இனி (ய) தமிழ் மொழியே...! - 8
எந்தன் மொழியே இனியவளே
என்றும் நல்லன தருபவளே
ஏற்றம் தந்திடு பொன்மகளே
சந்தம் நிறைந்த பாக்களிலே
சடுதியில் வந்து நின்றிடுவாய்
சாந்தம் மனதில் தருபவளே
சொந்தம் என்றும் நீயானால்
சொல்லில் உயர்வு எனதாகும்
சொக்க வைக்கும் எந்தமிழே
பந்தம் உலகில் பலரிருந்தும்
பவித்திர உறவு உனதாகும்
பல்லாற்றல் என்றும் தருபவளே
நிந்தனை நீக்கி நீடுபுகழ்
நித்தமும் தந்திடும் நிறைமதியே
நிலைபேறு டைய நித்யமானவளே
கந்தமாய் என்னுள் மணந்து
காற்றாய் என்னுள் கலந்தவளே
கவிதை ஊற்றாய் வந்திடுவாய்
காந்தமாய் கவர்ந்தனையே யாவரையும்
கார்முகிலாய்க் கவிமழை பொழிவோருக்குக்
கருணை மழை பொழிபவளே
ஆட்சிக்கட்டிலில் இருந்த நீ இன்று அகிலம் ஆள்கிறாய்
இனிமையின் ஊற்றே
இன்பத்தின் கீற்றே
இனி என்றென்றும்,
எங்கெங்கும் பொங்குதமிழ்... பொங்கும் தமிழ்...
- முருகேஸ்வரி ராஜவேல், திண்டுக்கல்...
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.