'ஆபத்துக்கு உதவாப் பிள்ளை, அரும் பசிக்கு உதவா அன்னம்
தாகத்தைத் தீராத் தண்ணீர், தரித்திரம் அறியாப் பெண்டிர்
கோபத்தை அடக்கா வேந்தன், குருமொழி கொள்ளாச் சீடன்
பாவத்தைப் போக்கா தீர்த்தம் பயனில்லை ஏழும் தானே'
இந்தப் பழைய தமிழ்ப் பாடல் ஏழு விஷயங்கள் பயனில்லை என்று பட்டியலிடுகிறது.
பயனுள்ள பல ஏழு விஷயங்களைப் பார்ப்போமா?
சமஸ்கிருதத்தில் 'ஸப்த' என்றால் ஏழு. இந்த ஏழு அம்மொழியில் ஏற்றம் பெற்றுள்ளன. அவை;
1. ஸப்த ரிஷிகள்
2. ஸப்த கன்னிகைகள்
3. ஸப்த த்வீபங்கள் (கண்டங்கள்)
4. ஸப்த பர்வதங்கள்
5. ஸப்த லோகங்கள்
6. ஸப்த சமுத்திரங்கள்
7. ஸப்த ஸ்வரங்கள்
இதே போன்று, முக்தி தரும் ஏழு நகரங்கள் என்று பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.
ஸ்ரீபாகவத புராணத்தை 'ஏழு' நாட்களில் (ஸப்தாஹம்) பாராயணம் செய்வது ஒரு வழக்கம்.
ஸ்ரீமத் ராமாயணம் 'ஏழு' காண்டங்களைக் கொண்டது. ஏழு மரங்களை ஒரே அம்பினால் வீழ்த்தினார் ராமன்.
சமஸ்கிருதமும், தமிழும் நமது பாரத தேசத்தின் தொன்மையான தெய்வீக மொழிகள்.
இந்த 'ஏழு' என்ற எண்ணுக்குத் தமிழிலும் முக்கியத்துவம் இருக்கிறது.
தமிழ் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது திருக்குறள்.
1. ஏழு பிறப்பும் தீயவை தீண்டா (குறள் 62)
2. எழுமையும் ஏழ் பிறப்பும் உள்ளுவர் (குறள் 107)
3. எழுபது கோடி உறும் (குறள் 639)
4. எழுநாளேம் மேனி பசந்து (குறள் 1278)
5. எழுமையும் ஏமாப் புடைத்து (குறள் 126)
ஸ்ரீ ஆண்டாளும், 'எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்' என்று திருப்பாவையிலும், 'இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும்' என்று நாச்சியார் திருமொழியிலும் அருளிச் செய்துள்ளார்.
இதுபோல ஆழ்வார்கள், நாயன்மார்கள், சித்த புருஷர்களின் பாடல்கள் பலவற்றை மேற்கோள் காட்டலாம்!
வைணவர்களின் கோயிலான ஸ்ரீரங்கம் என்னும் திருவரங்கம் 'ஏழு' பிராகாரங்களைக் கொண்டது. அவை;
1. மாடமாளிகை சூழ்திருவீதி
2. மன்னுசேர் திருவிக்கிரமன் வீதி
3. ஆடல்மாறன் அகளங்கன் வீதி
4. பூலிநாடர் அமர்ந்துறையும் வீதி
5. கூடல் வாழ் குலசேகரன் வீதி
6. குலவுராச மகேந்திரம் வீதி
7. தேடரிய தர்மவர்மாவின் வீதி
இப்படி ஏழு மதில்களைக் கொண்டவன் திருவரங்கன். இதில் இன்னுமோர் அதிசயம் என்னவென்றால், இந்த ஏழு மதில்களைக் கொண்ட அரங்கனைச் சேவிக்க, 'ஏழு ஊர் பங்காளிகள்' ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வருகிறார்கள்.
ஸ்ரீரங்கத்தை அடுத்து, ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த திருப்பதி மலையப்ப சுவாமியும் ஏழுமலைகளைக் கொண்டவராக 'ஏழுமலையான்' என்று போற்றப்படுபவர்.
இந்த 'ஏழு' சிவபெருமானுக்கும் முக்கியமானதாக உள்ளதா? என்று கேட்டால், "ஆம்” என்றே சொல்லலாம்.
'ஸப்த ஸ்தானம்' உற்சவம் திருவையாற்றின் மகத்தான உற்சவம். அறம் வளர்த்த நாயகி உடனுறை ஸ்ரீஐயாறப்பர் மற்றும் நந்தி எம்பெருமானுடன் 'ஏழு' ஊர்களுக்கு எழுந்தருளும் வைபவமே இந்த உற்சவத்தின் சிறப்பு!
அவர் எழுந்தருளும் ஏழு ஊர்கள்
1. திருப்பழனம்
2. திருச்சோற்றுத் துறை
3. திருவேதிக்குடி
4. திருக்கண்டியூர்
5. திருப்பூந்துருத்தி
6. திருநெய்த்தானம்
7. திருமழபாடி
ஏழாவது ஊரில்தான் நந்தியெம்பெருமானுக்குத் திருமணம் நடைபெறும். மிகவும் பழமையான திருவிழா இது!
இந்த உற்சவம் சித்ரா பௌர்ணமிக்கு அடுத்து வரும் விசாகத்தில் நடைபெறும்.
இதே போன்று தெற்கில் அம்மனுக்கு 'ஏழு' ரதங்கள் செய்யப்பட்டு, அவைகளில் அன்னம் எழுந்தருளி, பின்னர் தங்கள் ஊருக்குப் புறப்பட்டுச் செல்லும். 'ஏழு' ரத உற்சவமும் செய்யப்படுகிறது.
ஆரம்பத்தில் வந்த தமிழ்ப்பாட்டில் ஏழு விஷயங்கள் பயனில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதே ஏழு சமஸ்கிருதத்திலும், தமிழிலும் முக்கிய அங்கம் வகிப்பதோடு, சைவ வைணவ கோயில்கள், உற்சவங்களிலும் இது தனிச்சிறப்பு பெற்றுள்ளது.