வால்மீகி இராமாயணத்தின் முதலாவது பிரிவு சம்சேப ராமாயணம் எனப்படும். அந்தப் பகுதியில் வால்மீகி மகரிஷி ராமாயணக் கதையில் முழு வரலாற்றையும் சுருக்கமாக அளித்துள்ளார். அதில், "பதினாறு குணங்களைப் பெற்றவனே முழுமையான மனிதனாவான்’’ என்று வால்மீகி வலியுத்திக் கூறுகிறார்.
முழுமையான மனிதப்பண்புகள் படைத்தவனின் வரலாற்றை, தான் காவியமாக்க விரும்புவதாக வால்மீகி, நாரத முனிவரிடம் கூறுகிறார்.
வால்மீகி மகரிஷி கூறிய அந்தப் பதினாறு பண்புகள் எவையெவை? என்று தெரியுமா?
1. குணவான்
நற்பண்புகள் உடையவனாக இருக்க வேண்டும்.
2. வீர்யவான்
நல்ல பண்புகளோடு இருந்தால் மட்டும் போதுமா? எதையும் செய்து முடிக்கும் ஆற்றலும் இருக்க வேண்டும்.
3. தர்மஜ்ஞன்
தர்மத்தை அறிந்தவனாக இருக்க வேண்டும். தன்னிடம் ஆற்றல் இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் செய்துவிடக்கூடாது. தர்மத்தின் வகையறிந்து செயல்பட வேண்டும். தர்மத்தின்படி நடக்க வேண்டும். தர்மத்தின் ‘நெளிவு–சுளிவு’களை அறிந்திருக்க வேண்டும். சில இடங்களில், சில நேரங்களில் விசேஷ தர்மத்திற்காகச் சாமான்ய தர்மத்தை விட்டுக்கொடுக்க வேண்டும். அடுத்தவரைத் துன்புறுத்தக் கூடாது என்பது சாமான்ய தர்மம். கொடிய குற்றவாளியைத் துன்புறுத்தி தண்டிக்கலாம் என்பது மன்னர்களின் விசேஷ தர்மம். இடத்திற்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப தர்மத்தைக் கடைப்பிடிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்பது கருத்து.
4. க்ருதக்ஞன்
நன்றி அறிந்தவனாக இருக்க வேண்டும். படகோட்டி குகனிடம் நன்றி, பறவை ஜடாயுவிடம் நன்றி என்றெல்லாம் சிறிய உதவி செய்தவர்களிடமும் நன்றி பாராட்டியது ராமனின் திருவுள்ளம். ஏன், சிறு அணிலுக்கும் கூட நன்றி காட்டி அருள் செய்தவன் ராமன்.
5. சத்திய வாக்கு
உண்மையான வாக்கு உள்ளவன். சொன்ன சொல் தவறாதவன். எப்பாடுபட்டாவது வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பது கருத்து.
6. த்ருட விரதன்
தான் மேற்கொண்ட விரதத்தில் உறுதிப்பாடு உடையவன். தந்தை சொல் தட்டாமல் நடத்தல் போன்ற கொள்கையிலும், ஏகபத்தினி விரதம் என்ற கொள்கையிலும் உறுதியுடன் இருந்தவன் ராமன்.
7. சாரித்ரேண (நல்ல நடத்தையுள்ளவன்)
நல்ல நடத்தையே சரித்திரம் அல்லது வரலாறு என்று போற்றப்படும்.
8. சர்வபூதஹிதன் (எல்லா உயிர்களுக்கும் நன்மையே செய்பவன்)
மனிதர், தேவர், முனிவர், கழுகு, கரடி, குரங்கு போன்ற எல்லா உயிரினங்களிடமும் அன்பு பூண்டு இனியவை செய்பவன்.
9. வித்வான் (வித்வத் (புலமை) உள்ளவன்)
பல வகை வித்யைகளையும் வசிஷ்டர் முதலான குருமார்களிடம் கற்றுத் தேர்ந்தவன் ராமன்.
10. சமர்த்தன் (சாமர்த்தியசாலியாகவும் இருப்பவன்)
புலமை மட்டும் இருந்தால் போதாது. புலமையைச் சரியான முறையில் பயன்படுத்தும் திறமையும், உலகியல் அறிவும் வேண்டும். ஒரு செல்வந்தர் பெரிய மாளிகை கட்டிக் குடியேறினார். அவர் கிரகப் பிரவேசத்திற்கு ஒரு புலவரையும் அழைத்திருந்தார். மாளிகையைச் சுற்றிப் பார்த்த புலவர், "வீடு நிர்வம்சமாக இருக்கிறது’’ என்றார். அது உண்மையில் ஒரு பாராட்டு வார்த்தைதான்! ஆனால் உரியபடி சொல்லும் சாமர்த்தியம் அவரிடம் இல்லை! ‘வம்சம்’ என்ற சொல்லுக்கு ‘மூங்கில்’ என்றும் ஒரு பொருள் உண்டு. "மாளிகை எங்கும் மூங்கில் இல்லாமல் உயர்ந்த ரகப் பொருட்களால் கட்டப்பட்டுள்ளது’’ என்பதையே சமர்த்தியம் இல்லாத அந்த வித்துவான், "நிர்வம்சம் (வம்சவிருத்தி அற்ற வீடு)’’ என்ற அமங்கலமானச் சொல்லாகக் கூறிவிட்டார்.
11. பிரியதர்சனன் (காட்சிக்கு இனியவன்)
எளிதில் பார்க்கக் கூடியவனாகவும், இனிய தோற்றம் உடையவனாகவும் இருக்க வேண்டும்.
12. ஆத்மவான் (தன்னை உணர்ந்தவன்)
இங்கு ‘ஆத்மஞானம்’ என்ற பொருளுடன், தனது திறமைகளையும் ஆற்றல்களையும் உணர்ந்து அறியும் திறமை பெற்றவன் என்ற பொருளையும் சேர்த்துக் கொள்ளலாம்.
13. ஜிதக்குரோத (கோபத்தை வென்றவன்)
தன்னுள் இருக்கும் கோபத்தை வென்றவனுக்குப் புறப்பகைவர்களை வெல்வது எளிது. ராமன் காடேக வேண்டிய சூழ்நிலையிலும் சினம் கொள்ளாமல் மலர்ந்த முகத்துடன் இருந்தான்; வெகுண்டெழுந்த லட்சுமணனின் கோபத்தையும் தணித்தான்.
14. த்யுதிமான் ( மேனி ஒளிபடைத்தவன்)
"தன் மேனி ஒளியில் சூரியன் ஒளியையும் மழுங்கச் செய்தவன் ராமன்’’ என்று கவிச் சக்கரவர்த்தி கம்பன் வர்ணித்திருக்கிறார்.
15. அநசூயக (பொறாமை இல்லாதவன்)
‘அசூயை’ என்றால் பொறாமை. அத்திரி முனிவரின் மனைவிக்கு அநசூயை (பொறாமை அற்றவள்) என்றே பெயர் அமைந்திருந்தது.
16. ஆக்ரோஷ (அமரர் நடுங்கும் ஆக்ரோஷம்)
இனிய சுபாவம் உள்ளவன் என்பதால் எவரும் எளிதாக எடை போட்டுவிடக் கூடாது. ‘‘சாது மிரண்டால் காடு கொள்ளாது’’ என்பது போல் பண்பாளர்களின் கோபம் தேவர்களையும் நடுங்கச் செய்யும்.
"இந்தப் பதினாறு குணங்களைப் பெற்ற முழுமையான மனிதனின் வரலாற்றைக் கேட்பதற்கு என் உள்ளம் பெரிதும் விரும்புகிறது’’ என்று வால்மீகி, நாரதரிடம் கூறினார்.
நாரதர் சிறிது யோசித்த பிறகு, ‘‘அத்தகைய மனிதனைக் காண்பது மிகவும் அரிது. எனினும் இட்சுவாகு குலத்தில் தோன்றிய ஸ்ரீராமர் மேற்படி குணங்களைப் பெற்றிருந்தார்’’ என்று தெரிவித்தார்.