அன்றும் இன்றும் - 27
அன்று கூட்டு குடும்பங்கள்
இனிமையை கூட்டின
இன்று தனிகுடும்பங்களாய்
தனிமையை காட்டின
அன்று நிலா
தன்னொளியில் தங்கி இருந்தது
இன்று நிலா
மின்னொளியால் மங்கி இருக்கிறது
அன்று தொலைதொடர்பு
இளைத்துப் போயிருந்தது
இன்று தொலைத்தொடர்பால் - மக்கள்
திளைத்துப் போயிருக்கிறார்கள்
அன்று சிறுவர்கள்
தரையோடு வரையறையோடு
விளையாடினார்கள்
இன்று தனியறையோடு தொடுதிரையோடு
விளையாடுகிறார்கள்
அன்று பொழுதுபோக்கு
மனிதனின் பழுது நீக்கியது
இன்று பொழுதுபோக்கு
மனிதனை பழுதாக்குகிறது
அன்று பாசம் அன்பின்
வாசம் வீசியது
இன்று பாசம் வெறும்
வேசம் பூசுகிறது
அன்று ஆகாரம்
உடல் நலத்திற்கு
இதம் செய்வதாயிருந்தது
இன்று உடல்நலத்தையே
வதம் செய்வதாயிருக்கிறது
அன்று நீர்நிலைகள்
சுத்தமாய்க் காட்சி செய்தன
இன்று அங்கு
அசுத்தமே ஆட்சி செய்வதாயிருந்தது
- வே. ரவிசந்திரன், ஓலப்பாளையம், திருப்பூர் மாவட்டம்.
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.