அன்றும் இன்றும் - 3
காக்கைக் கூட்டம் நாங்கள் என்பதை
காலை உணவில் கண்டு கொண்டோம்
காலைக் குளியல் கனவு என்பதைக்
காலப்போக்கில் புரிந்து கொண்டோம்
திருநீறு மணக்கும் நெற்றியைத்
தேர்வுதோறும் கண்டோம்
நாமம் சுமக்கும் ஏமாற்றங்களைத்
தேர்வின் முடிவில் அறிகிறோம்
அறிவிப்பைப் பகிர்ந்தோம் அன்று
அறியாமையைப் பகிர்கிறோம் இன்று
அன்று உறக்கமில்லா இரவிலும் சோமபல் இல்லை
இன்று மதிய வகுப்புகளில் விழிப்பதே இல்லை
நிராகரிப்புகள் வலியைத் தந்தாலும்
விசாரிப்புகள் வசந்தம் தந்தது
அன்று சாணமிட்ட வாசலில் பூசனிப்பூ பூத்தது
இன்றோ ...
சிலிண்டர்களில் செயற்கை வாசம்
காற்றுக்குக் கூட வர்த்தக வளாகங்கள்
செயற்கை அரிசி, செயற்கை காய்கறி
அலுத்துப் போனதால்
பசிக்கேத் தடுப்பூசி
ஒப்பந்தங்களில் கூட
அம்மா, அப்பா கிடைக்கின்றனர்
இயற்கையைத் தவிர...
அன்று அன்னம், நாரை, புறா, மேகங்களைத் தூதுவிட்டோம்
இன்று
எண்ணங்களைப் பதிவு செய்யச் சிணுங்கல்
இல்லாச் செல்போன் வரவு
வேற்றுக் கிரகங்களுக்கும் விரைவுப் பேருந்து
அதனால் அயல்நாடாகும் அண்டை வீடு
சில்லரை வியாபாரத்தில் சிறுநீரகம்
மொத்த வியாபாரத்தில் பாரதம்
எல்லாம் இங்கே கிடைக்கும்...
அன்று மனுநீதிச் சோழன் நீதி காத்தான்
பாண்டிய மன்னன் நீதி தவறினான்
இன்றோ வழக்குகள்
ஆழ்துளைக் கிணற்றுக்குள்
விபத்தென்று அழுத்தப்படுகின்றன.
எல்லாம் கிடைக்கும் இன்று
ஆனால்,
மனிதமும் மனிதநேயமும்
மரித்துப் போய்விட்டன.
- சீ. விஜயலட்சுமி, கோயம்புத்தூர்.
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.