அன்றும் இன்றும் - 15

தாயின்அரவணைப்பில்
பிள்ளைகள் அன்று...!
ஆசிரமங்களின்தயவில்
பெற்ற தாய் இன்று...
ஆட்சி அன்று....!
தனிக்குடும்பங்களின்
வீழ்ச்சி இன்று...
ஆசிரியர்க்கு
அடி பணிந்த மாணவர்கள் அன்று...!
அவர்களைத் திருத்தும்
குச்சிகள் செல்லரித்து
போனது இன்று....
சொந்தபந்தம் கூடிநின்று நடத்திய
திருமணங்கள் அன்று ...!
ஆன்ட்ராய்டில் தாலிகட்டி
அமேசானில் குழந்தைப்பேறு இன்று...
அறிவிப்புகள் இல்லாமல் வந்தாலும்
அரவணைத்த சொந்தங்கள் அன்று...
அறிவிப்புகள் கிடைத்தும் , வீட்டை
இழுத்துப் பூட்டும் சொந்தங்கள் இன்று...
வீடுகளில் சுகமாய் நடந்தன
பிரசவங்கள் அன்று...!
வயிற்றுதசை வெட்டப்பட்டு,
குழந்தை எடுக்கப்படுகின்றன இன்று...
வீடுதேடி வேலை வந்த
காலம் அன்று...!
வேலைதேடி அலைவதே
வேலையாய் போனது இன்று...
நகரா நேரங்களை
மட்டும் ஆட்கொண்ட
தொலைக்காட்சி அன்று...!
நம்மை நகரமறுத்து ஆட்சி செய்யும்
தொடர் காட்சிகள் இன்று...
தத்துவப்பாடல்களால்
வாழ்க்கை இனித்தது
அன்று....!
கொச்சைப் பாடல்களால்
வார்தைகளும், வாழ்வும்
கசக்கிறது இன்று...
அரசுப்பள்ளிகளில்
சுதந்திரப் பறவைகளாய்
சிறகடித்தகாலம் அன்று...!
தனியாரில் தண்ணீராய்
செலவு செய்து சிறையில் அடைக்கும்
காலம் இன்று...
ஆற்று நீரிலும்,
குளத்து நீரிலும்
ஆர்ப்பரித்த காலம் அன்று....!
வீட்டுக்கொருவராய்
குடிபோதையில்
கவிழ்ந்துகிடக்கும்
காலம் இன்று...
மனிதநேயம் மலர்ச்சியுடன்
இருந்தது அன்று...!
'மனிதன்' என்ற போர்வைக்குள்
மறைந்திருக்கும் மிருகங்கள் இன்று...!
- ரா. சந்திரசேகரன், வடுகபட்டி, தேனி மாவட்டம்.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.