அன்றும் இன்றும் - 18
தம் வீட்டு முற்றத்தில் அன்று வாழ்ந்த
தமிழர்கள் முன்திண்ணை கட்டி வைத்தார்
நிம்மதியாய் வழிப்போக்கர் வந்தமர்ந்து,
நெடுங்களைப்பைத் தாம்போக்கி வாழ்த்துரைத்தார்
மும்மாரி வான்பொழிய எங்கணுமே
முறுவலித்து வளம்கொடுக்கும் பசும்பயிர்கள்
வெம்மைதனைத் தணிக்கின்ற ஆற்றுவெள்ளம்
மேலுயர்ந்து கரைததும்பிச் சென்றதன்று.
கற்பழிப்பு கொலைகொள்ளை அன்றில்லை
கனிவுடனே ஒற்றுமையாய் வாழ்ந்தார்கள்
நற்றமிழைப் போற்றிநானும் இலக்கியங்கள்
நனிசிறக்கப் படைத்தளித்துப் பெருமையுற்றார்
பொற்காலம் இருந்ததன்று; பொய்யில்லை
புகழுடனே நம்முன்னோர்கள் வாழ்ந்தார்கள்
தந்தைதாயை ஏதிலியாய் அலையவிட்ட
தனயர்கள் பெருகிவிட்டார் இற்றைநாளில்
கந்தைகட்டும் ஏழையரைக் காணாத
கண்கண்டு பணம்பறிக்கும் ஆட்சியாளர்
சந்தையெனப் பெருக்கமுற்ற கையூட்டு
தலைவிரித்துப் பேயாட்டம் ஆடிடுமே!
வந்தவாழ்வில் நோய்நொடிகள் பெருகியதால்
வருத்தமுற்று வாழ்பவரோ எண்ணிலாரே!
- கி. சுப்புராம், தேனி.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.