கஜீராஹோ கோயில்கள்
உ. தாமரைச்செல்வி
இந்தியாவில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள கஜீரோஹா நகரம் உலகப்புகழ் பெற்ற ஒரு நகரமாகும். இந்நகரில் உள்ள கோயில்களில் உடலியல் குறித்தும் பாலியல் உறவுகள் எனப்படும் உடலுறவு தொடர்பான பல வகை சிற்பங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. கி.பி. 9 மற்றும் 10 ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட இந்தக் கோயில்களின் சிற்பங்கள் பாலியல் தொடர்புடையதாக இருந்த போதிலும் இவைகளில் உள்ள கலை நுணுக்கம் உலகின் பல கலைஞர்களை வியக்க வைத்துள்ளது. யுனெஸ்கோ அமைப்பு கஜீராஹோவை உலகப் பழம்பெரும் சின்னங்களைக் கொண்ட, உலகச் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக 1997 ஆம் ஆண்டில் அறிவித்தது. இதனால் இந்த நகரத்திற்கு உலகம் முழுவதும் இருந்து சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.
கஜீராஹோ கோயில்கள்
1. கஜீராஹோ நகரில் உள்ள கோயில்கள் அனைத்தும் சண்டேலா அரசின் ஆட்சியாளர்களால் கி.பி 9 மற்றும் 10 ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டவை. இந்தக் கோயில்களில் அதிகமான சிற்பங்கள் உடலியல் தொடர்புடையவையாகவே அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியிலுள்ள 85 கோயில்களில் 20 கோயில்கள் சற்று சேதமடைந்து விட்ட போதும் மீதமுள்ள கோயில்கள் இன்னும் உறுதியுடன் இருந்து வருகிறது. இந்தக் கோயில்கள் மண்ணாலான கற்துண்டுகளால் கிழக்கு - மேற்காகவே கட்டப்பட்டிருக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இக்கோயில்களில் வடிவமைக்கப்பட்டிருக்கும் சிற்பங்களைப் பார்க்கும் போது மனிதன் பாலியல் குறித்த கற்பனைகளிலும், எண்ணங்களிலும் அதிகமான ஈடுபாடு கொண்டிருந்தான் என்பதை உணர முடிகிறது. இங்குள்ள சிற்பங்களில் பல்வேறு உறவுநிலைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
2. கஜீராஹோ கோயில்கள் அனைத்தும் இந்தியக் கட்டிடக்கலைக்குச் சான்றாக விளங்குகின்றன. இவை தரையில் மூன்று அல்லது ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பெரிய கோயில்களில் அர்த்த மண்டபம் (முன்பகுதி), மண்டபம் ( அறை), மகாமண்டபம் ( முக்கிய அறை), அந்தரேல் (வரவேற்புப் பகுதி), சுவாமி அல்லது அம்மன் சிலைகள் அமைக்கப்பட்டுள்ள கர்ப்பக் கிருஹம் (கடவுள் அறை) என ஐந்து பகுதிகளாகப் பிரித்துக் கட்டப்பட்டுள்ளது. சிறிய கோயில்களில் மண்டபம் (அறை) மற்றும் அந்தரேல் (வரவேற்புப் பகுதி) இல்லாமல் மற்ற மூன்று பகுதிகள் மட்டும் கொண்டதாக உள்ளது. கோயிலின் முக்கியப் பகுதி மட்டும் பிரமிடுகளைப் போல், மேல் நோக்கி வட்டவடிவில் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
3. கோயில்கள் அனைத்தும் இந்து மற்றும் சமண சமயத்தைச் சேர்ந்த கோயில்களாக உள்ளன. இவை கட்டிடக் கலைகளின் அடிப்படையில் மேற்குக் குழு, கிழக்குக் குழு மற்றும் தெற்குக் குழு எனப் பிரிக்கப்பட்டுள்ளது. மேற்குக்குழு பிரிவில் இந்து சமயக் கடவுள்களான சிவபெருமான், லட்சுமணன், தேவி ஜகதாம்பாள் கோயில்கள் குறிப்பிடத்தக்கவை. இப்பிரிவில் லட்சுமி, வராக மகாதேவ், சித்ரகுப்தா, பார்வதி மற்றும் மாதங்கேஸ்வரா கோயில்களும் சிறப்புடன் இருக்கின்றன. இங்குள்ள காளி கோயிலான சகலகலா யோகினி (அற்பத்து நான்கு கலைகளில் சிறந்தவள்) கோயில் கிரானைட் கற்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
4. கிழக்குக் குழு பிரிவில் பர்சுவநாத் கோயில் எனும் ஜைன மதக் கோயில் மிகப்பெரிய கோயிலாக இருக்கிறது. இங்குள்ள அனைத்துப் பிரிவுகளிலும் உள்ள கோயில்களில் கிழக்குப் பிரிவில் 4.5 அடி உயரமுடைய ஆதிநாத் சிலை உள்ள சாந்திநாத் கோயில்தான் மிகவும் இளம் வயதுடையது. இப்பிரிவில் உள்ள இந்து சமயக் கோயில்களில் பிரம்மா, அனுமன் கோயில்களும் சிறப்புடையதாக இருக்கின்றன. இவை கிரானைட் மற்றும் மண்கற்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளன. மேலும் விஷ்ணு, ஜவாரி, வாமனா கோயில்களும் இப்பிரிவில் குறிப்பிடத்தக்கதாய் உள்ளது.
5. தெற்குப் பிரிவு கோயில்களில் துலாதேவ் மற்றும் சதுர்பூஜா என்கிற இரு கோயில்கள் மட்டுமே சிறப்பானதாக உள்ளது.
விழாக்கள்
1. கஜீராஹோ பகுதியில் கொண்டாடப்படும் விழாக்களில் மிகப்பெரியது மகா சிவராத்திரி விழாதான். இந்த விழாவின் போது சிவபெருமான் - பார்வதி ஆகிய கடவுள்களது திருமண வைபவம் இந்து சமய முறைப்படி சிறப்பாக நடத்தப்படுகிறது.
2.இங்கு கஜூராஹோ நாட்டிய விழா வருடந்தோறும் பிப்ரவரி / மார்ச் மாதங்களில் நடத்தப்படுகிறது. இவ்விழாவில் இந்தியப் பாரம்பரிய நடனங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
கஜீராஹோவைச் சுற்றியுள்ள சுற்றுலா இடங்கள்
1. கஜீரோஹாவிலிருந்து 64 கிலோ மீட்டர் தொலைவில் துபேலா அருங்காட்சியகம் உள்ளது. ஏரிக்கரை ஒன்றில் அருகில் அமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தில் பழங்கால சிற்பங்கள், பல வகையான ஆடைகள், ஆபரணங்கள் மற்றும் ஓவியங்கள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.
2. கஜீரோஹாவிலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் பெனிசாகர் ஏரி ஒன்று உள்ளது. இது படகுச் சவாரி செய்திட நல்ல இடமாக உள்ளது.
3. கஜீரோஹாவிலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் பாண்டவா நீர்வீழ்ச்சி ஒன்று உள்ளது.
4. பண்டேலா அரசின் வரலாற்று சிறப்பு மிக்க தலைநகரான பன்னா கஜீரோஹாவிலிருந்து 56 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மேலும் இங்கு கென் ஆற்றங்கரைப் பகுதியில் 546 கிலோ மீட்டர் சுற்றளவுடைய புலிகள் சரணாலயமான பன்னா தேசியப்பூங்கா உள்ளது. இது இயற்கை அழகு நிறைந்த ஒரு இடமாகும்.
5. கஜீரோஹாவிலிருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் சண்டேலா அரசால் கட்டப்பட்ட 688 மீட்டர் உயரமுடைய அஜய்கார் கோட்டை உள்ளது. மேலும் குப்த பேரரசால் கட்டப்பட்ட கலிஞ்சார் கோட்டை ஒன்றும் கஜீரோஹாவிலிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
பயண வசதி
1. மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள ஹர்பல்பூர், மஹோபா ஆகிய ரயில் நிலையங்கள் கஜீராஹோவிற்குச் செல்ல மிக அருகிலுள்ள ரயில் நிலையங்களாகும். ஹர்பல்பூரிலிருந்து கஜுராஹோ 94 கிலோ மீட்டர் தொலைவிலும், மஹோபாவிலிருந்து கஜுராஹோ 63 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
2. மத்தியப் பிரதேச மாநிலத்தில் போபால், ஜபல்பூர், குவாலியர், இந்தூர், பன்னா மற்றும் மத்தியப் பிரதேச மாநிலத்தின் முக்கிய நகரங்களிலிருந்து கஜீராஹோவிற்கு சாலை வழியில் போக்குவரத்து வசதி உள்ளது.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.