இனி (ய) தமிழ் மொழியே...! - 4
பூமி மொழிகளில்
போதையுள்ளது புகழ் மொழி
மயக்கமுள்ளது தாய்மொழி
மதுரமானது மழலை மொழி
மயங்க வைப்பது தமிழ் மொழி
எல்லா மொழிகளையும்
தலைவணங்க வைக்கும்
இந்தத் தமிழ் மொழியோ
தென்றல் கரத்தால் தேவதைகள் தீண்டும்
நாத வீணைகளின் நரம்புகளின் அதிர்வு
ஜீவயாழ் சிந்தும்
தேவராகத் தேனமது
சமத்துவமில்லா அன்னிய மொழிகளில்
அங்குமிங்கும் அலைக்கழிக்கப்பட்டு
காசுக்காக மொழி கற்கும்
சிலுவையில் அறையப்பட்டோம்
காகிதப் பட்டங்கள் பறக்கின்றன
வெள்ளையாகத்தான்
அதற்கும் வண்ணம் தீட்டுகிறார்கள்
கலர் கலராக அன்னிய மொழியில்
ஈயென இரக்கும் இழிவையும்
கொள் எனக் கொடுக்கும்
ஈதலின் பெருமையையும்
ஒத்த உணர்ச்சியில் விழையும்
நட்பின் மேன்மையையும்
செம்புலப் பெயல் நீர் போல
கலந்த காதல் நெஞ்சங்களின் சிறப்பையும்
விழுப்புண் பெறத் துடிக்கும்
வீரனின் மற நெஞ்சத்தையும்
அறத்தில் மட்டுமல்லாது மறத்திலும்
அன்பைப் போற்றும் அகிம்சையும்
கற்றுணர்ந்த பண்புள்ள மனத்தைத்
தந்தது எங்கள் தமிழே!
- விஜி மோகன், கோயம்புத்தூர்.
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.