ஆல்ஹகால் கலந்த மதுபானங்கள், வடிகட்டி முறையில் தயாரித்த சாராய வகைகள், பீர், ஒயின் மற்றும் காக்டெய்ல்கள் வகைகள் என்று பல்வேறு வகையிலான மதுபானங்களை அருந்துவதற்கென்று தனியாக அமைக்கப்பட்ட இடங்களை ‘மது அருந்தகம்’(Bar) எனலாம். வணிக விரிவாக்க நோக்கில் அமைந்த இந்த இடம், நாற்காலிகளும் சாயும் இருக்கைகளும் அல்லது சொகுசு இருக்கைகளும் அல்லது இவற்றில் ஏதாவது ஒன்றுடன் இருக்கலாம். இவ்விடங்களில் மது பாட்டில்கள் மற்றும் கோப்பைகள் வைப்பதற்கான மேசைகளும் அமைக்கப்பட்டிருக்கும். உயர்வகை மது அருந்தகங்களில் பொழுதுபோக்கு நோக்கில், வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கில் மேடை இசைக்குழுக்களின் இசை, நகைச்சுவை நிகழ்ச்சி, கேளிக்கை நடன மங்கைகளின் நடனம் போன்றவைகளும் சேர்ந்து இடம் பெற்றிருக்கும்.
இந்த மது அருந்தகங்கள் வரலாறு முழுமைக்கும் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு பெயர்களில் இருந்திருக்கின்றன. பொதுவாக, மக்கள் மது அருந்துவதற்காக ஒன்றாகக் கூடிய இடங்களைப் பல்வேறு பெயர்களில் குறிப்பிட்டு வந்திருக்கின்றனர். இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் பின்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளில் ஆல்கஹால் கலந்த பானங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக, அமெரிக்கா போன்ற நாடுகளில் சட்ட விரோதமாக மது அருந்தகங்கள் நடத்தப்பட்டுள்ளன. இவற்றை அவர்கள் "SPEAKEASIES" என்றும், "BLIND PIGS" என்றும் சங்கேத வார்த்தைகள் வைத்து அழைத்திருக்கின்றனர்.
பல்வேறு நாடுகளில் மது அருந்தகங்களில் வயது வந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. சிறுவயதினருக்கு அனுமதி கிடையாது என்கிற நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. பெரும்பாலும் மாநகரங்கள் மற்றும் சிறுநகரங்களில் இருக்கும் அருந்தகங்கள் இந்தச் சட்டத்தினை மதித்து நடக்கின்றன. புருனை, ஈரான், லிபியா, சவுதி அரேபியா, மற்றும் ஐக்கிய அரபு அமீரக ஷார்ஜா போன்ற சில இஸ்லாமிய நாடுகளில் மதங்களின் கட்டுப்பாடுகளினால் மது அருந்துதல் கிடையாது. எனவே அங்கெல்லாம் மது அருந்தகங்களுக்கு அனுமதி இல்லை.
உலகில் மது அருந்துவதற்கான வயது வரம்பு நாடுகளுக்கேற்ப வேறுபடுகிறது. ஆஸ்திரியா, சாட், லிச்சென்ஸ்டீன், மொராக்கோ, பாலஸ்தீனம், ரஷ்யா எனும் 6 நாடுகளில் மது அருந்துவதற்கான குறைந்த வயது 16 என்று இருக்கிறது. சைப்ரஸ் மற்றும் மால்டா என்று 2 நாடுகளில் குறைந்த வயது 17 என்றும், அல்பேனியா, ஆஸ்திரேலியா, பஹாமாஸ், வங்காளதேசம், பெலிஸ், பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள், கேப் வெர்டே, கேமன் தீவுகள், சிலி, கொமொரோஸ், கோஸ்டா ரிகா, எஸ்டோனியா, எஸ்வதினி, எத்தியோப்பியா, பால்க்லாந்து தீவுகள், பரோயே தீவுகள், பிஜி. பின்லாந்து, கிரீஸ், இந்தியா, ஈராக், அயர்லாந்து, இஸ்ரேல், ஜோர்டான், கஜகஸ்தான், லாவோஸ், லாட்வியா, லெசோதோ, லிதுவேனியா, மெக்சிகோ, மைக்ரோனேஷியா, மொசாம்பிக், நெதர்லாந்து, நைஜர், வட கொரியா, பப்புவா நியூ கினியா, புவேர்ட்டோ ரிக்கோ, ருமேனியா, ருவாண்டா, சுலோவாக்கியா, சிரியா, தைவான், டோகெலாவ், துருக்கி, உகாண்டா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அமெரிக்க கன்னித் தீவுகள், வனுவாட்டு, வியட்நாம், சாம்பியா என்றுமொத்தம் 50 நாடுகளில் குறைந்த வயது 18 என்றும், பஹ்ரைன், கம்போடியா, கேமரூன், எக்குவடோரியல் கினியா, குவாம், இந்தோனேசியா, கிரிபட்டி, மார்ஷல் தீவுகள், மங்கோலியா, நௌரு, வடக்கு மரியானா தீவுகள், ஓமான், பலாவ், சமோவா, அமெரிக்கா என்று 15 நாடுகளில் குறைந்த வயது 21 என்றும் இருக்கிறது.
அல்ஜீரியா, அங்கோலா, ஆன்டிகுவா & பார்புடா, அர்ஜென்டினா, ஆர்மீனியா, அஜர்பைஜான், பார்படாஸ், பெலாரஸ், பெல்ஜியம், பெனின், பூட்டான், பொலிவியா, போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, போட்ஸ்வானா, பிரேசில், பல்கேரியா, புர்கினா பாசோ, புருண்டி, மத்திய ஆப்பிரிக்க குடியரசு, சீனா, கொலம்பியா, குக் தீவுகள், குரோஷியா, கியூபா, செக் குடியரசு, காங்கோ ஜனநாயக குடியரசு, டென்மார்க், டொமினிகா, டொமினிகன் குடியரசு, ஈக்வடார், எகிப்து, எல் சால்வடார், எரித்திரியா, பிரான்ஸ், காபோன், காம்பியா, ஜார்ஜியா, ஜெர்மனி, கானா, ஜிப்ரால்டர், கிரெனடா, குவாத்தமாலா, கயானா, ஹைதி, ஹோண்டுராஸ், ஹாங்காங், ஹங்கேரி, ஐஸ்லாந்து, இத்தாலி, ஐவரி கோஸ்ட், ஜமைக்கா, கென்யா, கிர்கிஸ்தான், லெபனான், லைபீரியா, லக்சம்பர்க், மக்காவ், மடகாஸ்கர், மலாவி, மலேசியா, மாலி, முவாரிஷியஸ், மால்டோவா, மொனாக்கோ, மொண்டெனேகுரோ, மியான்மர், நமீபியா, நேபாளம், நியூசிலாந்து, நிகரகுவா, நைஜீரியா, நியுவே, வடக்கு மாசிடோனியா, நோர்வே, பனாமா, பராகுவே, பெரு, பிலிப்பைன்ஸ், போலந்து, போர்ச்சுகல், காங்கோ குடியரசு, செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ், செயிண்ட் லூசியா, செயிண்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ், சான் மரினோ, சாவோ டோம் மற்றும் பிரின்சிப்பி, செனகல், செர்பியா, சீஷெல்ஸ், சியரா லியோன், சிங்கப்பூர், ஸ்லோவேனியா, சாலமன் தீவுகள், தென்னாப்பிரிக்கா, தென் கொரியா, தெற்கு சூடான், ஸ்பெயின், இலங்கை, சுரினாம், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, தஜிகிஸ்தான், தான்சானியா, தாய்லாந்து, டோகோ, டோங்கா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, துனிசியா, துர்க்மெனிஸ்தான், டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகள், துவாலு, உக்ரைன், ஐக்கிய இராச்சியம், உருகுவே, உஸ்பெகிஸ்தான், வெனிசுலா, ஜிம்பாப்வே என்று 117 நாடுகளில் வயது வரம்பு ஏதுமில்லை என்பதும் இங்கு கவனிக்கத்தது.
மது அருந்துதல் என்பது மனிதக் குலத்தின் பழமையான பழக்கங்களில் ஒன்றாகும். மேலும், அது இன்று வரை அதன் முக்கியத்துவத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. பல்வேறு கலாச்சாரங்களில், மக்கள் பல்வேறு சூழல்களில், மற்றும் அவர்களின் வாழ்நாள் முழுவதும் பல்வேறு வகையான மதுபானங்களை அருந்துகிறார்கள். மதுபானத்தின் குறிப்பிட்ட விளைவுகள், இலேசான அளவு முதல் கடுமையான விஷம் மற்றும் மரணம் வரை இருக்கலாம். இதனை மது அருந்துபவர்கள் பலரும் அறிந்திருந்தாலும், மது அருந்தும் வழக்கத்தைக் கைவிடுவதாக இல்லை என்றே ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.