அன்றும் இன்றும் - 29

அக்காலத்தும் இக்காலத்தும் அகிலத்தின் நிலை பற்றி
என் அறிவினாலே சிந்தை செய்தேன்
அதில் கண்ட உண்மை சிலவற்றை
இந்த அவைதன்னிலே கூற வந்தேன்
கற்காலத்திலே கருமந்தான் மானுடத்தின் மூலநோக்கம்
கலங்காதே என்றுரைக்க கண்ணன் வந்தான்
தருமத்தின் மாண்பினையே எடுத்துச் சொல்ல
தரணியிலே வந்துதித்தான் குந்தி மைந்தன்
பிற்காலத்தில் உருவந்தான் தெய்வமென்று நம்பிக்கொண்டு
உயிரற்ற கல்லுக்குப் பூசை செய்து
அருவத்தில் தெய்வத்தைத் தேடாதோரை
அறிவுறுத்தவே வந்தார் வடலூர் வள்ளல்
ஆதியிலே கடவுளுக்கு உருவமில்லை
அர்ச்சனைகள் பூசைகல் என்று எதுவுமில்லை
பாதியிலே வந்தவர்தம் நலனுக்காக
படைத்திட்டார் பலப்பல கடவுள் பொம்மை
போதியிலே ஞானம் பெற்ற புத்தர் சொன்னார்
போதுமென்ற மனமே தெய்வமென்று
சோதியிலே உள்ளதப்பா தெய்வமென்று
சொல்லிடவே வந்திட்டார் வடலூர் வள்ளல்
காசு சேர்க்கும் கூட்டமொன்று கள்ளநோக்கில்
காசினியில் மூடத்தைக் கணக்காய் நட்டார்
பாவிகளாய் மாந்தரையே ஆக்குதற்கே
உயிர்ப்பலிகளையே கடவுளுக்குக் கொடுக்கச் சொன்னார்
சாவினையேத் தள்ளிடவே வேண்டிக் கொண்டு
சாவடித்துத் தின்னுதல் நியாயமாகுமோ?
கோயிலிலே கொல்லுதல் கூடாதென்ற
உயர்கொள்கையைச் சொல்லிடவே வந்தார் வடலூர் வள்ளல்
என் மார்க்கம் உன் மார்க்கமென்று சொல்லி
ஏய்த்திட்ட காலத்தில் வந்த வள்ளல்
சன்மார்க்கம் உயிர்களையேக் கொல்லா மார்க்கம்
தனிமார்க்கம் சன்மார்க்கம் என்று சொன்னார்
நன்மார்க்கம் இன்மார்க்கம் நல்லோர் மார்க்கம்
நல்லவராம் இராமலிங்கம் நவின்ற மார்க்கம்
சன்மார்க்கம் உங்களையேச் சான்றோனாக்கும்
சத்தியமிது பொய்யில்லை இறைவன்மேல் ஆணை!
- வீ. வீரமணி, வீரபாண்டி, தேனி மாவட்டம்.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.