இனி (ய) தமிழ் மொழியே...! - 16
குறிஞ்சியிலே பிறந்தெழுந்து
குறவர்நாவில் புரண்டெழுந்து
குமரனுடன் தவழ்ந்தெழுந்து
கூதிருடன் குதித்தெழுந்து
தரணிக்கெல்லாம் புகழ்சேர்த்த
தாபதர் போற்றும் தேன் தமிழே!
வைகையில் நீராட்டி
முப்பாலால் பாலூட்டி
பாமாலை பூச்சூட்டி
செம்மையுடன் சீராட்டி
தமிழன்னை தாலாட்டி
வளர்த்தெடுத்த தேன் தமிழே!
அமிழ்தினும் தித்தித்தென்
ஆருயிருள் உயிர்த்தெழுந்து
இயல், இசை, நாடகம் மூன்றையும்
ஈன்றெடுத்த தேன் தமிழே!
உலகினுக்கு அணி செய்து
ஊன்றுகோலாய் தானின்று
எத்திக்கும் இசைபாடி
ஏடெடுத்த தேன் தமிழே
ஐந்நிலங்களின் அரசர்களும்
ஒன்றுபட்ட தமிழரெல்லாம்
ஓங்கியுயர்த்திப் புகழ்கின்ற
ஔவை சொன்ன அரும்மொழியாம்
அஃதே என் தேன் தமிழே!
நான் தோன்றிய கருவறை சிறிதாயினும்
தமிழராய் நாம் தோன்றிய கருவறை
பெரிதல்லவா?
என் தாய் - உன் தாய்
வேறாயினும், நமக்கெல்லாம்
தமிழ்த்தாய் ஒன்றல்லவா?
வீரத்தில் விளைந்தெழுந்த
தமிழர்களின் நெஞ்சம்தனில்
கோலமுற்று அமைந்திருக்கும்
தமிழ்த்தாயே நீ வாழ்க!
ஊரெல்லாம் பாடும் வண்ணம்
பாரெல்லாம் ஆட்சி செய்யும்
தேன் தமிழே நீ வாழ்க!
- கு. சுவாதி, கம்பம்.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.