சுருளி அருவி
உ. தாமரைச்செல்வி
தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்திலுள்ள சுற்றுலாத் தளங்களில் ஒன்று சுருளி நீர்வீழ்ச்சி. தேனி மாவட்டத்திலிருக்கும் கம்பத்திலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் இந்த நீர்வீழ்ச்சியில் வருடத்தில் 365 நாட்களும் தண்ணீர் விழுந்து கொண்டிருககிறது. குறிப்பிட்ட கால வரையறையில்லாத இந்த நீர்வீழ்ச்சிக்குத் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
தேனி மாவட்டத்தின் வனத்துறைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சியில் ஆண்களும் பெண்களும் தனித்தனியாகப் பாதுகாப்பாய் குளிப்பதற்கு தகுந்த வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. பெண்கள் குளித்து முடித்த பிறகு உடை மாற்றிக் கொள்வதற்கு நீர்வீழ்ச்சிக்கருகிலேயே தனித்தனி அறைகள் கட்டிவிடப்பட்டிருக்கிறது.
சுருளிவேலப்பர் கோயில்
சுருளி நீர்வீழ்ச்சிப் பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் மலைப்பாதையில் நடந்து சென்றால் சுருளி வேலப்பர் கோயிலை அடையலாம். முருகன் கோயிலான இக்கோயில் சிறிய அளவில் உள்ளது. இந்தக் கோயிலின் கீழ்ப்பகுதியில் உள்ள குகையில் முப்பத்து முக்கோடி தேவர்களும் நாற்பத்தி எண்ணாயிரம் ரிஷிகளும் அரக்கர்களுக்குப் பயந்து இங்கு வந்து மறைந்திருந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்தக் குகையில் இமயகிரிச்சித்தர் என்பவர் வந்து தவம் செய்ததாக இங்கிருக்கும் விளம்பரப் பலகைகள் தெரிவிக்கின்றன.
தற்போது இந்தக் குகையில் சிறிய லிங்கம் ஒன்றும் அதன் முன்பு விளக்கு ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. இதை உள்நோக்கிப் பார்த்தால் தெரிகிறது. தினமும் இந்தக்குகையினுள் சென்று பக்தர்கள் யாராவது விளக்குக்கு ஒளியூட்டி விடுகிறார்கள். இந்தக் குகையிலிருந்து சிறிதாக நீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. இங்கிருந்து வெளியேறும் நீர் தனியாகச் சென்று விழுகிறது. இந்த நீரைப் புனித நீராகக் கருதி பக்தர்கள் எடுத்துச் செல்கின்றனர். இந்தக் குகைக்கு அடுத்ததாக அஷ்ட நாக குகை சப்த கன்னிமார்கள் சன்னதி ஒன்றும் உள்ளது.
புண்ணியத்தலம்
1. இந்த சுருளிமலைப் பகுதி முப்பத்து முக்கோடி தேவர்களும் நாற்பத்தி எண்ணாயிரம் ரிஷிகளும் வந்திருந்த இடமாகவும் , புனிதமான இடமாகவும் இந்து சமயத்தவர்களால் கருதப்படுவதால் இது ஒரு புண்ணியத் தலமாகவும் விளங்குகிறது.
2. தேனி, மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் வீட்டில் இறப்பு நிகழ்ந்திருந்தால் அதன் பின்பு செய்யப்படும் ஒரு ஆண்டு நிறைவு, திதி மற்றும் புண்ணியாதானம் போன்ற நிகழ்வுகளை இங்கு வந்து செய்கின்றனர். ஒற்றைப்படை எண்ணிக்கையில் (அவரவர் வசதிக்கேற்ப எண்ணிக்கை இருக்கலாம்) இந்தப் பகுதியில் உள்ள சாமியார்களை அழைத்து அவர்களுக்கு உடை, உணவு மற்றும் காணிக்கை அளித்து வேண்டுகின்றனர்.
அவர்கள் இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகின்றனர். புரோகிதர்களைக் கொண்டு ஆற்றங்கரையிலும் இதுபோன்ற சில நிகழ்வுகள் நடக்கின்றன.
கோடிலிங்கம் கோயில்
சுருளி நீர்வீழ்ச்சிப் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் பாதையில் சுருளிமலைச் சாரலில் தனியார் அறக்கட்டளை அமைப்பு ஒன்று "ஸ்ரீ கைலாசலிங்க பர்வதவர்த்தினி திருக்கோயில்" என்ற பெயரில் ஒரு கோயிலை அமைத்துள்ளது. இந்தக் கோயிலில் மிகப்பெரிய லிங்கம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது அதன் முன்பு பர்வதவர்த்தினி சிலை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சிலைகளின் முன்பாகவும், பின்புறமும் வலது மற்றும் இடது பகுதிகளிலும் சுமார் ஆயிரத்து ஐநூறு லிங்கங்கள் சிறியதும் பெரியதுமாக வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் ஒரு கோடி லிங்கம் வரை வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இந்த லிங்கம் அமைப்பிற்கு யாரும் உதவலாம் என்றும் இந்தக் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகையில் விபரங்கள் தரப்பட்டுள்ளன.
பயண வசதி
தேனியிலிருந்து குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே சுருளி நீர்வீழ்ச்சிக்கு பேருந்து வசதி உள்ளது. கம்பம் நகரில் காந்தி சிலைப் பகுதியிலிருந்து மினி பேருந்து வசதி 30 நிமிடங்களுக்கு ஒருமுறை உள்ளது. தேனியிலிருந்து கார் மற்றும் வேன் போன்ற வாகனங்களில் பயணிப்பவர்கள் உத்தமபாளையம் எனும் ஊருக்கு முன்பாகச் செல்லும் பாதையில் கோகிலாபுரம், இராயப்பன்பட்டி மற்றும் சுருளிப்பட்டி வழியாகப் பயணிக்கலாம். பயணத்தூரம் குறையும். பேருந்து வசதியை நாடுபவர்கள் கம்பம் நகருக்குச் சென்று விடுவது நல்லது.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.