தலத்திலும் ஏற்றி அங்கங்கேத் தடுத்து நிறுத்தி, மூலாதாரத்தில் இருந்து சுழிமுனைக்கு ஏற்றி, மீண்டும் பிடரி வழியாக மூலாதாரத்திற்கு இறக்கிச் சுழலச் செய்வது ஆகும். இதன் பெயர்தான் பிராண ஓட்டம் எனப்படும். இந்த நிலை அடைதலே சமாதி ஆகும்.
இந்தச் சமாதி நிலையில் சுவாசமும் இருக்காது, நாடித் துடிப்பும் இருக்காது. வாசியும் இருக்காது. ஒன்பது வாசல்களும் அடைக்கப்பட்டு இருக்கும். பத்தாம் வாசல் மட்டும் திறந்திருக்கும். அதன் வழியே உடலை உயிருடன் வைத்திருப்பதற்கான 32 கலைகள் சக்திப் பிரபஞ்சத்திலிருந்து கிடைக்கும். உயிர் ஆனந்தத்தில் திளைத்திருக்கும். இதைச் செய்பவர் சிவனுக்கும் பெருமாளுக்கும் ஒப்பாகச் சித்து விளையாடுவார்கள். இதுவே முக்தி. இதுவே சீவன் முக்தி. அதாவது உயிருடன் முக்தி அடைதல். இதுவே உயிரின் சித்து. இதன்படியே, இராமானுஜர் ஸ்ரீரங்கம் கோவிலின் வெளிப்பிரகாரத்தில் சுமார் ஆயிரமாண்டுகளாக சீவன் முக்தராக அமர்ந்துள்ளார் என்கின்றனர்.
இராமானுஜர் இந்த அறிவைக் காகபுசுண்டரிடம் பெற்றார் என்பர். காகபுசுண்டரின் மாணவர் வசிஷ்டரின் பேரன் பராசரர், வசிஷ்டரிடம் காயசித்தி கற்றார். பராசரர் தமது மகன் வேதவியாசருக்குச் சாகாக் கல்வியை உபதேசித்தார்.
வேதவியாசர் பிரம்ம சூத்திரம் என்ற நூலை இயற்றினார். அந்தப் பிரம்ம சூத்திரம் என்ற நூலில், உடல் அழியாமை அல்லது மரணமற்றத் தன்மையைப் பற்றிப் பிரணவ சூத்திரம் என்ற நூலை எழுதினார். இந்த நூல் யமுனாச்சாரியார் என்ற இராமானுஜரின் மானசீகக் குருவிடம் இருந்தது. இது பரிபாசையாக இருந்தது. இதற்கு யாரும் பாஷ்யம் என்ற உரை எழுத முடியவில்லை. யமுனாச்சாரியார் இந்நூலை இராமானுஜரிடம் கொடுத்து உரை எழுதப் பணித்துவிட்டு மரணித்தார். இதன்படி இராமானுஜர் இதற்கு உரை எழுதினார். காய சித்தி என்ற சித்தர் கல்வியைக் கற்று சித்தர்வழியில் நடந்து சித்தராகி, ஜீவன் முக்தராக இன்றும் நம்மிடம் இருக்கிறார்.
2. யோக சமாதி
இறைவனை நம்மிடம் இருந்துப் பிரிக்கும் துன்பச் செயலுக்குக் காரணமாகிய காமம், குரோதம், மதம், மாச்சர்யம், ஆணவம், மாயை, கன்மம் ஆகிய ஏழு காரிய காரணங்களைக் கடக்க வேண்டும். ஆரிய காரணம் என்ற இறைவனைச் சேர வேண்டும் என்ற காரணத்திற்காக இயம, நியம, ஆசன, பிராணாயாம, பிரத்தியாகார, தாரணை, தியானம் ஆகிய ஏழு தாரிய காரணங்களைச் செய்ய வேண்டும். இவ்விதம் ஏழு தவ நிலைகளைக் கடந்துத் தற்பரம் என்ற நம்முள் ஒளிவடிவாய் இருக்கும் இறைவனை சேர்தல்தான் யோக சமாதி ஆகும். அதாவது, ஆதியான இறைவனுக்குச் சமமாக ஆவதுதான் சமாதி ஆகும் என திருமூலர் அறுதியிட்டுக் கூறுகிறார்.
மனிதப் பிறப்பில் மூலாதாரத்தில் சூரியகலை 12 கலைகள் சக்தியாக அல்லது விந்துச் சக்தியாக உள்ளது. இடகலையில் சந்திரகலை 16 கலைகள் சக்தியாக உள்ளது. இரண்டும் சமநிலை பெறவில்லை. வாசியை உருவாக்கி வாசியோகப் பிராணாயாமம் செய்தால் தார கலை என்ற விந்துச் சக்தி கொண்ட நான்குக் கலைகள் உருவாகும். ஆக விந்துக் கலை 16 கலைகளாக இருக்கும். இம்மூன்றும் ஆறு ஆதாரப் புள்ளிகளையும் கடந்து மேரு என்ற சுழிமுனையை அடையும். இம்மூன்றும் நாதம் விந்து என்ற சமமான சக்தியாகச் சக்திச் சமநிலை உச்சம் பெறும்.
விந்துச் சக்தியும் நாதச் சக்தியும் மேரு என்ற சுழிமுனையில் இணைந்து உச்சம் பெறும். அப்போதுதான் சமாதி நிலை ஏற்பட்டுச் சமாதி கைகூடும். அப்பொழுது மூச்சு ஓடாது. நாடித் துடிக்காது. ஆனால் உயிர் இருக்கும், இன்பமாக இருக்கும். அப்பொழுது அறிவால் அறியமுடியாத அழகிய இறைச் சக்தியானது ஒளிவடிவில் (சுந்தர ஜோதி) தோன்றும். இவ்விதம் இறைவன் ஒளிவடிவில் தோன்றும் சமாதி நிலைகள் ஐந்து என்று அகத்தியர் சொல்கிறார். அவைகளை விளக்குகிறார் காகபுசுண்டரின் மாணவர் ரோமரிஷி. இந்த ஐந்துவிதச் சமாதிநிலைகளைக் கண்டவர்கள், கருணை மிக்க தேவரிஷி என்ற முனிவர் என்ற நிலை அடைந்தவர்கள் ஆவர்.
* தத்துவலய சமாதி அல்லது தத்துவ சமாதி
96 தத்துவங்களைக் கடந்து அவற்றை எரித்து ஒடுக்க வேண்டும். இவ்வாறு 96 தத்துவங்களும் ஒடுங்கப் பெற்று, தன்னுள் ஒளி வடிவ இறைவனைக் காணல் தத்துவ சமாதி எனப்படும்.
* சவ்விகற்ப சமாதி
96 தத்துவங்களும் ஒடுங்கப் பெற்று, தன்னுள் ஒளியினை கண்டு, அந்நிலையில் ஓசை கேட்டல் சவ்விகற்ப சமாதி எனப்படும். இதை சந்தானு வித்தை என்றும் சொல்லுவார்கள். இதில் இறைவனை உருவமாகக் காண இயலும். இதைக் கைவல்ய சமாதி என்றும் சொல்வர். இந்நிலையில், தான் வேறு, தெய்வமெனும் பூரணமாகிய ஒளி வேறு என்ற உணர்வு இருக்கும். இது துவைத நிலை.
* நிர்விகற்ப சமாதி
மேற்சொன்ன நிலைகளில் முதிர்ந்த பின், தன்னுள் 96 தத்துவங்களும் ஓசையும் ஒடுங்கும், உருவ வடிவம் மறைந்து விடும். இந்த நிலையில் ஒளியாகிய பூரணத்துடன் தன்னையும் ஒளியாக மாற்றி இணைந்து விடல் நிர்விகற்ப சமாதி ஆகும். இந்த நிலை தூக்கம் போன்றதும், மயக்கம் போன்றதுமாகிய நிலை.
மேற்கண்ட நிலையைத் திரயாணு வித்தை என்று அழைப்பர். இதில் பஞ்சபூதங்களின் இயக்கம் இருக்காது. பஞ்சபூதங்களுக்கு முந்தைய பஞ்ச வித்துக்களின் இயக்கம் மட்டுமே இருக்கும். ஒளியும் இராது. ஒலியும் இராது. இந்நிலை யோகியானவன், அணுக்களாகப் பிரிந்து அணுக்களாக உள்ள இறைநிலையுடன் கலந்திருக்கும் நிலையாகும். இது அத்வைத நிலை. ஜீவாத்மாவும் பரமாத்மாவும் இணைந்து, இரண்டுமற்ற நிலை. அத்துவித நிலை. தானே சிவன் ஆதல். தான் அவன் ஆதல் என்ற நிலை.
இதில் 1. லயம், 2. விட்சேபம், 3. மனோராசியம், 4. சுவாகம் எனும் நான்கு வகைகளைச் சொல்லுவார்கள்.
1. லயம்
தத்துவ சமாதி முதிர்ந்து படிப்படியாக உயர்ந்து, தான் வேறு தெய்வம் வேறு என்ற எண்ணம் மறைந்து விடுதல் லயம் எனப்படும். ஓங்கார ஒலி மட்டும் தொடர்ந்து ஓங்கி ஒலித்துக் கொண்டே இருக்கும். இத்தகைய இறைவனின் ஓங்கார ஒலியுடன் தத்துவங்கள் அனைத்தும் ஒன்றிவிடல் இந்நிலையினைச் சார்ந்தது.
2. விட்சேபம்
லயம் முதிர்ந்து ஒலியுடன் தத்துவங்கள் ஒன்றி, சிறிது நேரம் உணர்வற்று தூங்கிய நிலையை அடைந்து, பிறகு விழித்தல் விட்சேப நிலை ஆகும். இது துரியாதீத நிலை எனவும் அழைக்கப்படும்.
3. மனோராசியம்
விட்சேபம் எனும் நிலை கடந்து, மனதின் தொகுப்பான அந்தகரணங்கள் நான்கும் மயக்க நிலை அடைவது மனோராசியம் ஆகும். இது மனமற்ற நிலை அன்று. மனம் அழிந்தால் உடல் அழியும். எனவே, இந்நிலை தற்காலிகமாக மனமற்ற நிலை போன்ற தோற்றம் எனலாம். தூங்காமல் தூங்கி சுகம் பெறும் நிலை இதுவாகும்.
4. சுவாகம்
மனோராசியம் நிலை கடந்து அந்தகரணங்களும் அறிவும் ஒளியுடன் இணைந்து தானே ஒளியாதல் சுவாகம் ஆகும். தத்துவங்கள் ஒளியில் கரைந்துவிடும். தானே தற்பரம் என்றத் தன்னுள் இருக்கும் இறைவனாக மாறுதல் ஆகும். இதுவே தான் அவன் ஆதல் நிலை என கூறப்படும்.
* சஞ்சார சமாதி
96 தத்துவங்களும் ஒடுங்கப் பெறுகிறோம்; தன்னுள் ஒளி காண்கிறோம்; பின் அணு நிலை அடைகிறோம்; இத்தகைய நிர்விகற்பச் சமாதியின் அடுத்த நிலை சஞ்சார சமாதி ஆகும். இதில் சாதகர் தன்னை அணு அணுவாகப் பிரித்துச் சஞ்சாரம் செய்வார். இதற்கு அணுசந்தானம் என்றுபெயர். இவ்விதம் பிரபஞ்சப்பயணம் செய்தவர்களுள் திருமூலரின் பிரபஞ்சப்பயணம் பற்றி விரிவாக siddharyogam.com வலைதளத்தில் "சித்தர் என்பவர் யார்" என்ற பகுதியில் உள்ளது.
* ஆரூட சமாதி
மேற்சொன்ன நான்கு நிலைகளைக் கடந்த பின், மௌன யோகத்தில் அல்லது சஞ்சார சமாதி நிலையில் முதிர்ந்து, தானே அகண்டமான பிரபஞ்சமாக, சைதன்யமாக, பரப்பிரம்மமாக மாறிப்போதல் ஆரூட சமாதி ஆகும். தானே தொம்பதம் என்ற இறைவனாக மாறுதல் ஆகும். இந்த ஐந்து சமாதி நிலைகள் கைகூடச் செய்தால் தேவரிசி என்ற நிலையை அடையலாம் என்று சித்தர்கள் உறுதிபடக் கூறுகின்றனர்.