வானில் தெரியும் விண்மீன்களையும் O, B, A, F, G, K, M ஆகிய இலத்தீன் குறியீடுகளால் குறித்து வகைப்படுத்தியிருக்கின்றனர். அதாவது, விண்மீன்களை அதனது நிறமாலையைக் கொண்டு வகைப்பாடு செய்திருக்கின்றனர். விண்மீனின் நிறமண்டலத்தில் ஏற்படும் அயனாக்கம் மற்றும் வெப்பநிலை மாற்றங்கள் காரணமாக நிறங்கள் வேறுபடுகின்றன. வெற்றுக் கண்ணால் விண்மீன்களைப் பொதுவாகப் பார்க்கும் போது, வெண்ணிறமானவை போலத் தோன்றினாலும் அவற்றை உற்று நோக்கினால் அல்லது தொலைநோக்குக் காட்டியின் உதவி கொண்டு நோக்கினால் நிற வேறுபாடுகளைக் கண்டறிய முடியும். சிவப்பு, நீலம், மஞ்சள் போன்ற நிறங்களில் விண்மீன்கள் ஒளிர்கின்றன.
விண்மீன்களில் “O“ வெப்பம் மிகவும் கூடியது, “M” வெப்பம் குறைந்தது. “O” விலிருந்து “M” வரை செல்லுகையில் வெப்பம் குறைந்து கொண்டேச் செல்கின்றது. உதாரணமாக, O -வை விட B -க்கு வெப்பம் குறைவு. இவ்வரிசை நிலையினை நினைவில் நிறுத்த, "Oh, be a fine girl/guy, kiss me" எனும் ஆங்கிலச் சொற்றொடரைப் பயன்படுத்துகின்றனர். இங்கு குறிப்பிடப்படும் “O“விலிருந்து “M” வரையிலான நிறங்களாக, O - நீலம், B - வெளிர் நீலம், A - வெள்ளை, F - வெளிர் மஞ்சள், G - மஞ்சள், K - செம்மஞ்சள் அல்லது ஆரஞ்சு, M - சிவப்பு என்று இருக்கின்றன.
மேக்நாத் சாகா எனும் இந்திய வானியற்பியலாளர் அயனியக்க சமன்பாடு மூலம் விண்மீன்களில் சில தனிமங்கள் அயனி நிலையில் இருக்கின்றன என்ற கோட்பாட்டை விளக்கினார். இதன் மூலம் விண்மீன்களின் வெப்ப நிலையைக் கண்டறியலாம். தனிமங்களின் அயனியக்கத்தில் வெப்பத்தின் தாக்கம் பெரும் பங்கு வகிக்கிறது.
கார்வார்ட் (Harvard) நிறமாலை வகைப்பாடு ஒரு ஒற்றைப் பரிமாண வகைப்பாட்டு நடைமுறையாகும். விண்மீன்களின் புறப்பரப்பின் வெப்பநிலை 2 முதல் 40 கிலோ கெல்வின் (kK) வரை வேறுபடுகின்றது. வெப்பநிலையைப் பொறுத்து அதிகூடிய வெப்பநிலையில் இருந்து வெப்பநிலை குறைந்த விண்மீன்கள் பட்டியலிடப்படுகின்றன. இதன்படி;
O - ≥ 33,000 கெல்வின் - நீல நிறம்
B - 10,000 முதல் 33,000 கெல்வின் - நீல நிறம்
A - 7,500 முதல் 10,000 கெல்வின் - வெள்ளை நிறம்
F - 6,000 முதல் 7,500 கெல்வின் - மஞ்சள் வெள்ளை
G - 5,200 முதல் 6,000 கெல்வின் - மஞ்சள்
K - 3,700 முதல் 5,200 கெல்வின் - ஆரஞ்சு
M - ≤ 3,700 கெல்வின் - சிவப்பு
கார்வார்ட் (Harvard) நிறமாலை வகைப்பாட்டைக் கடந்து, தற்போது யேர்க் நிறமாலை வகைப்பாடு பயன்படுத்தப்படுகிறது. இதனை மோர்கன் - கீனன் (Morgan-Keenan) வகைப்பாடு என்கின்றனர். இதில் நிறமாலைக்குரிய எழுத்துகள் ஒவ்வொன்றும், 0 முதல் 9 வரையிலான எண்களால் விரிவாக்கப்படுகின்றன. இவை, இரண்டு விண்மீன்கள் வகுப்புக்களுக்கு இடையிலான நிற எல்லையைச் சுட்டும் பத்தின் கூறுகளாகும், அதாவது G, G1, G2, G3, G4, G5, G6, G7, G8, G9, K எனும் இவ்வரிசையில் G5 என்றால் G-க்கும் K-க்கும் இடையே உள்ள பத்தில் ஐந்தாவது பகுதியாகும், G2 என்றால் G-க்கும் K-க்கும் இடையே உள்ள பத்தில் இரண்டாவது பகுதியாகும். ஒரு (G) வகுப்பில் உள்ள விண்மீன்களில் இரண்டு வெவ்வேறு விண்மீன்களை (G2, G7) ஒப்பிடுகையில் குறைந்த எண் கொண்ட விண்மீன், கூடிய எண் கொண்டதை விட வெப்பம் மிகுந்தது ஆகும் (G2>G7)
மோர்கன்-கீனன் வகைப்பாட்டில் பயன்படுத்தும் இன்னுமொரு பரிமாணம் ஒளிர்வளவு ஆகும், இது I, II, III, IV, V ஆகிய உரோமன் எழுத்துக்களால் குறிக்கப்படுகின்றது. இது பொதுவாக விண்மீனின் அளவை (ஆரையை) அளக்கப் பயன்படுகின்றது. வகுப்பு I என்பது பெரும் பூதம் என்றும், வகுப்பு III பூதம் என்றும், V எனும் வகுப்பு குள்ளன் அல்லது முதன்மைத் தொடர் விண்மீன்கள் என்றும் பொதுவாக அழைக்கப்படுகின்றது. சூரியன் G2V எனும் நிறமாலை வகுப்பில் உள்ளது; மஞ்சள் நிற, ஆரஞ்சு ’நிறத்தை நோக்கி பத்தில் இரண்டு பகுதி கொண்ட முதன்மைத் தொடர் விண்மீன் என்று இதனைக் குறிப்பிடலாம்.
ஒளிர்வளவைப் பொறுத்து பின்வருமாறு விண்மீன்கள் அழைக்கப்படுகின்றன:
0 - மிகை ஒளிர் பூதம் (Hyper Giants)
I - மீஒளிர் பூதம் (Super Giants)
II - ஒளிர் பூதம் (Bright Giants)
III - இயல்பொளிர் பூதம் (Normal Giants)
IV - தாழ் ஒளிர் பூதம் (Sub Giants)
V - முதன்மைத் தொடர் விண்மீன்கள் (குள்ளர்கள்) (Main Sequence Stars (Dwarfs))
VI - தாழ் குள்ளர்கள் (Sub Awarfs)
VII - வெண் குள்ளர்கள் (White Dwarfs)