1. இரண்டு சுலோகங்களாக உள்ளவை – யுக்மம்
2. மூன்று சுலோகங்களாக உள்ளவை – விசேஷகம்
3. நான்கு சுலோகங்களாக உள்ளவை – கலாபகம்
4. ஐந்து முதல் பல சுலோகங்களாக உள்ளவை – குலகம்
சுலோகங்களின் லட்சணங்களை இவ்வாறு பகுத்த பின், காவியங்களையும் மஹாகாவியம் – கண்ட காவியம் (சிறுகாவியம்) என்று பகுத்தனர். இவற்றிற்கெல்லாம் மூலகாவியமாக அமைந்ததுதான் ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்.
மஹாகாவியத்தின் தலைவன் தேவனாகவோ, நற்குடியில் பிறந்த தீரனாகவோ – க்ஷத்ரியனாகவோ இருக்கலாம். மஹாகாவியத்தில் சிருங்காரம், வீரம், சாந்தம் போன்ற நவரசங்களும் இருக்க வேண்டும்.
நகரம், சமுத்திரம், மலைகள், பருவங்கள், இயற்கை வர்ணனைகள், நீதி போதனைகள், கிளைக்கதைகள், உபமான உபமேயங்கள், பழமொழிகள் இவை அனைத்தும் இடம் பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு சர்க்கத்தின் இறுதியிலும் சந்தங்கள் மாறியிருக்க வேண்டும்.
வால்மீகி முனிவர் கூறுவது போல, 'காமார்த்த குணஸம்யுக்தம் தர்மார்த்தகுணவிஸ்தரம்' – தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் போன்ற நான்கு வகை புருஷார்த்தங்களையும் அடைவதற்கான முறைகளைத் தெளிவாகக் கூற வேண்டும்.
பொதுவாகக் காவியத்தின் பயனைக் கூறுமிடத்து, பொருள், புகழ், உலகாயத அறிவு, தீயவற்றை நீக்கி நல்லவற்றைப் பின்பற்றுதல், காவியத்தின் சுவையை அனுபவித்தல் போன்ற பலவகைப் பலன்களை அடைவதற்கு மஹாகாவியம் உதவுகிறது.
இப்படி அனைத்தையும் உடைய காவியத்தின் சுவையை அனுபவிக்கும்போது கவியின் மனதுடன் ஒத்த மனமுடைய ரசிகனது மனம் பிரம்மானந்தத்திற்கு ஒப்பான மகிழ்ச்சியை அடைகிறது. ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்தை நாம் ஆழ்ந்து படிக்கும் போது இவை அனைத்தையும் நம்மால் உணர்ந்து அனுபவிக்க முடியும்.
அதனால்தான் ஆதிகவியான ஸ்ரீவால்மீகி முனிவரால் இயற்றப்பட்ட மஹாகாவியம் (சீதாயாஸ்ச்சரிதம் மகத்) பிற்காலக் காவியங்கள் அனைத்திற்கும் ஓர் ஊற்றுக் கண்ணாக விளங்குகின்றது.