அன்றும் இன்றும் - 24
இயற்கையோ டியைந்து இனிமை கண்டான் அன்று
செயற்கையால் சிதைந்து செழுமை இழந்தான் இன்று
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றார் அன்று
போதும் எனக்குக் கடுகுள்ளம் என்கிறார் இன்று
ஒன்றே எங்கள் சாதியென்று வாழ்ந்தான் அன்று
நன்றெனத் திகழ்ந்ததைப் பிரித்தே வைத்தான் இன்று
வாழும் நாளனைத்தும் வரமெனக் கண்டான் அன்று
சாகும் நாளெண்ணியே சஞ்சலம் கொள்கின்றான் இன்று
எண்ணம் உயர்ந்தால் யாவும் சிறக்கும் என்றும்
திண்ணம்இதுவே என்றுணராத் தன்மை இன்று
கீழடி கண்ட உயர்சமுதாயம் நமது
தோண்டித் தோண்டி எடுத்தாலும் தொலையுது பண்பு இன்று
அழகுத் தமிழில் அழைத்தல் மட்டுமே பண்புநலனில் சேர்த்தியா?
ஆன்றோர் சான்றோரின் அமுதமொழியைப் போற்றி ஒழுகினால்
அல்லல் அறுபடும் என்றுமே
நல்லது போற்றி நலமுற வாழ்ந்திடல் நன்றென்றும்
இயற்கை சார்ந்த இனிய பயணத்தில்
இயைந்தே செல்லும் இளைஞர்கூட்டம்
இழுத்துச் செல்லுமோ? பசுமை சூழ்ந்த வாழ்க்கைக்கே
கழுத்தை அழுத்தும் துயர் வந்த போதும் கரைந்தே எல்லாம் மறைந்துவிடும்.
வானமும், வையமும் மாறாது நிற்கும்
என்றும்,என்றென்றும் ஒன்றாய், நன்றாய்.
- முருகேஸ்வரி ராஜவேல், திண்டுக்கல்.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.