பன்னாட்டு நாள் கோடு (International Date Line) என்பது புவியின் பரப்பின் மீது பொதுவான வடக்கு - தெற்காக, பசிபிக் பெருங்கடலின் மையத்தில் செல்லுமாறு கற்பனை செய்யப்பட்டுள்ள ஓர் கோடு ஆகும். இதுவே ஒவ்வொரு நாட்காட்டி நாளும் தொடங்கும் இடமாக வரையறுக்கப்படுகிறது. இது பெரும்பாலும் 180° நில நிரைக்கோட்டில் அமைந்துள்ள போதும் சில ஆட்சிப்பகுதிகள் மற்றும் தீவுகளின் எல்லைகளைச் சுற்றிச் செல்லுமாறு வளைந்து செல்கிறது. இந்தக் கோடு கற்பனையாக இருந்த போதும் நிலையான கால எல்லையைப் புவிப்பரப்பில் வரையறுக்க மிகவும் தேவைப்படுகிறது.
கிழக்கிலிருந்து பயணிக்கும் போது பன்னாட்டு நாட்கோட்டை தாண்டுகையில் ஒரு நாள் அல்லது 24 மணி நேரம் கழிக்கப்படுகிறது. அதனால், பயணி மேற்கில் அந்நாளை மீண்டும் கழிக்கிறார். அதே நேரம் மேற்கிலிருந்து கிழக்கில் தாண்டுகையில் ஒரு நாள் அல்லது 24 மணி நேரம் கூட்டப்படும். அதனால், பயணி ஒருநாளை இழக்கிறார். எடுத்துக்காட்டாக, கிரிபத்தி மற்றும் ஹவாய் நாடுகள் பன்னாட்டு நாள் கோட்டின் வெவ்வேறு பக்கங்களில் உள்ளன. நீங்கள் கிரிபத்தியின் தலைநகரான தாராவாவிலிருந்து ஹவாயின் மாநிலத் தலைநகரான ஹொனலுலுவுக்குப் பயணம் செய்தால், கடிகாரத்தை 22 மணி நேரம் பின்னோக்கித் திருப்ப வேண்டும். குறைந்த பட்சம் நாட்காட்டியிலாவது சரியான நேரத்தில் பயணிக்க வேண்டும்.
ஒவ்வொரு நாடும் எந்த நேர மண்டலத்தைப் பின்பற்றுகிறது என்பதைப் பொறுத்து நேரம் மாறுபடுகிறது. இக்கோட்டின் இரு புறமும் நேர வேறுபாடு எப்போதும் 24 மணி நேரமாக இருக்காது. எடுத்துக்காட்டாக, பேக்கர் தீவிலிருந்து டோகெலாவ் வரையிலான நாள் கோட்டின் குறுக்கே 1061 கிமீ (659 மைல்) பயணம் செய்தால், நீங்கள் 25 மணிநேரம் அல்லது 1 நாள் மற்றும் 1 மணி நேரம் சேர்க்க வேண்டும்.
ஒவ்வொரு நாளும் 10:00 மற்றும் 10:59 ஒருங்கிணைந்த பொது நேரத்துக்கு (Coordinated Universal Time) இடையில், மூன்று வெவ்வேறு நாட்கள் உலகப் பயன்பாட்டில் வருகின்றன. எடுத்துக்காட்டாக, மே 2 ஆம் நாளன்று 10:30 ஒருங்கிணைந்த பொது நேரம் (UTC) என்று வைத்துக் கொண்டால், அமெரிக்கன் சமோவாவில் (UTC−11) மே 1 ஆம் நாளன்று 23:30 (இரவு 11:30 மணி) என்றும், நியூயார்க்கில் (UTC 4) மே 2 ஆம் நாளன்று 06:30 (காலை 6:30 மணி) என்றும், கிரிமதியில் (UTC +14) மே 3 ஆம் நாளன்று 00:30 (காலை 12:30 மணி) என்றும் மூன்று நாட்களாகவும், நேரமும் மாறுபட்டு இருக்கும்.
பன்னாட்டு நாள் கோடு என்பது பன்னாட்டுச் சட்டத்தில் வரையறுக்கப்படவில்லை. எனவே, சில நாடுகள் தங்களுக்கேற்ற வகையில் நாள் மற்றும் நேர மண்டலத்தைத் தேர்வு செய்து கொண்டிருக்கின்றன. 1994 ஆம் ஆண்டில், கிரிபத்திக் குடியரசு நாட்டின் நேர மண்டலங்களை 1995 ஆண்டு ஜனவரி 1 ஆம் நாளைத் தவிர்த்து, நாள் கோட்டின் கிழக்கே உள்ள நாட்டின் பகுதியில் சீரமைத்துக் கொண்டது.. பீனிக்ஸ் மற்றும் லைன் தீவுகளில் உள்ள கடிகாரங்களில் 24 மணி நேரத்தைச் சேர்த்து, நாள் கோட்டில் ஒரு பள்ளத்தை ஏற்படுத்தி, அதை 150° கிழக்கு தீர்க்கரேகைக்கு நகர்த்திக் கொண்டன.
2011 ஆம் ஆண்டில், சமோவா தனது நேர மண்டலத்தை ஒருங்கிணைந்த பொது நேரம்-11 (UTC-11) என்பதிலிருந்து ஒருங்கிணைந்த பொது நேரம்+13 (UTC+13) என்று மாற்றிக் கொண்ட்தன் மூலம் நாள் கோட்டை மேற்கு நோக்கி மாற்றி, 2011 ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் நாளை நாட்காட்டியிலிருந்து நீக்கியது. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துடனான வணிகத்தை எளிதாக்க அவர்கள் இதைச் செய்து கொண்டார்கள். இதேக் காரணங்களுக்காக டோகெலாவ் நாடும் சமோவாவைப் பின்பற்றி நேரத்தை மாற்றிக் கொண்டது.