இனி (ய) தமிழ் மொழியே...! - 18
பொதிகை மலையில் பிறந்தவளே! புலவர்கள் தாலாட்ட
வேந்தர்கள் கவரி வீச, முச்சங்கத் தொட்டிலிலே
வளர்ந்தவளே! தேனித் தமிழ்ச் சங்கம் வந்தவளே!
தேன் துளியே! இனிய தமிழ் மொழியே!
பிறமொழிகள் உன்னை மலைமுடியிலிருந்து
தூக்கியெறிந்தாலும், அருவியாய் விழுந்து
நதியாய் உருமாறி இடையசைத்து நடப்பவளே!
நீ கானல் நீருமல்ல, கடல் நீருமல்ல, மழை நீர்!
வழிமறிக்கும் பிறமொழி மாளிகையைத் தகர்த்தெறியும் ஏரி!
காதலித்து, கைப்பிடித்து இல்லறம் நல்லறமாக
வாழ்ந்து வளம்பெற்ற தமிழ் மறவர் கதை சொல்லும்
அகநானூறும் நீயே!
போர்மறவர் புகழ்பாடி, பார்போற்றும் வேந்தர்களின்
கொடை, வீரம் பாடும் புறநானூறும் நீயே!
பதினெண்கணக்கு நூல்களாய்ப் பவனி வந்து
பார்போற்றும் திருக்குறளால் பெருமை பெற்ற தெய்வமகளே!
தமிங்கிலமாய் வேடமிட்டுச் சிலர் தறிகெட்டு
அலைந்தாலும், தனித்தமிழாய் மீண்டெழுவாய்
இனி (ய) தமிழ் மொழியே!
இனி (ய) தமிழ் மொழியே நாட்டை ஆள வேண்டும்!
இனி (ய) தமிழ் மொழியே பள்ளிகளில் இருக்க வேண்டும்!
இனி (ய) தமிழ் மொழியில் குடமுழுக்கு செய்திட வேண்டும்!
இனி (ய) தமிழ் மொழியே வானத்து நிலவாய் ஒளிர வேண்டும்!
- பாவலர் ஆ. சின்னச்சாமி, போடிநாயக்கனூர்.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.