இனி (ய) தமிழ் மொழியே...! - 12
வீட்டிலொரு மொழி
வெளியிலொரு மொழி
எமக்கில்லை...
நேசித்த ஒரே மொழி தமிழ்மொழி
பாலூட்டிய மணத்தோடு
என் தாய் கொஞ்சிய மொழி தமிழ்
அத்தை அடித்தாளோ
அரளிப்பூ செண்டாலே
மாமன் அடிச்சானோ
மல்லிகைப்பூ செண்டாலே
அடிச்சார சொல்லி அழு
அபதாரமா அம்புலியை வாங்கித்தாரேன்
என தாய் தாலாட்டியதும்
அன்னைத்தமிழ் தாலாட்டல்லவா
தொன்மை இளமை வளமை வாய்மை
மென்மை மேன்மை வலிமை இன்னும்
பல மை கொண்டதெம் தமிழ்
இளங்கோவடிகளும்
தொல்காப்பியனும்
தட்டிக்கொடுத்த தமிழ்
கம்பனும் வள்ளுவனும்
வாழ வைத்த தமிழ்
ஔவையும் அகத்தியரும்
ஆராதித்த தமிழ்...
எட்டையபுரத்திலிருந்து இமயம் வரை
இடி முழக்கமென வாழ்ந்த தமிழ்
பாரதி விட்ட இடத்திலிருந்து
பாரதிதாசன் புரட்டிப் பார்த்த தமிழ்
இனிய தமிழே நீ வாழ்க...
- கவிஞர் பரணி ரமணி, மதுரை.
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.