அன்றும் இன்றும் - 5
புயல் வரும் பூகம்பம் வரும்...
சில நேரங்களில் ஆழிப்பேரலையும் வரும்...
இந்திய-பாகிஸ்தான் உறவுகளாய் அவ்வப்போது...
சண்டையிட்டு முறைத்துத் தள்ளி நிற்கும்...
சடுதியில் சமாதானமாகி சங்கீதமும் பாடும்...
நால்வகை திசைகளின் நம்பிக்கை நட்சத்திரம்...
அன்றும் இன்றும் அண்டை வீட்டுறவுகள்...
பிறப்பும் இறப்பும் கூட பதிவிடப்படும்...
அங்கு தான் முதல் தகவலாக...
தொட்டில் குழந்தைகள் தோள்கள் தாவும்...
பள்ளிக் குழந்தைகள் கில்லி விளையாடும்...
பருவப் பெண்கள் பல்லாங்குழி ஆடும்...
காளையர்கள் கண்கள் காதல் பேசும்...
கதைக் களமாகும் மாலைநேரத்து வாயில்கள்...
அரசியலும் ஆன்மீகமும் பேசும் மதிற்சுவர்கள்...
விலையில்லா பலசரக்குக் கடையாகவுமாகும் அடுக்களைகள்...
குத்திக்காட்டி குதூகலிக்கும் குடும்ப உறவுகளினூடே...
தட்டிக்கேட்டு தன்னம்பிக்கை தரும் உறவுகள் ...
தொப்புள்கொடி உறவுகள் தொலைதூரத்தில் இருக்க...
தொடர்வண்டி பயணமாய் உடனிருக்கும் உறவுகள்...
தேடிச் செல்லமுன் நாடிவரும் உறவுகள்...
சாதி மத இனங்களைக் கடந்து...
சமத்துவம் பேணும் சமுதாய உறவுகள்...
அன்றும் இன்றும் அண்டை வீட்டு உறவுகள்...
- தி. இராஜபிரபா, தேனி

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.