மகாபாரதக் கதையின்படி, பரதநாடு அல்லது பரத கண்டம் என்பது பரத இனக்குழுவினர் ஆண்ட வட இந்தியாவை உள்ளடக்கிய ஒரு பகுதியே என்றும், அதில் தென்னிந்திய நிலப்பரப்பு இணையவில்லை. கங்கைச் சமவெளி முடிவுக்கு வரும் இடமே பரதநாட்டின் எல்லையாக மகாபாரதத்தில் காட்டப்பட்டுள்ளது என்கிறார் பேராசிரியர் கண்ணபிரான். மனுஸ்மிருதியில் (Manu 2-6-23) தென்னிந்திய நிலப்பரப்பு ‘பரத வர்ஷா’ என்ற நாட்டின் பகுதியாகக் குறிப்பிடப்பபடவில்லை. மேலும் இந்தத் தென்னிந்திய நாட்டினரை ‘மிலேச்ச தேசத்தினர்’ அதாவது காட்டுமிராண்டிகள், கீழ்நிலை ஜாதியினர் என்று குறிப்பிடுகின்றது.
மகாபாரத இதிகாசத்தில் பீஷ்ம பருவத்தில், பரதக் கண்டத்தில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மலைகள்; ஆறுகள் மற்றும் நாடுகளின் பெயர்களை சஞ்சயன் திருதராட்டிரனிடத்தில் விளக்குவதாக உள்ளது. அது குறித்த பிற்கால விளக்கங்களில் தென்னிந்தியாவையும் பரதக் கண்டத்தில் சேர்த்துச் சிலர் குறிப்பிடுள்ளனர்.
வட பரதக் கண்டத்தில் குரு நாடு, பாஞ்சாலம், வத்ச நாடு, மத்சய நாடு என்று 4 நாடுகளும், வடமத்திய பரதக் கண்டத்தில், கோசல நாடு, காசி நாடு, விதேகம், மல்ல நாடு, வஜ்ஜி நாடு என்று 5 நாடுகளும், வடமேற்குப் பரதக் கண்டத்தில் மத்திர நாடு, உத்தர மத்ர நாடு, திரிகர்த்த நாடு, சால்வ நாடு, சிந்து நாடு, சௌவீர நாடு, சிவி நாடு, கேகய நாடு, காந்தார நாடு, யௌதேய நாடு, காஷ்மீர நாடு, மத்திர நாடு, காஷா நாடு, தசார்ன நாடு என்று 14 நாடுகளும், மேற்குப் பரதக் கண்டத்தில், சரஸ்வதா நாடு, சிந்து நாடு, ஆபீர நாடு, சூரசேனம், துவாரகை, ஆனர்த்த நாடு, சௌராட்டிர நாடு, சூர்பரக நாடு, நிசாத நாடு, கரூசக நாடு, சூர்பரக நாடு, சேதி நாடு, குந்தி நாடு, கோப நாடு, ஹேஹேய நாடு, சால்வ நாடு, சூத்திர நாடு, பாரத நாடு என்று 18 நாடுகளும் இடம் பெற்றிருக்கின்றன.
மத்தியப் பரதக் கண்டத்தில், தெற்கு கோசலம், சேதி நாடு, அவந்தி நாடு, விதர்ப்ப நாடு, நிசாத நாடு, அஸ்மக நாடு, தண்டக நாடு என்று 7 நாடுகளும், கிழக்குப் பரதக் கண்டத்தில், மகத நாடு, கீகட நாடு, அங்க நாடு, பிராக்ஜோதிச நாடு, சோனித நாடு, கலிங்க நாடு, வங்க நாடு, பௌண்டர நாடு, சுக்மா நாடு, உத்கல நாடு, ஒட்டர நாடு, சிம்மதேசம், புலிந்த நாடு என்று 10 நாடுகளும், தெற்குப் பரதக் கண்டத்தில், ஆந்திர நாடு, கர்னாடகதேசம், கிட்கிந்தை, கோமந்தக நாடு, துளு நாடு, மகிஷ நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு, சேர நாடு, சத்தியபுத்திர நாடுகள், ஆய் நாடு, மூசிக நாடு, காஞ்சி நாடு என்று 10 நாடுகளும் இடம் பெற்றிருக்கின்றன.
பரத கண்டத்தின் அண்டை நாடுகளாக, வடமேற்கில் காம்போச நாடு, பரம காம்போஜ நாடு, தராதரர்கள், பகலவர்கள், துஷாரர்கள், ஹர ஹூண நாடு, ஹூண தேசம், ஹூனப் பேரரசு, பாக்லீக நாடு, உத்தர குரு, யவன நாடு, கச நாடு, சக நாடு, மிலேச்சர்கள், பரத நாடு என்று 15 நாடுகளும், தெற்கில் இலங்கை நாடு, சிங்கள நாடு என்று 2 நாடுகளும், வடகிழக்கில் சீனர்கள் நாடும், வடக்கு இமயமலையில், கிராத நாடு, இமயமலை நாடு, பர்வத நாடு, நேபா நாடு, பரத நாடு, கிண்ணர நாடு, கிம்புருட நாடு, யட்ச நாடு, ரிசக நாடு என்று 9 நாடுகளும் இருந்திருக்கின்றன.