வசந்த விடியல் - 10
வானம் எனது வசப்பட வேண்டும்
வசந்தம் எனது திசை வர வேண்டும்
தானம் எனக்கு நிலைப்பட வேண்டாம்
தருமம் எனக்கு வசப்பட வேண்டும்
சிறகாய் எண்ணங்கள் விரிந்திட வேண்டும்
சிம்புட் பறவையாய் வானில் பறந்திட வேண்டும்
காற்றாய் சோலையில் மிதந்திட வேண்டும்
கார்முகிலாய்ப் பூமியில் பொழிந்திட வேண்டும்
மலராய் மலர்ந்து மணந்திட வேண்டும்
மருதாணியாய்ச் சிவந்து சிரித்திட வேண்டும்
சுடராய் வாழ்வில் ஒளிர்ந்திட வேண்டும்
சுற்றும் பூமியாய் இயங்கிட வேண்டும்
நிலவின் ஒளியாய்க் குளிர்ந்திட வேண்டும்
நிழலின் சுகமாய் இருந்திட வேண்டும்
நிலத்தின் பயனாய் விளைந்திட வேண்டும்
நீரின் சுவையாய் இனித்திட வேண்டும்
ஓடும் நதியாய் இருந்திட வேண்டும்
தேடும் கவியாய்த் திகழ்ந்திட வேண்டும்
பாடும் குயிலாய் இசைத்திட வேண்டும்
ஆசும் மயிலாய் சிலிர்த்திட வேண்டும்
இன்னொரு பிறவி இப்போதே வேண்டும்
என் தாய் வயிற்றில் மகனாய்ப் பிறந்திட வேண்டும்
இயற்கையையும் உறவையும் ரசித்திட வேண்டும் - என்றும்
இளமையாய் இருந்திட வேண்டும்.!
- கவிஞர் வீ. கோவிந்தசாமி, திருச்சிராப்பள்ளி.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.