அன்றும் இன்றும் - 11
இயற்கை எழிலால் இனிமை அன்று
இயந்திரப்புகையால் ஓசோனில் ஓட்டை இன்று
செவ்வானில் கோலமிடும் சாகசப்பறவையினம் அன்று
அலைபேசிக் கோபுரத்தால் அழியும் இனமாய் இன்று
இயற்கை விவசாயத்தால் செழித்த மண் அன்று
செயற்கை உரத்தால் பொய்த்த மண் இன்று
கல்லைச் சிலையாக்கிப் புனிதத்தலமாக்கினர் அன்று
சிலையை விலையாக்க நாடுகடத்தினர் இன்று
கல்வி கற்க பள்ளி வளாகங்களாய் அன்று
கல்வி விற்க வணிக வளாகங்களாய் இன்று
நீராகாரத்தால் நிறைந்த வயிறு அன்று
நீளும் விலைவாசியால் வாடும் வயிறு இன்று
அகல் விளக்கு ஏற்ற மட்டும் பெண்கள் அன்று
அரியணையை அலங்கரிக்கும் பூக்களாய் இன்று
காளைகளும் களைக்கும் பயணம் அன்று
கழுகுகளாய்ப் பயணிக்கும் விமானம் இன்று
விவசாயத்தால் வளர்ந்த நாடு அன்று
விஞ்ஞானத்தால் செழிக்கும் நாடு இன்று
நிலா காட்டிச் சோறு ஊட்டினர் அன்று
நிலாவில் குடியேற முயல்கின்றனர் இன்று
- ம. குருதேவராஜ், தர்மாபுரி, தேனி மாவட்டம்.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.