இனி (ய) தமிழ் மொழியே...! - 2
தென்தமிழன் தொகை வைத்து
எட்டுத்தொகையை வளர்த்தெடுத்த செந்தமிழே!
செய்யுளின் மரபுகவின் அனைத்தும்
பத்துப்பாட்டில் பாடியருளிய இசைத்தமிழே!
களப்பிரர் ஆண்ட காலம்
வரலாற்றில் இருண்ட காலமாம்
இருண்ட காலத்தில் இலக்கியத்தின்
ஒளியாய் மிளிரிய அறத்தமிழே!
பல்லவர் போற்றிய பக்தித் தமிழே!
பாண்டியன் கூடல் நகரில்
தமிழ்ச் சான்றோர்கள் கூடி
வளர்த்த சங்கத்தமிழே!
மற்ற மொழிகளில் மன்னனை
மையமாக்கி காப்பியம் படைக்க
மக்களை மையமாகக் கொண்டு
காப்பியம் படைத்த காப்பியத் தமிழே!
தொட்டில் பாட்டில் தொடங்கி
ஒப்பாரிப் பாட்டில் முடியும்
பாமர மக்களின் நாட்டுப்புறத் தமிழே!
கல்தோன்றிய காலந்தொட்டு
கண்னி மயமான இன்று வரை
மாற்றங்களைப் புகுத்திக் கொள்ளும் புத்தமிழே!
இத்தகு அருமைத் தமிழே
என் தாய் வழி வந்ததால்
நீயல்லவோ என் தாய்த் தமிழ்!
- மு. இராமலட்சுமி, தர்மாபுரி, தேனி மாவட்டம்.
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.