அன்றும் இன்றும் - 12
அன்னை மொழியாம் அழகிய தமிழும்;
அழகாய் ஆட்சி செய்ததே அன்று!!
அந்நிய மொழியின் மோகமிங்கு கூடியதாலே;
அழகிய தமிழையும் பேசத்தயங்குகின்றனரே இன்று!!
ஆதிமனிதனும் ஓலைச்சுவடுகளிலே தமிழ் மொழியை;
ஆழமாய்ப் பதித்தே வளர்த்தானே அன்று!!
அம்சமாய் உள்ளங்கையில் அடங்கும் கைபேசியிலே;
அழகாய் வளர்க்கிறோம் தமிழை இன்று!!
இயற்கை அன்னையின் மடியிலே உறங்கி;
இனிய வாழ்க்கை வாழ்ந்தனரே அன்று!!
இயற்கையை அழித்தே அழிவின் மடியில்;
இம்சையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோமே இன்று!!
கூடி வாழ்ந்தால் கோடி நன்மையென்றே;
கூட்டுக் குடும்பமாய் வாழ்ந்தனரே அன்று!!
தனிக் குடித்தனம் என்ற பெயரிலே;
தனிமைச் சிறையில் வாழ்கின்றனரே இன்று!!
சுதந்திர தாகம் கொண்டு தூக்குக்கயிற்றை;
சுகமென நினைத்தே முத்தமிட்டனரே அன்று!!
மதிக்கப்பட வேண்டிய பெண்ணை சிதைத்தே;
தூக்குக்கயிற்றுக்கு பலியாகின்றனரே இன்று!!
அன்றும் இன்றும் அகிலத்தில்
அனைத்தும் மாறியதென்றாலும்...
அன்றும் இன்றும் மாறாமல் இருப்பது;
அன்னையவளின் பாசம் மட்டுமே!!!
- கோமதி முத்துக்குமார், திருவில்லிபுத்தூர்.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.