அன்றும் இன்றும் - 22
ஆலமர நிழலிருந்து அழகான மணக்கதைகள்!
கோலவிழி மாதரெலாம் பேசியது அக்காலம்!
ஆண்ட்ராய்டு காலத்திலே பழங்கதைகள் பலபேசி
வீணாக தன்வலிமை இழந்ததெல்லாம் இக்காலம்!
ஆதவன் உதிக்குமுன்னே நீராடிக் கோலமிட்டு!
ஆலயத்தை நாடும் பெண்கள் அக்காலம்!
மாதவத்து பெருஞ்சுடராய்
மங்கையராய்ப் பிறந்து விட்டு
முகநூலில் முகம் மறந்து
போனதுவும் இக்காலம்!
பாட்டிக்கதை கேட்காத பேரனேன்று அன்றில்லை!
அவள் வைத்தியத்தில் பிழைக்காத
கோமகனும் அன்றில்லை!
பாட்டிகளை முதியோரின் இல்லந்தனில் பொர்த்திவிட்டு!
பாதியிலே ஆயுள் விட்டு ஓடுகின்றார்!
பாட்டியின்றி ஏன் எதையோ தேடுகின்றார்?
அவள்கதைகள் மறந்து இங்கே வாடுகின்றார்!
உறவுகளின் இனிமையிலே
உயிர்களையே பலகாலம்!
உளமார போற்றியதும்
காத்ததுமே அக்காலம்!!
பிரிவுகளின் வலிகளையேச்
சுகமான சுமைகளென்று
அறியாமல் வாழ்வதும்
தேய்வதும் இக்காலம்!
இனிமையான தமிழோடு
வளமையான பொருளோடு
மனிதனாக வாழ்ந்ததுவும்
மகிழ்வோடு அக்காலம்!
தனிமையான நினைவோடு!
வெறுமையான மொழியோடு
கருமையான வாழ்வுகொண்டு
வாழ்வதுவும் இ்க்காலம்!!
இழந்ததெல்லாம் வேண்டுமிங்கு!
மறந்தவைகள் வருகவென்று!
நடந்தைவைகள் மறையவென்று?
நல்லவைகள் நிலைக்கவென்று!
தமிழ் கொண்டு சூளுரைப்போம்!
தரணி போற்ற வாழ்நதிருப்போம்!
இனியேனும் உறவுகளைப்
பிரியாது நாமிருப்போம்!
- அ. பாண்டுரங்கன், மதுரை.
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.