அன்றும் இன்றும் - 24

சித்திரையில் பிறந்து
சிறகசைக்க வந்தவனை
வைகாசிதனில் வழிகாட்டி
வாழ்வை வளப்படுத்தினாய்!
ஆனியில் என்
மேனிஅழகைக் கண்டு ரசித்தாய்!
ஆடிப்பெருக்குதனில்
நீராட்டிப் பூச்சூட்டி
ஆவணியில் அறிவுபெற
ஆசானிடம் வழிகாட்டினாய்!
புரட்டாசி மாதத்தில்
புதுமையான கதைகளுடன்
பாட்டி மடிதனிலே
பண்புடனே என்னை வளர்த்தாய்!
ஐப்பசியில் புத்தாடையுடன்
இன்பத்தை இனிப்பாய் ஊட்டினாய்!
கார்த்திகையில் மின்னும் தீபங்களாய்
உலகை வலம் வர
மார்கழியில் மலர்ந்த பூ என்னை
மார்மீது நீ சுமந்து - மாமன்
பெருமைதனை மாக்கோல
வண்ணங்களாய் வடிவமைத்தாய்!
தைமாதந்தனில் புத்தரிசிப் பொங்கலுடன்
உழைப்பின் மகத்துவத்தை நீ உணர்த்தி
மாசியில் மாந்திரீகக் கூட்டங்களைவிட்டு
மனிதம் படைக்கமகத்தானமனிதனாய்
பங்குனியில் பார் போற்ற
பறக்கவைத்து அழுகு பார்த்தாய்!
அன்னையே! அன்று…
அத்தை மாமா தாத்தா பாட்டி
என எவரும் இல்லாமல்
அனாதையாய் வளர்கின்றேன்!
ஆம்,
அன்பு இழந்து அறிவு குறைந்து
பண்பு மறைந்து, பணிவு தவிர்த்து
உண்மையை உணராமல்
உறவை மதிக்காமல்
எண்ணத்தைச் செயலாக்க
எவருடனும் பேசாமல் ஏமாந்து நிற்கையில்
உரு சிதைந்து உருவத்தைத்தான் இழந்து
சொந்தம் துறந்து…
நான்குபக்க வண்ணச்சுவரில்
மின் விளக்குகளுடன்
அலைப்பேசி மடிக்கணினி என
அலைமோதும் தனிமை தரம் இன்று…
- க. பாலுசாமி, தொட்டியம், திருச்சி மாவட்டம்.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.