இனி (ய) தமிழ் மொழியே...! - 5
எதைச் சொல்லித் துவங்க?
ஆதியும் அந்தமுமாய் எம்தமிழ்
அன்னை என்றால் புலியை
முறத்தாலடித்த தாயின் நினைவு
சான்றோன் ஆக்குதலே தந்தைக்கு
கடனென்னும் அடுத்த நினைவு
பிள்ளைகள் என்றதும் இவன்தந்தை
எந்நோற்றான் கொல்எனுஞ் சொல்
காதல் என்றதும் புதுக்கவிதைவரை
செம்புலப் பெயல்ரின் நினைவு
நண்பனென்றதும் உடுக்கை இழந்தவன்
கையென்னும் உவமையின் நினைவு
ஊரென்றதும் திருவிழவுறும் மதுரை
மூதூரின் மட்டற்ற நினைவு
கோபமென்றதும் கண்ணகியின் கேள்வி
பாண்டியனை குத்திய நினைவு
போரென்றதும் வெட்சி முதலா
வானைப் பூக்களின் நினைவு
அரசனென்றதும் சிபியும், மனுநீதியும்
பொற்கையு மாகியோரின் நினைவு
அழகென்றதும் மாதவி சீதை
மணிமேகலையென அடுக்கடுக்காய் நினைவு
இப்படியாய் எம்நினைவும் நினைவின்மையும்
நீயேஎன் இனிய தமிழ் மொழியே…!
- முனைவர் பி.வித்யா, மதுரை.
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.