அன்றும் இன்றும் - 23

இயற்கையோடு இயைந்து வாழ்ந்தது அக்காலம்
செயற்கையோடு செத்துப் பிழைப்பது இக்காலம்
கூட்டுக்குடும்பமாய்க் கூடி வாழ்ந்தது அக்காலம்
தனிக்குடும்பமாய்த் தனித்துக் கிடப்பது இக்காலம்
மனிதகுணமே பெரிதென நினைத்தது அக்காலம்
மிகுந்தபணமே மாண்பென நினைப்பது இக்காலம்
படிப்பைப்பார்த்து மதித்து நடந்தது அக்காலம்
நடிப்பைப்பார்த்து மயங்கித் திரிவது இக்காலம்
உறவுகளைப் பேணச் சொன்னது அக்காலம்
இடைவெளி அதிகமானதால் உதறித்தள்ளுவது இக்காலம்
பகிர்ந்துண்ணும் பழக்கம் ஊட்டியது அக்காலம்
தனித்துண்ணும் வழக்கம் வந்தது இக்காலம்
பாட்டிமார் கதைகள் சொன்னது அக்காலம்
அலைப்பேசிகளில் பால்யத்தைத் தொலைப்பது இக்காலம்
வறுமை வாட்டியெடுத்தும் நிம்மதியுற்றது அக்காலம்
வசதிகள் கொட்டிக்கிடந்தாலும் உறக்கமில்லை இக்காலம்
உணர்வுகளோடு உறவாடி மகிழ்ந்தது அக்காலம்
எந்திரகதியில் பொருளாதார வேட்டையாடுவது இக்காலம்
உணவை மருந்தாய் உட்கொண்டது அக்காலம்
மருந்தே உணவாகிப் போனது இக்காலம்
சமூகப்பார்வை சற்றே அதிகமானது அக்காலம்
சுயநலத்தால் சுருங்கிப் போனது இக்காலம்
தொழில்நுட்பம் இல்லாமலேயே சுகமாய் வாழ்ந்தது அக்காலம்
எல்லாமிருந்தும் வெறுமை சூழ்கிறதே இக்காலம்
- கவிஞர் மு.வா.பாலாஜி, ஓசூர்.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.