இயல், இசை, நாடகம் என்று முத்தமிழ் உண்டு என்பது யாவரும் அறிந்ததே. ஆனால், வாரியார் சுவாமிகள் இயலில் நான்கு தமிழ் உண்டு என்கிறார்.
அதாவது, தேவாரத் திருவாசகங்களி (நால்வர் தமிழ்) உண்டு என்கிறார்.
1. கொஞ்சு தமிழ்
திருஞானசம்பந்தர் அன்னை தந்த ஞானப்பாலை உண்டு, தமது மூன்றாவது வயதிலேயே 'தோடுடைய செவியன்' என்று தம் மழலை மொழியில் கொஞ்சிப் பாடினார். அதனால் அவர் தமிழ் ‘கொஞ்சு தமிழ்’
2. விஞ்சு தமிழ்
சுந்தரர் மிடுக்குள்ளவர்; கயிலையில் சிவப்பரம்பொருளின் அணுக்கத் தொண்டராக இருந்தவர்; திருமுனைப்பாடி நாட்டு அரசராகிய நரசிங்கமுனையரின் வளர்ப்புப் பிள்ளை; ஆண்டவரிடத்து அவர் உரிமையுடன் பேசுவது இயல்புதானே? அதனால் அவர் தமிழ், ‘விஞ்சு தமிழ்’
3. கெஞ்சு தமிழ்
அப்பர் எண்பது வயது முதியவர்; குறைகளை உணர்ந்து, திருந்தியவர்; தன்னைத் தாழ்த்திக் கொண்டு மன்றாடுபவர்; அதனால் அவர் தமிழ், ‘கெஞ்சு தமிழ்’
4. நெஞ்சு தமிழ்
மணிவாசகர் 'அழுதால் உன்னைப் பெறலாமே' என்றவர்; பக்தியால் நெஞ்சுருகி, நைந்து நெகிழ்ந்து உருகுவார். அதனால் அவர் தமிழ், ‘நெஞ்சு தமிழ்’