அன்றும் இன்றும் - 6
சேற்றில் கால்வைத்து சோற்றில் கை வைத்திட
மும்மாரி பொழிந்தது அன்று!
ஆற்றில் நீர் வறண்டு மண்ணை அள்ளியதும்
மும்மாரி பொய்த்தது இன்று!
விளைநிலங்களில்
நல் நெல் விளைந்தது அன்று!
அந்த விளைநிலங்கள் விலை நிலங்களாகி
கல் முளைத்தது இன்று!
கதை சொல்ல, விடுகதை சொல்ல
நல் நூலகங்களாக தாத்தா, பாட்டிகள் அன்று!
அந்த நூலகத்தின் நூல்கள் எல்லாம்
முதியோர் இல்லங்களில் இன்று!
வண்ணத்துப்பூச்சிகள் பிடித்து
கைகளில் ஒட்டிய நிறம் பார்த்து அறிந்தது அன்று!
அந்த வண்ணத்துப்பூச்சிகளையே
செல்பேசியில் காட்டி நிறத்தைப்புரிய வைப்பது இன்று!
காக்காய் குஞ்சு ஆட்டம் ஆடிட
மரங்கள் இருந்தது அன்று!
அந்தக் காக்கைகளே கூடு கட்டிட
மரங்களே இல்லாமல் போனது இன்று!
சாதி, மதம் பார்க்காமல்
உயிர் வாழ்ந்தது மனிதநேயம் அன்று!
அந்த சாதி, மதம் பார்த்தே
மடிந்து கொண்டிருக்கிறது மனிதநேயம் இன்று!
அன்று நடந்தவைகளைச்சொல்ல
மனம் கர்வம் கொள்கிறது!
இன்று நடப்பவைகளைச்சொல்லும்போது
மனம் சிறுமை கொள்கிறது!
எனினும்
அன்றும்,இன்றும், என்றும்
நன்றாகிட என் தாய்த்தமிழும்,
இறையருளும்,
புரிந்து நடந்திட வைத்திடும்
ஒரு நாள்... உலகை !
எனும் நம்பிக்கையில்...
- இரா. இராம்குமார், பண்ணைப்புரம், தேனி மாவட்டம்

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.