அன்றும் இன்றும் - 8
அன்றைக்குப் பக்கத்து ஊருக்கும்
கால்நடையா போனாங்க
இன்றைக்குப் பக்கத்துத் தெருவுக்கும்
கால் டாக்சில போறாங்க
அன்றைக்கு ஊருக்கொரு
கிணறு
இன்றைக்கு வீட்டுக்கொரு
ஆழ்துளைக் கிணறு
அன்றைக்கு மஞ்சுவிரட்டுக் களத்தில்
வரன் பார்த்தனர்
இன்றைக்கு இணையதளத்தில்
வரன் பார்க்கின்றனர்
அன்றைக்கு வேப்பங்குச்சி
இயற்கையா கெடச்சுச்சு
இன்றைக்கு வேப்பங்குச்சியும்
வியாபாரம் ஆகிப் போச்சு
அன்றைக்கு ஏர்பூட்டி உழுதனர்
இன்றைக்கு கார்ஓட்டி உழுகின்றனர்
அன்றைக்கு விவசாய நிலம்
இன்றைக்கு வெயில் காயும் நிலம்
அன்றைக்குக் குளங்கள்
இன்றைக்குக் குடியிருப்புத் தளங்கள்
அன்றைக்கு மின்சாரமிருக்கும்
வீடுகள் அரிது
இன்றைக்கு மின்சாரமில்லா
வீடுகள் அரிது
அன்றைக்குப் பெண்கள்
கர்ப்பம் சுமக்கும் பந்தம்
இன்றைக்கு அதற்கு
இல்லை நிர்ப்பந்தம்
- கவிபாரதி, உத்தமபாளையம்.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.