இனி (ய) தமிழ் மொழியே...! - 17
தேனெல்லாம் பாலெல்லாம் இனிமையில்லை,
தெளிதமிழை நாவாறப் படிப்பவர்க்கு
கானெல்லாம் கடலெல்லாம் சுருக்கமுறும்
கணித்தமிழின் செறிவுதன்னை அறிந்துவிட்டால்
மானெல்லாம் மயிலெல்லாம் குயிலெல்லாம்
மயங்கி நிற்கும் செந்தமிழின் இசைகேட்டால்
வானெல்லாம் மலையெல்லாம் காற்றையெல்லாம்
வகையாய்க் கொண்டதுவே வண்டமிழே!
பரந்திருக்கும்நிலப்பரப்பை ஐவகையாய்ப்
பாகுபாடு கொண்டதுநம் பண்பாடு
அரங்கத்தில் மணம் பரப்பும் முத்தமிழில்,
அள்ள அள்ளக் குறையாத இலக்கியமும்
சரஞ்சரமாய் இலக்கணமும் துலங்கிடுமே!
தனக்கான வீரமொடு காதலையும்
உரமாக நற்றமிழ்த்தாய் கொண்டவளே
உலகத்து முதல்மொழிதான் தமிழ்மொழியே!
வல்லினமாய் மெல்லினமாய் இடையினமாய்
வகைப்படுத்தித் தமிழெழுத்தை வைத்தார்கள்
சொல்வதற்குத் தேனாக இனிக்கின்ற
சொல்வளத்தைக் கொண்டதுவும் நம்தமிழே
பல்லறங்கள் ஏற்றுநாமும் வாழ்வதற்குப்
பகர்ந்துரைத்தார் நம் அய்யன் வள்ளுவனார்
சில்லென்ற இறைப்பாடல் பலவற்றால்
சீர்மைகொண்ட செந்தமிழைப் போற்றுவமே!
- கி. சுப்புராம், தேனி.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.