அன்றும் இன்றும் - 20

எண்ணங்களில்
வண்ணங்கள் கலையாத
காலத்தின் கோலங்களை
மனத்திரையில் காட்சியாக்கி
அதைச் சாட்சியாக்கி
மீட்சிப்படுத்துகின்றேன்...
நிகழ்கால வாகனத்தில்தான்
நாம் அனைவருமே
நெடும் பயணம் செய்கின்றோம்...
அதன் ஒவ்வொரு நிறுத்தமும்
இன்றில்தான் அமைகிறது...
அடுத்த நொடியிலேயே
அன்றில் போய் குமைகிறது...
நம் வாழ்க்கைப் பயணத்தில்
அன்றில் கண்ட அனுபவங்களைச்
சுவைப்பதிலேதான்
இன்றின் நிமிடங்கள்
இனிமையாகின்றன...
அன்றைய நிகழ்வின்
புத்தகத்தைப் புரட்டினாலே
அளவற்ற ஆனந்தம்தான்...
கசப்பை இனிப்பாகவும்
இனிப்பை இன்னும் தித்திப்பாகவும்
நினைவிலே தருகின்ற நித்தியசக்தி
கடந்த காலத்திற்கு மட்டுமேயுண்டு...
ஆம்...
அன்று மாதம் மும்மாரி பொழிந்தது...
பச்சைநிற சாயம் வெளுக்காத
இயற்கை விவசாய விளைநிலங்கள்
விரிந்து பரந்து செழித்திருந்தன...
ஆற்றுத்தண்ணீரை ஊற்று தோண்டி
அப்படியே பருகினோம்...
உணவு உடை உறைவிடப் பஞ்சம்
மிகுந்திருந்த அந்நாட்களிலும்
அக்கம்பக்க அன்னியோன்யங்கள்
அளவிடற்கரியது...
துயரத்தில் பெருகும் கண்ணீர் துடைக்க
துடித்த கரங்கள் ஆயிரம்...
அற்றம் காக்கும் கருவிபோல
சுற்றமும் நட்பும் சூழ்ந்த
அன்றைய சுகந்தமான வசந்த காலம்
இன்று ஏகாந்தத்தில் ஏங்கித் தவிக்கிறது...
பிரம்பை எடுக்காதவன்
தன் பிள்ளையைப் பகைக்கிறானென
ஏதோவொரு வேதநுாலில் கண்டதாக நினைவு.
ஆசிரியர் கண்டிப்பைத் துண்டிப்பு செய்து
தண்டிப்பை அவருக்கே தருவது
காலக்கொடுமை...
தறுதலைகளின் தாண்டவம்
பொதுவெளியில் தாளவில்லை.
பண்பாடும் கலாச்சாரமும்
பாசமும் நேசமும்
பறந்தது... மறந்தது... மறைந்தது...
உணவுகளில் பலவும் விசம்...
அதனாலே உணர்வினிலும் பரவுது விசம்...
கர்ப்பம் தரித்ததும் கருவுக்கும் ஊசி...
சுகமான பேறுகாலம் ஏறத்தாழ இல்லை.
சிசேரியன் என்றால்தான் நமக்கும் கௌரவம்...
எல்லாமே நாம் கிழித்த கோடுகள்தான்...
அழிக்கத்தான் முடியவில்லை.
அல்லது மனமில்லை.
அல்லது துணிவில்லை.
தொலை தொடர்பு சாதனங்கள்
நம் நிலையுயர வந்தவையே...
நம் அஞ்ஞான போக்கிற்கு
விஞ்ஞானம் என்ன செய்யும்?
ஒன்று மட்டும் நிச்சயம்...
மாற்றத்தை மறுசுழற்சி செய்ய முடியாது...
உடைந்த பானையை உருட்ட முடியாது...
ஆகவே.. நண்பர்களே..!
அந்த நாள் மீண்டும் வருமாவென
அங்கேயே நில்லாமல்
ஒழுக்க நெறியோடு
வாழ்க்கைப் படகிலேறி
அன்றுபோல இன்றும்
இன்றுபோல என்றும்
கால வெள்ளத்தில்
மகிழ்ச்சியின் துடுப்பசைத்து
வெற்றியென்னும் கரை சேர்வோம்...
- கவிஞர் செ.திராவிடமணி, கூடலுார்.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.