இனி (ய) தமிழ் மொழியே...! - 6
அன்றாடம் பேசுகின்ற பேச்சினிலே
அயல்மொழியின் கலப்பின்றி பேசவில்லை
என்றாலும் தமிழெனக்கு உயிரென்று
எழுதிடவும், பேசிடவும் கூச்சமில்லை
மன்றத்தில் நின்றுதமிழ் உரைக்கையிலே
மற்றமொழி வந்து அதன் முகம்காட்டும்
நின்றாழும் மொழியென்று உணர்ந்திருந்தும்
நிறம் மாறிப்போகிறதோ தமிழ் கூட்டம்
புரியாத மொழியதனில் பேசுகையில்
புத்திசாலி பிள்ளையென போற்றுகிறோம்
அறிவாளி பிள்ளையெனக் கூறிக்கூறி
அவனுடைய தமிழ்பற்றை மாற்றுகிறோம்
சொந்தமொழிக் கல்வியிணை புறந்தள்ளி
துயர்பட்டு அயல்மொழியில் படிக்கின்றோம்
வந்தமொழி வாழவைக்கும் எனச்சொல்லி
வளருகின்ற தமிழ்பற்றை தடுக்கின்றோம்
இந்தநிலை இனிமேலும் தொடருமெனில்
இனி(ய)தமிழ் வளர்வதற்கும் தடைவருமோ?
மந்தநிலை அகற்றுகின்ற முயற்சியிலே
மக்கள்மன மாற்றம் இனி நடைபெறுமா?
- வே. ரவிசந்திரன், ஓலப்பாளையம், திருப்பூர் மாவட்டம்..
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.